''ஆமா தம்பி. இதே கதைதான் பஞ்சாயத்துக்கு ஒதுக்குற நிதியிலயும். ஊர்ல கக்கூஸ் வசதியில்லை, ஆஸ்பத்திரி இல்லை, நல்ல தண்ணி வசதி இல்லை. வந்து என்ன, ஏதுன்னு பாரு தம்பி!'' என்று அழைத்தார் ஒரு பெரியம்மா.
''அம்மா! இப்ப நான் செய்யுற இடத்துல இல்லை. கேட்குற இடத்துலதான் இருக்கேன். கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிச்சயமா இருக்கணும்னு சொல்றாங்க. ஆனா, எல்லா இடத்திலயும் அது இல்லை. இருக்குற ஒரு சில இடங்களிலும் மருத்துவ வசதியும் மருத்துவர்களும் முழுசா இல்லை. வெறும் நர்ஸூகளை வெச்சு என்ன பண்ணச் சொல்றீங்க? சமீபத்துல ஒரு மருத்துவர்கள் சங்கம், 'எங்களைப் பிரசவம் பார்க்கக் கட்டாயப்படுத்தக் கூடாது'ன்னு வித்தியாசமா ஒரு கோரிக்கை வெச்சிருக்காங்க. 'ஏன் இப்படிச் சொல்றாங்க'ன்னு விசாரிச்சா, பிரசவம் பார்க்கிறதுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாம, பல இடங்களில் பிரசவம் பார்க்கக் கட்டாயப்படுத்துறாங்களாம். பிரசவத்துல ஏதாவது சிக்கல் வந்தா, 'நாங்கதானே பலிகடா ஆகுறோம்'னு சொல்றாங்க. ஒரு போன் போட்டா, அந்த வசதி, 'அம்மா ஐயா'ன்னு ஓடி வந்துரும். ஆனா, அந்த ஒரு நிமிஷம் செலவழிக்க ஆட்சியில் இருக்கிறவங்களுக்கு நேரம் இல்லாததால, பிரசவம் சிக்கலாகி, ஏகப்பட்ட இறப்புகள். ஏழைகளின் உயிரோடு விளையாடுற இந்த ஆட்டத்தை உடனே நிறுத்தணும்!'' என்று சீரியஸாக முடிப்பவர், கொஞ்சம் ரிலாக்ஸாக கிராமத்தை ஒரு ரவுண்ட் அடிக்கிறார்.
அவர் பின்னால் மொத்த கிராமமும் அணிவகுத்துச் செல்கிறது. சுற்றுலாத் தல விசிட் கணக்காக ஒவ்வோர் இடத்துக்கும் பல குற்றங்குறைகளை அடுக்குகிறார்கள் பாவப்பட்ட பப்ளிக்.
''தினமும் பேப்பரை விரிச்சா, 'அங்கே ஆர்ப்பாட்டம்... இங்க போராட்டம்... சாலை மறியல்!'னுதான் செய்தி வருது. எங்களைப் போல கட்சிக்காரங்க நடத்துற போராட்டங்களைச் சொல்லலை. கட்சி சார்பில்லாத பொதுமக்களே, சாலை, மின்சாரம், ரேஷன் கடை, பள்ளிக்கூடம், பஸ் ஸ்டாண்ட், ஆஸ்பத்திரி, சாக்கடை வசதிகள் கோரி நித்தமும் போராடுறாங்களே... அந்த மன்றாட்டங்களைச் சொல்றேன். வீட்டுக்குள்ளே அமைதியா இருக்க வேண்டிய அப்பாவி ஜனம், ஏன் ரோட்டுக்கு வரணும்?
பாலம் திறக்கிறதுக்கும் பஸ் விடுறதுக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வசதியான நாள் பார்க்க வேண்டியதில்லை. அரசியல் பார்க்காம, ஆள் பார்க்காம, நமக்கு இந்த ஊர்க்காரன் ஓட்டுப் போட்டானான்கிற கணக்கு பார்க்காம நல்லது பண்ணணும். இது என்னோட ஆசை. மத்த கட்சிகளுக்கு மட்டும் நான் சொல்லலை, எனக்கும் சேர்த்துத்தான் சொல்லிக்கிறேன்!'' என்று விஜயகாந்த் சொல்லிக் கை கூப்ப, ''நூத்துல ஒரு வார்த்தை கண்ணு. 'நான் செய்யிற இடத்துல இல்லை. கேக்குற இடத்துல இருக்கேன்'ன்னு சொன்னியே. சீக்கிரமே செய்ற இடத்துக்கு வா!'' என்று கண் கலங்க ஆசீர்வதிக்கிறார் அந்தக் கிராமத்துப் பெரியவர் ஒருவர்.
பரவசமாகத் தாழ் பணிந்து அவர் ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொள்கிறார் தே.மு.தி.க தலைவர்!
|