'நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்!' - தான் இயக்கிய 'போக்கிரி' படத்துக்காக பிரபுதேவாவைத்த இந்த அதிரடி வசனம் செம ஹிட். 'போக்கிரி'யின் ஹிந்திப் பதிப்பான 'வான்டட்' படம் தடாலடி ஹிட். ஆனால், அதைக் காட்டிலும் பிரபுதேவா 'மோஸ்ட் வான்டட்' அவரது மனைவி ரம்லத்துக்கும், அன்புத் தோழி நயன்தாராவுக்கும்தான்!
'பொது நிகழ்ச்சிக்கு என் கணவரும் நயன்தாராவும் சேர்ந்து வந்தால் அடிப்பேன்!' என்று ரம்லத் சொன்னதாக ஒரு செய்தி. 'வந்து காட்டுகிறேன். அடித்துப் பார்க்கட்டும். நான் சும்மா இருக்க மாட்டேன். சட்டம் - ஒழுங்கைக் காவல் துறை பார்த்துக்கொள்ளும்!' என்று நயன்தாரா பதிலடி கொடுத்ததாகவும் ஒரு விஷயம் அச்சானது.
உண்மையில், பிரபுதேவா - நயன்தாரா காதல்பற்றி ஊடகங்களில் எத்தனையோ முறை செய்திகள் வந்தபோதும், கணவரிடம் நேரடியாக ரம்லத் கேட்டது இல்லை. ஆனந்த விகடனில் வெளியான ஒரு கட்டுரைக்கு, 'அப்படி எல்லாம் எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை' என்று மறுப்பு அறிக்கை கொடுப்பார். ஆனால், பிரபுதேவா வீட்டுக்கு வரும்போதெல்லாம், எதுவும் பேசாமல் கண்ணீர் மல்க நிற்பார்.
'அடுத்த பிரபுதேவா யார்?' என்ற நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு, 'பிரபுதேவாவுடன் நயன்தாரா மேடையில் தோன்றுவார்' என்று வதந்தி கிளம்ப... ரம்லத் அப்போதும் அமைதியாகத்தான் இருந்தார். மகனைக் கணவருடன் அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார். நயன்தாரா வரவில்லை!
ஆனால், 'கமல் 50' தொடர்பான விழாவுக்கு நிச்சயம் பிரபுதேவாவுடன் நயன்தாராவும் மேடைக்கு வருவார் என்ற பேச்சு கிளம்பவும், ரம்லத் பொறுமை எல்லை மீறியது என்கிறார்கள். அதுதான், 'அடிப்பேன்!' என்று வெளிப்படையாக வெடித்ததாகக் கூறுகிறார்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒருநாள் முன்பாகவே, மும்பையில் இருந்து சென்னை வந்துவிட்டார் பிரபுதேவா. லேசான உடல் சோர்வுடன் இருந்தவருக்குக் கஷாயம் வைத்துக் கொடுத்திருக்கிறார் ரம்லத். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு, சின்ன பகல் தூக்கம் போட்டார். எழுந்தவுடன் கமலுடனான ஒரு ரிகர்சலுக்குக் கிளம்பினார். மனைவியையும் மகனையும் உடன் அழைத்தாராம். ஆனால், இருவரும் வர மறுத்து விட்டார்கள்!
'நயன்தாரா பற்றி நீ கோபமாகச் சொன்னதாக பேப்பரில் வந்தது நிஜம்தானா?' என்று அவரும் கேட்கவில்லை. 'ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்குப் பறந்து வந்து 'வான்டட்' படத்தின் பிரிவியூவில் நயன்தாரா உங்களோடு ஒட்டி உறவாடினாராமே?' என்று ரம்லத்தும் விசாரிக்கவில்லை.
''இதுதான் அந்தத் தம்பதியின் பிளஸ்சும் மைனசும்! உள்ளுக்குள் ஆயிரம் குமுறல்கள் இருந்தாலும், நேருக்கு நேராக அதைப் பேசிக்கொண்டால் ரசாபாசம் ஆகிவிடும் என்று இருவருமே தள்ளிப்போடுகிறார்கள். எப்போது எப்படி வெடிக்குமோ?'' என்கிறார் அந்தக் குடும்பத்துக்கு நெருக்கமான நலம் விரும்பி ஒருவர்.
|