"தவறு செய்வதிலும் பாரபட்சம் உண்டா?"
"நிச்சயமாக. ஒரு மாணவன் தவறு செய்தால், அவனைப் பெஞ்சு மீது நிறுத்திவைப்பார்கள். அதே அரசியல்வாதி தவறு செய்தால்? 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து, கடைசியில் விடுதலை செய்யும்!"
- பாலா சரவணன், சென்னை-22.
" 'சொன்னதைச் செய்வோம்' ஓ.கே! ஆனால், 'சொல்லாததையும் செய்வோம்' என்கிறார்களே, அது என்ன?"
"சொன்னதைச் செய்வோம் - மூன்று மணி நேர பவர் கட்.
சொல்லாததைச் செய்வோம் - கூடுதல் பவர்கட்!"
- என்.பழனிவேல், திருச்சி.
"ஒரு 'அடேங்கப்பா' பதில்?"
"1996-ம் ஆண்டு பிரதமராக இருந்தவர் தேவகவுடா. அப்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்துக்காக விமானப் படை விமானங்களைப் பயன்படுத்தி உள்ளார். அதற்காக, விமானப் படைக்கு 54 லட்சம் செலவாகி உள்ளது. இதைப் பலமுறை கேட்டும் தேவகவுடா செலுத்தாததால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது விமானப் படை. இது குறித்து தேவகவுடா சொல்லியிருக்கும் பதில் என்ன தெரியுமா? 'அப்போது நான் ஒன்றிணைந்த ஜனதா தளத்துக்காக தேர்தல் பிரசாரம் செய்தேன். ஆனால், இப்போது ஜனதா தளம் ஐந்து கட்சிகளாகப் பிளவுபட்டுவிட்டது. நான் இப்போது மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர். எனவே, அந்த விமான பாக்கியை நான் செலுத்த மாட்டேன்.' ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"
- எஸ்.சோபியா, மதுரை.'
|