கொக்கிரக்குளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசீர்வாதம், ஆர்.ஓ.மஜாட்டோ, தெரிந்தார்க்கினியன், திட்டக்குடி அனீப், தர்மபுரி வெங்கடேசன்... இதெல்லாம் நான் வாசிக்கும் பத்திரிகை யாளர்களின் பெயர்கள் அல்ல. என் பெயர்கள்தான். வேறு வேறு பத்திரிகைகளில் விதவிதமான பெயர் களில் வலம் வந்தவன், கடைசியாக முரசொலியில் சின்னக் குத்தூசியாக அடைக்கலமாகி இருக்கிறேன். யாராவது எனக்கு போன் செய்தால், 'தியாகராசன்.. வணக்கம்' என்றுதான் கூறுகிறேன். ஆனால், என்னை யாரும் அப்படி அழைப்பதில்லை. அனைவருக்கும் நான் சின்னக் குத்தூசிதான்.
பெரியாரின் தளபதியாக இருந்த குருசாமி, 'விடுதலை'யில் குத்தூசி என்ற பெயரில் தினந்தோறும் பலசரக்கு மூட்டை எழுதுவார். அவரின் எழுத்தால் கவரப்பட்ட நான், சின்னக் குத்தூசியாக என்னை மாற்றிக்கொண்டேன். புனைபெயரே இயற்பெயரை மறைக்கும் அளவுக்குப் பத்திரிகைகள் மீது மோகம் கொண்டவனாக நான் வளரக் காரணம், எங்கள் திருவாரூர் குளத்தங்கரை.
என் அம்மா, பெரிய வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் வேலை பார்த்து வந்தார்கள். அவர்களுடன் அந்தந்த வீடுகளுக்கு நானும் போய் வருவேன். அவர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது நான் அங்கே இருக்கும் பத்திரிகைகளைப் படிப்பேன். ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் ஆகிய மூன்றும் அவர்களின் வீடுகளில் இருக்கும். அந்த வீடுகளுக்குப் பத்திரிகைகளை வாங்கி வர கடைக்கு என்னைத்தான் அனுப்புவார்கள். பத்திரிகைகளை வாங்கி வரும்போது திருவாரூர் குளத்தங்கரை படித்துறையில் வைத்துப் படித்து விட்டுத்தான் கொண்டுபோய்க் கொடுப்பேன்.
இந்த ஆர்வத்தால் சிறுவர் இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். பாப்பா மலர், டமாரம், மிட்டாய், அணில் என்று அப்போது வந்த அத்தனை பத்திரிகைகளுக்கும் எழுதினேன். கண்ணதாசனின் தென்றல், ஜீவாவின் தாமரை இதழ்களில் எழுதி இருக்கிறேன். நாரண துரைக்கண்ணனின் பிரசண்ட விகடனில் 'ஓடும் ரயிலிலே' என்று 26 வாரத் தொடர்கதை எழுதினேன். அது 1956-ம் ஆண்டாக இருக்கலாம். 50 ஆண்டுகளைக் கடந்த பிறகும் தாள்களைக் காதலித்துக்கொண்டுதான் இருக்கிறது எனது பேனா!
பெரியார்தான் என்னை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடம் வாங்கிக் கொடுத்துப் படிக்க வைத்தவர். பாடப் புத்தகங்கள் வாங்கித் தந்தவர் அன்னை மணியம்மை. கொரடாச்சேரியில் நான் பள்ளி ஆசிரியராக இருந்தபோது, எழுத்தாளர் பி.சி.கணேசன் பேராவூரணியில் தலைமை ஆசிரியராக இருந்தார். அவரது நண்பர்கள் அனைவரும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு 'மாதவி' பத்திரிகையை ஆரம்பித்தார்கள். அதன் ஆசிரியராக நான்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல, வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போனேன். இரண்டரை ஆண்டுகள் வந்தது மாதவி. திடீரென்று நின்றது. மறுபடி வாத்தியார் வேலை.
|