தா.பாண்டியனிடம்...
"இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த தா.பாண்டியன் ஒருவரே போதும் என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே?"
"அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்குகிற முறை தெரியாது என்பது இதில் இருந்து தெரிகிறது. அப்படிப்பட்டவருக்கு இந்த ஒற்றை வரிப் பதிலே போதுமானது!"
செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ-விடம்...
"காங்கிரஸ் கட்சியில் சேர நீங்கள் போட்ட திட்டத்தை அறிந்துதான் உங்களை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கினார்களா?"
"கடந்த டிசம்பர் மாதமே, பகுஜன் சமாஜ் கட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்று அறிவித்துவிட்டேன். என்னைக் கட்சியில் இருந்து விடுவிக்குமாறு, கட்சியின் தேசியச் செயலாளர் மானேவிடம் வலியுறுத்தி வந்தேன். கடந்த சில மாதங்களாகவே கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகித்தான் இருந் தேன். நானாகவே கட்சியில் இருந்து விலகிவிட்ட பிறகு, இப்போது என்னை அந்தக் கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறுவது நல்ல ஜோக்!"
ராதாரவியிடம்...
"இலங்கைக்கு இந்தியாவில் இருந்து விமானங்கள் செல்கின்றன. கப்பல் படைத் தளபதி செல்கிறார், இந்திய கிரிக்கெட் அணி செல்கிறது. ஆனால், நான் படப்பிடிப்புக்குச் செல்வதில் மட்டும் குற்றம் கண்டுபிடிப்பது ஏன் என்கிறாரே அசின்?"
"அசின் படப்பிடிப்புக்காக இலங்கைக்குச் சென்று வந்தது தொடர்பாக திரைப்படக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துச் சங்கங்களும் இணைந்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்து வருவதால் அசின் தொடர்பான முடிவை அறிவிக்காமல் தள்ளி வைத்திருக்கிறோம். அதிரடியான எங்களது முடிவு விரைவில் வெளிவரும்!"
|