முதுமலைக்கு நான் சென்றிருந்த சமயம், மழைத் தூறலின் சிலு சிலுப்பும் குளிரும் உள்ளே உள்ளே ஊடுருவி ஊசியைச் சொருகியது. 'கேமரா லென்ஸைப் பனி மூடிக்குது... கஷ்டம்தான்!'' என்று முணுமுணுத் தார் போட்டோ கார்த்தி. குளிரையும் பொருட்படுத்தாது நாங்கள் கிளம்பி வந்ததற்குக் காரணம், ரதி!
முதுமலையில் ரதிக்கு செல்லப் பெயர் 'அத்தை'!
யானையோ, பூனையோ ரதியைப் பார்த்தால், பார்த்த இடத்திலேயே அட்டென்ஷன்தான். ஆனால், எத்தனைக்கு எத்தனை மிரட்டல் மோகி னியோ, அவ்வளவு பாசக்காரி. தனது 10 குழந்தைகளுடன், ரதி பாசமாக, பாராட்டிச் சீராட்டி வளர்த்த குழந்தைகள் 25-க்கும் மேல். இப்போதும் 75 வயது ரதிதான், அந்த யானைகள் முகாமின் சூப்பர் ஸ்டார்!
ஒரு தாய் யானை குட்டி போட்டால், அதற்குத் துணையாக இன்னொரு பெண் யானையை அதனுடன் சேர்த்துவைப்பார்கள். இரண்டு யானை களுமாக அந்தக் குட்டியை வளர்க்கும். துணை சேரும் யானைக்கு 'அத்தை யானை' என்று பெயர். எவரையும் குட்டியின் அருகில் நெருங்கவிடாமல், தாயைவிட அக்கறையோடு பாதுகாக்கும்.
|