மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

அப்பாவைப் புனிதப்படுத்துதல் - லக்ஷ்மி மணிவண்ணன்
வெளியீடு: அனன்யா, 8/37, பி.ஏ.ஒய்.நகர், புதுக்கோட்டை சாலை,
தஞ்சாவூர்-5.  பக்கங்கள்: 121  விலை: `50

விகடன் வரவேற்பறை

தமிழ் நவீனக் கவிஞர்களில் முக்கியமானவரான லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைத் தொகுப்பு. அகம்-புறம் என்கிற எல்லைகளைத் தகர்த்து, புறத்தில் நிகழும் நிகழ்வுகளை அகமனப் பதிவுகளோடு பதியும் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. 'உலக இலக்கியத்தில் திருக்குறளுக்கு இணையான இலக்கியம் இல்லை’ என்று முன்னுரையில் சொல்லும் மணிவண்ணன், தனது கவிதைகளையும் பொருள், இன்பம், அறம் என்றே பிரித்திருக்கிறார். பொருள் பகுப்பில் உள்ள கவிதைகள் சமூக நிகழ்வுகள் குறித்தும், இன்பம் பிரிவில் உள்ளவை காமம் மற்றும் காதல் குறித்தும் அறம் பகுப்பில் உள்ளவை எழுத்தாளனுக்கான சமூக அறம் குறித்தும் பேசுகின்றன. அறம் பிரிவில் உள்ள 'பராக் பராக்’, 'புத்தகத் திருவிழா’, 'அப்ரூவர் வந்திருக்கிறேன்...’ பகடி கவிதைகளுக்கான சரியான சான்றுகள் எனலாம்!

செத்தாழை  இயக்கம்: எஸ்.பிரசன்னா சுப்ரமணியன்

விகடன் வரவேற்பறை

தண்டவாளத்தில் காசை வைத்தால் ரயில் ஏறி இறங்கியதும் காசு காந்தமாகிவிடும் என்று நம்பும் பால்ய வயது நம் எல்லோருக்குமே இருந்திருக்கும். அப்படியான சிறுவர், சிறுமிக்கு இடையிலான பால்ய நட்பைச் சித்திரிக்கும் கதை. அறியாமையைக் 'காதல்’ எனக் காட்டும் போக்கில் இருந்து மாறுபட்டு, அதைக் குழந்தை நட்பாகவே கொண்டுவந்திருப்பது சிறப்பு. சிறுவன் மற்றும் சிறுமியின் நடிப்பு அபாரம். திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, படத் தொகுப்பு என அனைத்திலும் ஒரு தியேட்டர் சினிமாவுக்கான நேர்த்தியும், தரமும் மிளிர்கிறது!  

விளையாடு பாப்பா விளையாடு! http://www.smart-kit.com/

விகடன் வரவேற்பறை

விரைவாக யோசிக்கக் கற்றுக்கொடுக்கும் விளையாட்டுக்கள், அறிவியல், வரலாறு தொடர்பான க்விஸ் போட்டிகள், நினைவாற்றலை அதிகரிப்பது என குழந்தைகளின் அறிவுத் திறன் வளர்க்கும் தளம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல... பெரியவர்களையும் வசீகரிக்கும் தளம்!  

சோவியத் சிறுவர் கதைகள்! www.sovietbooks.blogspot.com

விகடன் வரவேற்பறை

 இலக்கிய ஆர்வலர்களின் வாசிப்பை வளப்படுத்தியதில் சோவியத் நாட்டு இலக்கியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதே போல் சோவியத் நாட்டு சிறுவர் கதைகளும் பலரின் பால்யகால நினைவுகளில் தவிர்க்க இயலாதவை. சோவியத் நாட்டு சிறுவர் கதைகளைத் தொகுத்து வழங்கும் இந்த வலைப்பூவில் கஃபூர் குல்யாம், ஏலிசேயிவா, ஸ்கோபிலிவா, நிக்கோலாய் நோசாவ் போன்றவர்களின் சுவாரஸ்யமான சிறுகதைகளும் இருக்கின்றன. சேனல், வீடியோ கேம்ஸ், இணையம் என்றே பழகிய சிறுவர்களை இந்தப் பக்கம் புரட்டச் சொல்லலாம்!

ஆடுகளம்  இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
வெளியீடு: சோனி மியூஸிக்  விலை: `99

விகடன் வரவேற்பறை

பதமாகத் துவங்கி கொட்டு மேளத்தில் விறுவிறுப்பு கூட்டி பரபரக்கவைக்கிறது 'யாத்தே யாத்தே’ பாடல். 'வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா... உன்னை வெயிலுக்குக் காட்டாம வளர்த்தாய்ங்களா?’ என தேவதை காதலி கிடைக்கப்பெற்றவனின் உற்சாகஉளறல்களைப் பட்டியலிடுகிறது, சினேகனின் வரிகள். எளிய தெம்மாங்குப் பாடலுக்கான வசீகரம், 'ஒத்த சொல்லாலே...’ பாடலில். 'போர்க்களம்’ பாடல் ரசனை ரகளை. அதிலும் கரகர மைக் செட் விழா கமிட்டியின் அறிவிப்புக்குப் பின், ஸ்டீரியோவில் எகிறும் யோகி பி-யின் கதறல் உதறல் ராப், குறும்புக் கலவை. சீரான தாளகதியில் தாலாட்டாக ஒலிக்கும் 'அய்யய்யோ...’ பாடல் முழுக்க சொக்கிச் சுழற்றும் எஸ்.பி.பி-யின் குரல், மதுக் கிண்ண தேன்! மதுரை மண்... ராப் ஜின்... இரண்டு களத்திலும் ஆடியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்!