Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

''சமீபத்தில் மனதைத் தைத்த வரிகள்?''

 ''wikileaks என்ற இணையதளம் இராக் போரின்போது லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதைப்பற்றிய ரகசியத் தகவல் களைத்

தொடர்ந்து பகிரங்கப்படுத்துகிறது. அதேபோல குவான்டனாமோ சிறை, அபுகிரை சிறைக் கொடுமைகள், நடுக் கடல் கப்பல்களில் போர்க் கைதிகளை அடைத்து வதைக்கும், மிதக்கும் சிறைச்சாலைகள் போன்ற அமெரிக்காவின்அத்து மீறல்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறது. ஆனால், மனித உரிமை மீறல் கள் குறித்த இவ்வளவு தகவல்களையும் அமெரிக்கா பொருட்படுத்தவே இல்லை. குறிப்பாக, போருக்குச் சம்பந்தம் இல்லாத அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து, அமெரிக்கா அலட்டிக்கொள்வதே இல்லை. இது குறித்து எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான நோம்சாம்ஸ்கி எழுதிய வரிகள் இவை, 'தரையில் ஊர்ந்துகொண்டு இருக்கிற எறும்புகளைக் கொல்வது நமது நோக்கம் அல்ல; ஆனால், நாம் நடக்கிறபோது அவ்வாறு கொல்லப்படுகிற எறும்புகளைப்பற்றி நமக்கு அக்கறை கிடையாது என்பதைப் போன்றது இது.’ எறும்புகளுக்கும் மனித உயிர்களுக்குமான வித்தியாசங்கள் அழியும் காலமாகிவிட்டது. சாம்ஸ்கியின் வரிகள் உண்மையை உணர்த்த மட்டுமல்ல; இதயத்தை உலுக்கவும்தான்!''

- பே.சாக்ரடீஸ், மதுரை.

''தமிழக வளர்ச்சி திருப்தி அளிக்கிறதா?''

''அப்படி எல்லாம் எதுவும் இல்லையே! வெறுமனே இலவச டி.வி., கேஸ் சிலிண்டர் வாங்கினால் போதுமா? 2011 தேர்தலுக்கு இலவச செல்போன், இலவச லேப்டாப் எதிர்பார்த்தால் மட்டும் போதுமா? அதை வழங்குவதற்கு வசதியாக அரசு வருவாயை உயர்த்த வேண்டியது நம் கடமை அல்லவா? தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை `300 கோடி இலக்கு நிர்ணயித்து இருந்தது தமிழக அரசு. ஆனால், வெறுமனே `246 கோடிக்குத்தானே விற்பனை ஆனது. இப்படிப் பொறுப்பு இல்லாமல் இருந்தால் எப்படி? எனவே, இன்று முதல் உறுதி ஏற்போம். வரும் புத்தாண்டுக்காவது டாஸ்மாக் வருவாயை உயர்த்துவோம், இலவச செல்போன் பெறுவோம்!''

- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

நானே கேள்வி... நானே பதில்!

'' 'விலைவாசி உயர்வால் மக்களுக்குப் பாதிப்பு இல்லை’ என்கிறாரே முதல்வர்?''

''முன்பு 'கழகமே குடும்பம்’ என்று இருந்து, இப்போது 'குடும்பமே கழகம்’ என்று ஆனதைப்போல, 'விலைவாசி உயர்வால் தன் வீட்டு மக்களுக்குப் பாதிப்பு இல்லை’ என்ற அர்த்தத்தில் கூறி இருப்பார். 'நாட்டு மக்களுக்கு’ என்று நாம் தவறாகப் புரிந்துகொண்டு விட்டால் அதற்கு அவர் பொறுப்பு இல்லையே. பொறுத்திருந்து பாருங்கள், 'மக்கள் அனைவரும் ஆளுக்கொரு மந்திரி பதவி, சேனலுடன் வசதியாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்’ என்று அடுத்து அறிக்கை  விட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!''

- ம.பார்த்தசாரதி, சென்னை-53.

நானே கேள்வி... நானே பதில்!