இ-மெயிலில் வந்த கடிதம் இது! 'சார், என் மனைவிக்கு நான் எந்தக் குறையும் வைக்கலை. அவளும் நல்லாத்தான் இருக்கா. ஆனா, நான் ஆசையா இஷ்டப்பட்டுக் கூப்பிடுறப்பல்லாம் 'நோ' சொல்றா. காரணமும் சொல்ல மாட்றா. இதனாலேயே எனக்கு பிளட் பிரஷர் வந்திடுச்சு. உங்ககிட்ட கவுன்சிலிங்குக்கு அழைச்சிட்டு வரலாமா?'
செக்ஸ் விஷயத்தில் ஒருவர் கேட்டு இன்னொருவர் மறுக்கும்போது உருவாகும் கோபம் நெருப்பு மாதிரி சுடும். அவ்வளவு வெப்பமாக இருக்கும்.
கணவனோ, மனைவியோ ஒருவர் உறவுக்கு அழைக்கும்போது இன்னொருவர் மறுப்பதற்கு 99 சதவிகிதம் செக்ஸ் காரணமாக இருப்பதில்லை. அதாவது, செக்ஸை மறுத்தாலும் காரணம் செக்ஸ் கிடையாது. இருவருக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட புரிந்துகொள்ளாமைதான் காரணமாக இருக்கும். அந்தக் கோபத்தைக் காட்டும் தருணமாக செக்ஸ் உறவைப் பயன்படுத்துவார்கள்.
இது தவிர, நேரம், அசதி, சோர்வு, தூக்கம், துர்நாற்றம், உடல் நலமின்மைகூடக் காரணமாக இருக்கலாம். 'ரெண்டு புள்ளையாயிட்டு, இனிமே என்ன?' என்று குழந்தைகளைக் காரணம் காட்டி சில பெண்கள் தவிர்க்கலாம். எதுவாக இருந்தாலும், ஒருவர் அழைக்கும்போது மறுப்பது, கணவன் - மனைவி என்கிற உறவையே டேமேஜ் செய்துவிடும்.
தான் தவிர்க்கப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியாத கணவனோ, மனைவியோ, தாழ்வு மனப்பான்மை பள்ளத்தில் சிக்கிக்கொள்வர். 'தன்னைப் பிடிக்கவில்லையோ?' என்கிற எண்ணம் மேலும் மேலும் மன அழுத்தத்தை உண்டாக்கும். இதன் வெளிப்பாடுகள் கோபம், விரக்தியாக உருமாறும்.
இப்படி மறுக்கப்பட்டவர்களின் மன வலி \ மறுப்பவர் மேல் கோப அம்புகளாகப் பாயும். ஒவ்வொரு நடவடிக்கையையும் பூதக் கண்ணாடி வைத்து, தப்பு கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இல்லற உறவில் சந்தோஷம் குடியிருந்த இடத்தில், சந்தேகம் வந்து குந்திக்கொள்ளும். கணவன் - மனைவி இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை நொண்டியடிக்கும். நடத்தையில் சந்தேகம், கை நீட்டல், வார்த்தைகளால் வலி ஏற்றுவது எல்லாம் அரங்கேறும்.
இவர்களுக்கு நமது அட்வைஸ்...
மனைவி தனது கணவனிடம் செக்ஸைத் தவிர்த்தால் - அவர் செக்ஸைத் தவிர்க்கிறாரே தவிர, உங்களையே தவிர்க்கிறார் என்று அர்த்தம் இல்லை!
நோ சொல்வதற்கு என்ன காரணம் என்பதைச் சுமுகமாகப் பேசித் தெரிந்துகொள்ள வேண்டும்!
ஒருவேளை செக்ஸ் திருப்தியாகக் கிடைக்காததால்தான் மறுப்பதாகச் சொன்னால், மருத்துவரைப் பார்த்து ஆலோசியுங்கள்!
நோ சொல்வது எளிது. ஆனால், அதனால் மற்றவருக்கு ஏற்படும் மனவலியை மறுப்பவர் புரிந்துகொள்ள வேண்டும்.
பல ஆண்களுக்கு அவர்களின் சுய மதிப்பீடு என்பது சம்பாதிக்கும் திறனையும், செக்ஸ் ஆற்றலையும் சார்ந்தே உள்ளது. இதில் எதைக் காயப்படுத்தினாலும் நொந்துபோய்விடுவான்.
நோ சொல்லும்போதே என்ன காரணம் என்பதைச் சொல்லிவிடுவது நல்லது. மனம்விட்டுப் பேசினால், எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடலாம்!
கேள்வித் தாளைப்
பார்த்தவுடன்
மறந்துபோகும் பதில்களாய்
உன் மீதான
என் காமம்!
- கட்டளை ஜெயா
|