யாசித்துப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. அது ஏதோ பிச்சைப் பொருளாக வழங்கப்பட்டது. ஆனால், தங்கள் உரிமைகளை அடித்துப் பறித்தால் மட்டும்தான் முழுமையானதாகப் பெற முடியும் என்பதுதான் இன்றைய யதார்த்தம். எனவேதான், எதிர்ப்பு என்னுடைய ரத்தம் கலந்த குணமானது.
ஆடுகள் எல்லாவற்றுக்கும் தலையாட்டும். சிங்கம் சீறும். இதை உன்னிப்பாகக் கவனித்த அம்பேத்கர் சொன்னார், 'ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள்... சிங்கங்களை அல்ல'. தலையாட்டிப் பொம்மைகளுக்கு இந்தச் சமூகத்தில் எந்த மரியாதையும் கிடையாது என்பதை நன்கு உணர்ந்தவன் நான். 'நன்றி கொன்றவர்களால் நீ ஒதுக்கப்பட்டாலும், உனக்கு உரிய சிறப்பு மறுக்கப்பட்டாலும் திருப்பித் தாக்கிடும் உன் போர்க் குணத்தை நழுவவிடாதே' என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் அம்பேத்கர் சொன்னதுதான் என் ஆதியும் அந்தமும்.
18 ஆண்டுகளுக்கு முன்னால் சிறு இயக்கமாகத் தொடங்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள், இன்று தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது. இதற்கு வேரும் விழுதுமாக அமைந்தவை அதன் எதிர்ப்பு உணர்வுதான். மகாராஷ்டிரா மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்கக் கூடாது என்று பால்தாக்கரே மிரட்டிக்கொண்டு இருந்தார். அதைக் கண்டித்து மதுரை ரயில் நிலையத்தில் மறியல் தொடங்கினேன். திடீரென்று அவசியமே இல்லாமல் போலீஸ் எங்களது தோழர்கள் மீது தடியடி நடத்தியது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 50 பேர் ரத்தம் ஒழுக உதைக்கப்பட்டார்கள். இதைப் பார்த்த எங்களது தொண்டர்கள் உணர்ச்சியால் போலீஸின் சட்டையைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். அநியாய அக்கிரமத்தை கலர் சட்டை செய்தால் என்ன... காக்கிச் சட்டை செய்தால் என்ன? அடித்தால் திருப்பி அடிக்கலாம் என்பதை மதுரை வீதியில் நிரூபித்தோம். அதுவரை போலீஸைப் பார்த்தால் பயந்து நடுங்கிய சமூகத்தில், சாமி என்று அழைத்த மக்கள் முன்னால் பதிலடிதான் நம்முடைய மொழி என்று நிரூபித்தோம்.
விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்ப்பலை ஆதிக்கச் சாதிகளுக்கு எதிராகவும் அரச வன்முறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழ ஆரம்பித்த பிறகுதான் அடக்குமுறைகள் கொஞ்சம் அடங்க ஆரம்பித்தன. நீ உன்னுடைய கோபத்தை ஓர் இடத்தில் காண்பித்தால், அது அங்கு மட்டுமல்ல, அதைப் போலவே அநியாயம் நடக்கும் மற்ற இடங்களையும் சேர்த்தே மாற்றுகிறது. மதுரை கரும்பாளையில் தலித் சமூகத்துக்குச் சேர வேண்டிய நிலத்தை 25 ஆண்டுகளாக தனியார் ஒருவர் தன்வசப்படுத்தி வைத்திருந்தார். அதைப் போராடிப் பறித்த பிறகு, இது போல் வைத்திருந்த ஏழெட்டு மனிதர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அமைதியாக விட்டு |