விகடன் வரவேற்பறை
ஜான் ஆபிரகாம் - கலகக்காரனின் திரைக் கதை
தொகுப்பாசிரியர்: ஆர்.ஆர்.சீனிவாசன் வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை-1.
பக்கங்கள்: 310 விலை:

200.

ஜான் ஆபிரகாம் - கிழித்துப் போட்ட நெருப்புக் குச்சியைப்போல இருந்தவர். மாற்று சினிமா மீதான ஆர்வம்கொண்ட ஜான் ஆபிரகாம், ஒடேஸ்ஸா சினிமா இயக்கத்தில் இணைந்து, மக்களிடம் பணம் வசூலித்து, மக்கள் சினிமா எடுத்தவர். ஜானின் வாழ்க்கை குறித்தும் அவரது கலை எத்தனங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். ஜானைப்பற்றி ஜானும் மற்றவர்களும் எழுதியுள்ள கட்டுரைகள், ஒரு கலகக்காரனின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை முன் வைக்கிறது. தமிழ் மாற்றுச் சினிமா உலகில் அதிர்வு அலைகளை எழுப்பிய 'அக்கிரகாரத்தில் கழுதை’, நக்சல்பாரி இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் வாழ்வு குறித்துச் சொல்லும் 'அம்ம அறியான்’ போன்ற ஜான் ஆபிரகாம் படங்கள் குறித்தும் சக மனிதர்களுடன் முரணோடு கூடிய அவரது கரிசன உறவையும் அறிய இந்தப் புத்தகம் உதவுகிறது.
எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள் (http://musivagurunathan.blogspot.com/)

மனித உரிமை ஆர்வலரான மு.சிவகுருநாதனின் வலைப்பூ இது. அன்றாடம் அனைவரும் செய்தி யாகக் கடந்து போகும் விஷயங்கள் குறித்த எதிர்வினைகள். ஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகளில் மறைக்கப்பட்ட உண்மைகள், ஸ்பெக்ட்ரம் ஊழல், எல்லோரும் மறந்துபோன ரீட்டாமேரி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை, செயல்வழிக் கற்றல் முறை என்று பல ஏரியாக்களில் கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன. மக்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் செல்லும் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கைகளும் வெளியிடப்படுகின்றன. அரசியல், சமூகம் எனப் பல்வேறு தளங்களில் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயன்படும் வலைப்பூ இது.
மொபைல் மருத்துவர் (http://www.healthguru.com/)

மனிதனின் கிஞீ பிரச்னைகளுக்கான தீர்வுகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. டீன்களுக்கு கல்லூரியில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து, செக்ஸ் சம்பந்தமான விஷயங்கள் வரை அத்தனைக்கும் கைதேர்ந்த டாக்டர்களின் அறிவுரையுடன் கூடிய வீடியோ பதிவுகள் ஏராளம். ஆண்களுக்கான வேக்ஸிங், பிரசவ காலத்து அழகுக் குறிப்புகள் வரை எக்ஸ்பர்ட்களின் பதில்களுடன் வலம் வரும் இந்த வலைதளம், எல்லா வயதினருக்கும் ஏற்ற கையடக்க மொபைல் மருத்துவர்.
கல்கியின் சிவகாமியின் சபதம் : இயக்கம்: பம்பாய் கண்ணன்
வெளியீடு: ஸ்வாதி சாஃப்ட் சொல்யூஷன்ஸ் : விலை:

300

கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான சிவகாமியின் சபதத்தை ஆடியோ ஆல்பமாகத் தயாரித்துஇருக்கிறார்கள். ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்களின் பின்னணியில் கல்கி எழுதிய வர்ணனைகள் வார்த்தைகளாக ஆரம்பிக்கின்றன. சூழலைச் சொல்லி முடித்த பின், கதாபாத்திரங்களின் உரையாடல் அழகான தமிழில் தெளிவாக வருகின்றது. வர்ணனையின்போது பின்னணியில் ஒலிக்கும் இசை அற்புதம். சூழலுக்கு ஏற்ப ஆங்காங்கே வரும் கதவு திறக்கும் சத்தம், மணியோசை ஆகியவற்றைச் சேர்த்து கதைக்குள் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்கள். கிட்டத்தட்ட 30 மணி நேரம் செவி வழியாக சிவகாமியின் சபதத்தை ரசிக்கலாம்.
வானம் - இசை: யுவன்ஷங்கர் ராஜா - வெளியீடு: வீனஸ் - விலை:

99

'எவன்டி உன்னைப் பெத்தான்’ - கவிஞர்கள் யுவன், சிம்பு கைவண்ணத்தில் உருவாகி, அவர்களே பாடிய பாடல். ஆங்கில வரிகளும், குரலும் யுவனுடையது. 'ஐ ஃபீல் லைக் ஃப்ளையிங்’ என்று துவங்கும் பாடலின் ஒவ்வொரு நொடியும் டிஸ்கொதெ ஹால் உற்சாகமும் குதூகலமும். அதிரடிக்காத மெட்டாலிக் இசையில் மென்த்தால் சுகம். 'உன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ஐ-போன், ஐ-பாட், லிப் க்ளாஸ், ஐ லைனர், டெடிபியர், பெட் அண்ட் பில்லோ, அப்பா, அம்மா, பாய் ஃப்ரெண்ட் எல்லாமே நான்தான்’ என்று அடுக்கிவிட்டார் கவிஞர் சிம்பு. 'ராஜா கேபிள் ராஜா’ பாடலின் முழு முதல் நோக்கம் சிம்பு புகழ் மட்டுமே. 'நோ மணி... நோ ஹனி’ என்று தத்துவம் சொல்லும் பாடல் 'உனக்கும் வேணும்... எனக்கும் வேணும்’. ஊலல்லா இசைக்குப் போட்டியாக சிம்பு, ஆண்ட்ரியா, ஸ்ரீகாந்த் தேவா குரல்களில் உற்சாக உருமி. ஆல்பத்தின் ஒரே மெலடியாகக் கடக்கிறது 'தெய்வம் வாழ்வது எங்கே’.