'நியான்டர்தால் மனிதனின் எச்ச மிச்சங்கள் 400 கோடி ஆண்டுகள் கடந்தும் மனிதனின் உடலில் தங்கியிருப்பதற்குக் காரணம் நம் உடம்பில் இருக்கும் ரைபோசோம்' என்பதுதான், வெங்கியின் உழைப்பு உலகுக்குச் சொல்லும் சேதி. 'ஒரு மனிதனின் உயரம், நிறம், எடை, உடல்வாகு மட்டுமல்லாமல், தாத்தாவின் ஆஸ்துமா பேத்திக்கு வருவதற்கும்கூட இந்த ரைபோசோம் தாங்கியிருக்கும் செய்திகள்தான் காரணம். மனிதனின் செல்களுக்குள் புரோட்டீன் தயாரிக்கும் பணிகள்தான் இந்த ரைபோசோமின் பணி. அதுபோக இந்த பரம்பரைச் செய்திகளைக் கடத்துவதை பார்ட் டைமாகச் செய்கிறது ரைபோசோம்.
இந்த ரைபோசோம்களின் முழு அமைப்பைத் தெரிந்துகொண்டால், நோய்கள் உண்டாக்கும் குணங்களைச் சமாளிக்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதை ஆராயலாம். அதற்கு ராமகிருஷ்ணனின் இந்தக் கண்டுபிடிப்புகள் பிள்ளையார் சுழி.
தனக்கு நோபல் பரிசு கிடைத்த செய்தியை நம்பாமல் ராமகிருஷ்ணன் முரண்டுபிடித்த கதை சுவாரஸ்யமானது. ''நான் இப்போது இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் எம்.ஆர்.சி. என்ற அமைப்பில் பணியாற்றுகிறேன். அந்த வளாகத்துக்குள் சைக்கிளைத்தான் பயன்படுத்த வேண்டும். அன்றைய தினம் டயர் பஞ்சர் ஆகிவிட்டதால், என் சைக்கிளைத் தள்ளிக்கொண்டுதான் ஆபீசுக்குப் போனேன். வியர்த்து விறுவிறுக்க கொஞ்சம் எரிச்சலுடன் இருந்தவனை போன் அழைத்தது. 'ஸ்வீடீஷ் அகாடமியில் இருந்து பேசுகிறேன். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!' என்றார் மறுமுனையில் பேசிய பெண். 'இது விளையாடும் நேரம் இல்லை' என்று அந்தப் பெண்மணியைக் கடிந்துகொண்டேன். ஏனெனில், என் நண்பர்கள் சிலர் இது போல அவ்வப்போது விளையாடுவார்கள். ஆனால், அந்தப் பெண்மணியோ கோபப்படாமல், 'நீங்கள் ஸ்வீடீஷ் அகாடமியின் தலைவரிடம் பேசுங்கள்!' என்று போனை அவரிடம் கொடுத்தார். அவரும் அதே ரீதியில் பேச, 'சார்... நீங்க ஸ்வீடீஷ் ஸ்லாங்கோடு இங்கிலீஷ் நல்லாப் பேசுறீங்க' என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். அதன் பிறகு எனக்கு அறிமுகமான ஸ்வீடீஷ் அகாடமி அதிகாரிகள் விஷயத்தைச் சொன்னபோதுதான் நான் நம்பினேன்!' என்கிறார் ராமகிருஷ்ணன்.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் அழைப்புகள் குவிந்துகொண்டு இருப்பதால், அடுத்த ஒரு வருடத்துக்கான பயணத் திட்டங்களை வகுப்பதில் வெங்கி இப்போ பிஸி.
இது ரைபோசோமைக் காட்டிலும் கஷ்டமான வேலையாச்சே!
|