விடிவதற்கு முன் எழுந்து மலையில் ஓட்டம், உடற்பயிற்சிகள், ஆயுதப் பயிற்சி, அறிவியல் வகுப்புகள் என்று இவர்களின் ஒவ்வொரு நாளும் டிஃபென்ஸ் அகாடமியின் ஸ்டைலில் இருப்பதுதான் கவலைக்குரிய விஷயம்.
இப்படிப் பயிற்சி பெறுபவர்கள் அனைவருக்கும் உடனே வேலைகள் கொடுக்கப்படுவதில்லை. பயிற்சி முடித்ததும், 'சொல்லி அனுப்புறோம்' என்று அனுப்பிவைக்கப்படுகிறார்கள். தேவைப்படும்போது மட்டும் பயன்படும் இவர்களுக்கு 'ஸ்லீப்பர்' என்று பெயர். இப்படிப் பல ஸ்லீப்பர்கள் டெல்லி, மும்பை எனப் பெருநகரங்களில் அமைதியாக வசித்து வருகிறார்கள்.
இந்தியாவுக்குள் அனுப்பப்படும் ஒவ்வொரு டீமுக்கும் தனித்தனி அஜென்டாக்கள் வழங்கப்படும். சில ஆண்டுகளுக்கு முன் ஹர்கத்துல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் க்வாமன் அயூப் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் இருந்து தான் வந்த நோக்கத்தை அவர் சொன்னபோது, இந்திய உளவுத் துறை அதிர்ந்தது. 'இந்தியாவில் இருக்கும் அமெரிக்க, இஸ்ரேலியர்களைக் கொலை செய்ய நாங்கள் வந்துள்ளோம். இரண்டு நாட்டுத் தூதர்களையும் தீர்த்துக்கட்டுவோம்'' என்ற அயூப், அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் அதிகமாகத் தங்கும் ஓட்டல்களின் பட்டியலை வைத்திருந்தார். இன்று மும்பையில் நடந்த தாக்குதலில் நாரிமன் ஹவுஸ் குறிவைக்கப்பட்டதன் பின்னணி இதுதான். யூதர்களின் முக்கிய அமைப்பான சபாக், இந்த நாரிமன் ஹவுஸின் சில தளங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வருகிறது. எனவே, இந்த இடம் திட்டமிட்டுக் குறிவைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய முஜாஹிதீன் என்று செயல்பட்டு வந்த அமைப்பு, டெக்கான் முஜாஹிதீன் என்று பெயரை மாற்றிக்கொண்டதன் பின்னணி தமிழ்நாட்டுக்கும் அதிர்ச்சியானது. அதாவது, காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து 'ஆசாத் காஷ்மீர்' என்று சொல்லி வந்தவர்கள், அதைப் போல ஹைதராபாத்தும் சுதந்திரமான தனி நாடு என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம், இந்தியாவுடன் தனது பகுதியை இணைத்துக்கொள்ள முதலில் சம்மதிக்கவில்லை என்றதும், இந்தியா தனது ராணுவத்தை அனுப்பி சண்டை நடத்தியது. 3 நாட்களில் நிஜாம் சரணடைந்தார் என்பது சரித்திரம். ஹைதராபாத் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதி. அதைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்பது இந்த அமைப்புகளின் புதிய கோஷம். இதனால், மும்பை மாதிரியான அச்சுறுத்தல்கள் இனி நமக்கு அருகிலும் நடக்கக்கூடும்' என்கிற கவலையில் இருக்கிறது தமிழகப் புலனாய்வுத் துறை.
தனது பகையைத் தீர்த்துக்கொள்ள இது போன்ற விவகாரங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது. இரண்டு நாட்டுக்கும் எல்லையாக இன்று இருக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் ஆயுதங்களோடும் நோக்கங்களோடும் உள்ளே நுழைகிறார்கள். இவர்களைத் தடுக்கப் பல அடுக்கு பாதுகாப்புகளை இந்தியா அமைத்துள்ளது. கட்டுப்பாட்டு கோட்டுக்கு உள்பக்கமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஊடுருவ வசதியான இடங்களில் ராணுவம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து உயர் தொழில்நுட்பவேலி, கண்காணிப்பு சிஸ்டம் உள்ளது. 24 மணி நேரமும் மின்சாரம் இருக்க மெகா ஜெனரேட்டர்கள் இருக்கிறது. இவ்வளவையும் தாண்டி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் வருகிறார்கள். மின்வேலிக்குக் கீழே குறுகலான பள்ளம் தோண்டி வருகிறார்கள். ராணுவ வீரர்கள் இல்லாத இடங்களில் மின்வேலிகள் மீது பிளாஸ்டிக் ஏணிகள் போட்டும் ரப்பர் கையுறைகளைப் பயன்படுத்தியும் நுழைகிறார்கள். நிறைவேறா லட்சியத்துடன் நித்தமும் பயங்கரவாதிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
இந்தியப் பிரஜையின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறி ஆகிக்கொண்டே போகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 16 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. 17-வது சம்பவம் நடப்பதற்கு முன்னதாகப் பேசித் தீர்க்க வேண்டும். அல்லது போரிட்டு முடிக்க வேண்டும்!
|