''என் அப்பா, சித்தப்பா இருவருமே சினிமா படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள். ஆனால், மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட எங்களை ஷூட்டிங் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், கல்லூரிப் படிப்பு தந்த தைரியத்தில் நானும் என் தங்கையும் ஜெயலலிதா ஹீரோயினாக நடித்துக்கொண்டு இருந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் ரகசியமாகச் சென்றுவிட்டோம். கறுப்பு சம்கீ புடவையில் ஆப்பிள் நிறத்தில் தகதகவென்று ஜொலித்துக்கொண்டு இருந்தார் ஜெயலலிதா. அந்த இடத்தில் எங்களைப் பார்த்த அப்பா, சித்தப்பாவின் ஆச்சர்யம் ப்ளஸ் கோபம் கலந்த பார்வைகளைத் தவிர்த்துவிட்டு, 'காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்' என்று சொல்லி ஜெயலலிதாவுடன் அரட்டையடிக்கத் துவங்கிவிட்டோம்.
ஆனால், எங்களை அறிந்த சில அசிஸ்டென்ட் டைரக்டர்கள் விழுந்து விழுந்து எங்களைக் கவனிப்பதைக் கவனித்துவிட்டார் ஜெயலலிதா. வேறுவழி இல்லாமல் எங்களை அவரிடம் 'தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகள்' என்று அறிமுகப்படுத்தினார்கள் அப்பாவும் சித்தப்பாவும்.
உடனே, முன்னைக்காட்டிலும் தைரியமாக அடுத்த அரட்டை செஷனைத் துவக்கினோம். கிளம்பும்போது ஜெயலலிதா அவர்கள் செல்லமாக எங்கள் கன்னம் திருகி, 'ஸ்வீட் கேர்ள்ஸ்!' என்று கூற... ஜென்ம சாபல்யம் அடைந்த திருப்தி எங்களுக்கு. அப்பாவும்சித்தப்பா வும் சிரித்தபடி எங்களை காரில் திருப்பி அனுப்பினார்கள்.
(பின் குறிப்பு: அப்பா - வி.ராமஸ்வாமி, சித்தப்பா - முக்தா சீனிவாசன், சினிமா - சூரியகாந்தி).''
-டி.வித்யா, சென்னை-14.
|