ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்


ஸ்பெஷல் 1
பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்
 
பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்

புதிது புதிதாக, சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான கார்களை உற்பத்தி செய்துவிட்டு, கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறது அமெரிக்கா. டெலிவரி எடுக்க ஆள் இல்லை. உள்நாட்டு, வெளிநாட்டு ஆர்டர்கள் இல்லை.

அமெரிக்காவின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் ஆட்டோமொபைல் தொழிற்சாலை நொறுங்கிக் கிடக்கிறது. குறிப்பாக, ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட், க்ரிஸ்லர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நிறுவனங்கள் இப்போது தத்தளிக்கின்றன.

இரண்டு, மூன்று கார் வைத்திருப்பவர்கள்கூட கூடுதலாக இன்னொரு கார் வாங்கும் தேசம் அமெரிக்கா. ஒரு கார் வேலைக்குப் போக, இன்னொன்று ஷாப்பிங் செல்ல, மூன்றாவது, சுற்றுலாவுக்கு. இத்தனை இருந்தாலும், புதிய மாடல் வந்தால் 'அட! நன்றாக இருக்கிறதே' என்று அதையும் வாங்குவார்கள். பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, துட்டு கட்டுப்படியாகவில்லை. வீடே ஜப்தியாகும்போது, கார் ஒரு கேடா?

அழுது புலம்பியபடி அரசாங்கத்தை அணுகினார்கள் ஆட்டோமொபைல் நிறுவனத்தினர். 'இதே நிலைமை நீடித்தால் எங்களால் பிழைக்க முடியாது. அரசாங்கம் கைதூக்கி விடாவிட்டால், அலுவலகங்களை மூட வேண்டியிருக்கும். கணிசமானவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிவரும். வேறு வழி தெரியவில்லை.'

ஓடோடி வந்தது அமெரிக்க அரசாங்கம். ஏற்கெனவே பங்குச் சந்தை விழுந்துவிட்டது. நிதி நிறுவனங்கள் படுத்துவிட்டன. வங்கிகள் திவாலாகின்றன. பலரது வேலைகள் பறிக்கப் படுகின்றன. இந்நிலையில், கார் தொழிற்சாலைகளையும் மூடிவிட்டால், அமெரிக்கப் பொருளாதாரத்தை யாரா லும் தூக்கி நிறுத்த முடியாது. உடனே, 25 பில்லியன் டாலரை அள்ளிக் கொடுத்தார்கள். எல்லாம் மக்களின் வரிப் பணம். ஆனால், கார் நிறுவனங்களுக்கு இது போதவில்லை. 'இன்னும் கொஞ்சம் கிடைக்குமா?' என்று கடிதம் எழுதிக் கேட்கிறார்கள்.

'அரசாங்கம் நிச்சயம் உதவும்' என்று இந்த நிறுவனங்களுக்குத் தெரியும். காரணம், அமெரிக்காவில் பொதுப் போக்குவரத்து வசதிகள் குறைவு. ஒரு காலத்தில் ரயில்கள் நிறைய ஓடிக்கொண்டு இருந்தன. பேருந்துகளும் ஓடின. கார் நிறுவனங்கள் யோசித்தன. எல்லோரும் பேருந்துகளிலும் ரயில்களிலும் போய் வந்தால், கார்களை யார் வாங்குவார்கள்?

எதிரியைச் சமாளிக்க, இரு வழிகள் உள்ளன. ஒன்று, அழிப்பது. இன்னொன்று, விலை கொடுத்து வாங்குவது. இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். 1920-ல் தொடங்கினார்கள். அரசாங்கத்திடம் பேசினார்கள். ஐயா, பொதுமக்களுக்கான போக்குவரத்துத் தேவைகளை இனி நாங்கள் கவனித்துக்கொள்ளட்டுமா? அரசாங்கத்தால் இத்தனை பெரிய பணியைச் செய்ய முடியாது என்பதை நாங்கள் அறிவோம். தவிரவும், தனியார்வசம் இத்துறையை ஒப்படைப்பதன் மூலம் உங்களுக்குப் பெரும் லாபமும் கிடைக்கும். பிரச்னைகளும் தீரும்.

ஒப்புதல் கிடைத்தது. பெரும் பணம் கொடுத்து முதலீடு செய்தார்கள். ரயில்களும் பேருந்துகளும் சிறிது காலம் பழையபடி இயங்கிக்கொண்டுதான் இருந்தன. படிப்படியாகத்தான் வேலையை ஆரம்பித்தார்கள். மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. டீசல் இன்ஜின்கள் கொண்ட ரயில்களை இயக்க ஆரம்பித்தார்கள். 1935-ல் 7 மின்சார ரயிலுக்கு ஒரு டீசல் ரயில் இயங்கியது. 1970-களில் 100 டீஸல் ரயிலுக்கு ஒரு மின்சார ரயில் மட்டும் இயங்கியது. ஏன்? அப்போதுதான் ஜெனரல் மோட்டர்ஸூக்கு லாபம் கிடைக்கும். ஆம், 60 சதவிகித டீசல் இன்ஜின்களை ஜெனரல் மோட்டார்ஸ்தான் உற்பத்தி செய்து தந்தது. பிறகு, ரயில்களை நிறுத்தினார்கள். பேருந்துகள் மட்டும் ஓடின. பிறகு, பேருந்து களின் எண்ணிக்கையையும் குறைத்தார்கள்.

ஐயோ! என்ன செய்வது என்று மக்கள் திண்டாடும் சமயத்தில், வெண்ணையாக வழுக்கிக்கொண்டு வந்து நின்றன, பளபளக்கும் புதிய கார்கள். கவர்ச்சிகரமான விளம்பரங்கள். 'அமெரிக்கர்களே, இதோ உங்கள் தேவைகளுக்கு ஏற்ற அற்புதமான வாகனம். குறைந்த விலை. நல்ல சேவை. சீரான வேகம். வீட்டுக்கு ஒரு கார் அவசியம்'. ஆர்வத்துடன் மக்கள் வாங்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில், லாஸ் ஏஞ்சலீஸ், டெட்ராய்ட் போன்ற நகரங்களில் ரயில்கள், பேருந்துகள் இரண்டும் முழுவதுமாக நிறுத்தப்பட்டன. காசு இருந்தால் கார் வாங்கு, இல்லாவிட்டால் வீட்டில் சும்மா இரு.

குடும்பத்துக்கு ஒரு கார் என்னும் கணக்கு போதுமானதாக இல்லை. லாபம் போதவில்லை. வீட்டுக்கு இரண்டு கார்கள் வாங்கிக்கொள்ளுங்கள் என்று விளம்பரப்படுத்தினார்கள். கணவனுக்கு ஒன்று. மனைவிக்கு ஒன்று. அல்லது பெற்றோருக்கு ஒன்று. குழந்தைகளுக்கு ஒன்று. பிறகு, வெவ்வேறு மாடல்கள். பிறகு, வண்ணங்கள், டிசைன்கள், மியூஸிக் சிஸ்டம். டி.வி. அட்ஜஸ்டபிள் ஸீட்டிங். இன்ன பிற.

அங்கீகாரம். மரியாதை. கௌரவம். வசதி. மதிப்பு. நீ எந்த காரை வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்தே நீ யார் என்பதை மதிப்பிடப்படுவாய். ஆகவே, கவனமாக உன் காரைத் தேர்ந்தெடு.

90 சதவிகித அமெரிக்கர்கள் கார் வாங்கி விட்டார்கள். கார் இல்லாமல் வாழவே முடியாது என்னும் நிலைக்கு அமெரிக்கர்கள் தள்ளப்பட்டனர். பேருந்து, ரயில் உள்ளிட்ட அனைத்துப் பொது வாகனங்களையும் உதாசீனம் செய்தார்கள்.

தாகத்துக்கு ஒரு பாட்டில் தண்ணீர் வாங்க வேண்டும் என்றாலும், காரை எடுத்துக்கொண்டு சில மைல்கள் சென்றாக வேண்டும். இருப்பிடங்களும், அலுவலக இடங்களும், கடைத் தெருக்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாகத்தான் உதிர்ந்துகிடக்கும். பெட்ரோல் விலை யேற்றம், தட்டுப்பாடு என்றதும் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டது போல் உணர்ந்தார்கள். ஒரு பாட்டில் தண்ணீரைவிட, அதை வாங்குவதற்காகச் செலவழிக்கும் எரிபொருளின் விலை அதிகமாக இருந்தது. 2004 கணக்கின்படி, வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதியைப் போக்குவரத்துக்காக அவர்கள் செலவழிக்க நேர்ந்தது.

இதுதான் பின்னணி. நாம் இல்லாமல் அமெரிக்கா இல்லை என்பதை நன்கு புரிந்துகொண்டதால்தான், துணிச்சலுடன் அரசாங்கத்தை நாடியிருக்கிறது அமெரிக்க ஆட்டோமொபைல் துறை. இதனால்தான், அரசு பாய்ந்து பாய்ந்து கார் நிறுவனங்களுக்கு உதவி வருகிறது. பாரக் ஒபாமாவும் தன் பங்குக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். ''கார் கம்பெனிகள் நமக்கு முக்கியம். அவர்களை நிச்சயம் நான் தூக்கி நிறுத்துவேன்!''

 
பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்