ஹெர்த்தா முல்லர். இந்த ஜெர்மானியப் பெண்ணுக்குத்தான் இலக்கியத்துக்கான இந்த வருட நோபல் விருது. இவர் ஜெர்மானியராக இருந்தாலும், ருமானியாவில் பிறந்து வளர்ந்தவர். ஹெர்த்தாவின் எழுத்துக்கள் ருமானியாவின் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியாக இருந்த சிசெஸ்கியூ கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளைக் கருப்பொருளாகக்கொண்டவை.
ருமானியாவில் வாழ்ந்தாலும், ஹெர்த்தா முல்லர் தன் தாய் மொழியான ஜெர்மனியில்தான் எழுதினார். அவரது புத்தகங்களை சிசெஸ்கியூவின் அரசாங்கம் தடை செய்தது. அடிக்கடி தன்னுடைய ரகசிய போலீஸை அனுப்பி ஹெர்த்தாவைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டிக்கொண்டே இருந்தார் சிசெஸ்கியூ. எழுதுவதை நிறுத்து என்பதுதான் ஒரே நிபந்தனை.
அப்படியானால் நான் ஜெர்மனிக்குக் கிளம்புகிறேன்; ஆளை விடு என்றார் ஹெர்த்தா. அதற்கும் அனுமதி கொடுக்கவில்லை. 'இங்கேயே இருக்க வேண்டும்; எழுதவும் கூடாது.' இதுவே சிசெஸ்கியூவின் கட்டளை. இந்தப் பெண்ணை ஜெர்மனிக்கு அனுப்பினால், இவளால் தன்னுடைய ஆட்சியின் லட்சணம், அங்கே நடந்த படுகொலைகள் எல்லாம் ஜெர்மனி வழியாக உலகம் பூராவும் பரவிவிடும் என்பது சிசெஸ்கியூவின் கவலை.
ஹெர்த்தாவின் அத்தனை நண்பர்களும் சிசெஸ்கியூவினால் கொல்லப்பட்டார்கள். ஆனாலும் ஹெர்த்தா எழுதிக்கொண்டே இருந்தார். நேரடியாக எழுத முடியாததால், சூசகமாக எழுதினார். இருந்தாலும், மரண அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில் 1987-ல் தன் கணவருடன் ருமானியாவைவிட்டு வெளியேறி, இன்று வரை ஜெர்மனியில் வாழ்கிறார்.
எனக்கு ஹெர்த்தாவின் எழுத்து அறிமுகமானது, 1998-ல் அவருடைய நாவலுக்கு டப்ளின் பரிசு கிடைத்தபோதுதான். அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரத்தின் முனிசிபாலிட்டிதான் இந்தப் பரிசைத் தருகிறது. (நம்மூர் முனிசிபாலிட்டிகள் என்ன செய்கின்றன என்று உங்களுக்குத் தெரியும்).
டப்ளின் பரிசு ஒன்றும் நம் ஊர் கலைமாமணி பரிசு போன்றதல்ல. டப்ளின் பரிசு பெற்றவர்கள் பலருக்கு அதற்குப் பிறகு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு நாவலுக்கு 61 லட்ச ரூபாய். உலகிலேயே ஒரு நாவலுக்குக் கொடுக்கப்படும் பெரிய பரிசுத் தொகை இதுதான். மிகக் கடுமையான பரிசீலனைக்குப் பிறகு வழங்கப்படும் இந்தப் பரிசுக்கு, நம் தமிழ் எழுத்தாளர்களும் போட்டியிடலாம். நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஹெர்த்தா முல்லருக்கு 1998-ல் டப்ளின் பரிசு கிடைத்தது. அவருடைய சிறுகதைத் தொகுதியில் Funeral Sermon என்று ஒரு கதை உண்டு. அதில் ஓர் இடம்...
கதாநாயகியின் அப்பா இறந்துகிடக்கிறார். அப்பா ருமானியாவின் ராணுவத்தில் இருந்தவர். அப்போது அங்கே வரும் அப்பாவின் நண்பர் நாயகியிடம் சொல்கிறார். 'நானும் உன் அப்பாவும் இன்னும் மூன்று சிப்பாய்களுமாகச் சேர்ந்து ஒரு ரஷ்யப் பெண்ணைக் கற்பழித்தோம். உன் அப்பன் ஒரு மோசமான ஆள். எல்லோரும் கற்பழித்த பிறகு ஒரு நூல்கோலை எடுத்து அவளுடைய பிறப்பு உறுப்பில் செருகினார். சே... சே...'
இப்போது புரிகிறதா, சிசெஸ்கியூ ஏன் ஹெர்த்தாவின் மேல் அவ்வளவு காட்டமாக இருந்தார் என்று? அதாவது, இந்திய ராணுவம் இலங்கைக்கு அமைதிப் படையாகச் சென்றபோது, அதில் சில சிப்பாய்கள் அங்கே உள்ள பெண்களை வன்கலவி செய்தனர் என்று எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்... என்ன ஆகும்? அதே கதைதான். சிசெஸ்கியூவின் ராணுவமும், போலீசும் மக்களை என்னவெல்லாம் செய்தன என்பதுதான் ஹெர்த்தாவின் எழுத்தின் அடிநாதம்!
|