ஆனந்த விகடன் 12.08.09 இதழின் 'நிருபன் டைரி' பகுதியில் வெளியான கட்டுரை சென்னை புறநகர் காவல் துறை ஆணையர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டைக் குறிப்பிடுவது போல் அமைந்திருப்பதாகப் பரவலான கருத்து எழுந் தது. அது நமக்கும் தெரியவந்தது. மேற்கொண்டு நமக்கு வந்த தகவல்கள், 'சமூக விரோதச் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தொடங்கி, பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் விரைந்து தீர்வு அளிப்பது வரையில் கடந்த 24 ஆண்டுகளாக, தொடர்ந்து சட்டம் - ஒழுங்குப் பிரிவில் திறம்படப் பணியாற்றி வருகிறார் ஜாங்கிட்.தென்மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் சாதிக் கலவரங்களைத் திறமையாகக் கையாண்டு அமைதி ஏற்படுத்தினார். இதன் மூலம் அரசு மற்றும் பொதுமக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்' என்றும் தெரிவித்தன. குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இடம்பெற்ற போலீஸ் அதிகாரி ஜாங்கிட் அல்ல என்பதோடு, நமது நிருபர்களின் அனுபவத் தொகுப்பாக வெளியான அந்தப் பகுதியின் மூலம் அவரது மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறோம்!
|