அருணாசலம் ஆகிய பெயர்களில் முகாம்கள். 600 ஏக்கர் நிலத்தைச் சமப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள டென்ட் கூடாரங்கள் ஒரு வாரம் மட்டும்தான் தாங்கக்கூடியவை என்பது அனைவருக்கும் தெரியும். லட்சக்கணக்கான மக்களுக்குக் கூடாரங்கள், சாப்பாடு, மருத்துவம் மற்றும் வசதிகள் தரும் பொறுப்பு ஐ.நா. அமைப்புக்கு இருக்கிறதா அல்லது இலங்கை அரசாங்கத்துக்கா என்ற விவாதமே இன்று வரை முடிந்தபாடில்லை. செம்மண் தரை வெயிலில் கொதிக்கிறது. மழையில் சகதியாகிறது. கழிவறை இருக்கிறது. அது போய்ச் சேரும் வசதிகள் இல்லாததால், அத்தனை முகாம்களும் மலஜலத்தால் நாற்றமெடுத்து, நோய்களை விதைத்துக்கொண்டு இருக்கின்றன.
ஏற்கெனவே பொருளாதாரத் தடையால் தகிக்கும் பூமியாக இருந்தது ஈழம். அரிசி, பருப்பு, மருந்துகள், தடுப்பூசிகள், ஆன்டிபயாட்டிக், வலிநிவாரணிகள் எதுவும் அங்கு கிடைப்பது இல்லை. முக்கியத் தொழிலாக அதுவரை இருந்தது விவசாயமும் மீன்பிடித் தொழிலும். இப்போது கடலோரம் சும்மாகூடப் போக முடியாது. மீன்பிடித் தொழில் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை மொத்தமாக போர் கீறிப் போட்டுச் சிதைத்துள்ளது.
மின்சாரம் கிடையாது. பால் கிடையாது. ரேடியோ கிடையாது. பேட்டரி கிடையாது எனத் துக்கங்களை மட்டுமே கையிருப்பாக வைத்திருக்கிறது ஈழத் தமிழினம்.
அடுத்த மாதம் மழைக் காலம் ஆரம்பிக்க இருக்கிறது. இரண்டு நாள் மழைக்கே சகதிக்காடாக மாறிய முகாம்கள், அக்டோபரில் மொத்தமாக ரணகளமாகும்.
நம்முடைய கைக்கு ஒரு ஈழத் தமிழ்ச் சகோதரியின் கடிதம் கிடைத்தது. அவள் எழுதி இருந்தாள்... 'ஒற்றுமை இல்லாத எந்த இனத்துக்கும் அடிமை வாழ்க்கைதான் கடவுளால் அருளப்படும் தண்டனை!'
|