ரோமானியன் தா.பாண்டியன்!
##~## |
'' 'வாழ்க்கை ஒரு வட்டம்...’ என்ற சினிமா பன்ச்சுக்கு சினிமாவில் இருந்தே ஓர் உதாரணம் கூறுங்களேன்?''
''அந்தக் கால சினிமாவில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள்... போன்ற திரையில் நடித்த வர்களே அவர்களுக்கான பாடல்களையும் பாடினார்கள். பிறகு வந்த காலகட்டங்களில், நடிகர் - நடிகையர் பாடாமல் பின்னணிப் பாடகர்கள் அவர்களுக்குக் குரல் கொடுத்தார்கள். ஆனால், இன்று கமல், கார்த்தி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், விமல், ஆண்ட்ரியா... போன்ற நடிகர்களே தாங்கள் நடிக்கும் பாடல்களைப் பாடவும் செய்கிறார்கள். வாழ்க்கை ஒரு வட்டம்தானே!''
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
''நேர மேலாண்மைக்கு ஓர் உதாரணம் சொல்லுங்களேன்?''
''பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த், தனக்கு மிகவும் உடல் நலமில்லாத நாளிலும் கதை எழுதிக்கொண்டு
இருந்தாராம். அவர் மனைவி, 'ஏன் உடல் நலமில்லாத நிலை யிலும் இப்படி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள்? நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டு உடலுக்குத் தேவையான சிகிச்சை செய்து, நன்றாக உறங்கி, சாப்பிட்டு பிறகு எழுத்து வேலைகளைக் கவனிக்க வேண்டியதுதானே...’ என்று கோபத்துடன் கேட்டிருக்கிறார். அதற்கு பிரேம்சந்த், 'ஒரு விளக்கின் கடமை வெளிச்சம் தருவதுதான். எண்ணெயும் திரியும் எவ்வளவு காலம் இருக்குமோ, அவ்வளவு காலமும் அது ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கும். எண்ணெய் தீர்ந்தவுடன் விளக்கு தானாகவே அணைந்துவிடும்!’ என்று மட்டும் பதில் சொல்லியிருக்கிறார். நேரத்தின் மேலாண்மையை இதற்கு மேல் உணர்த்த வேண்டுமா என்ன?''
- ஹெச்.பாஷா, சென்னை-106.

'' 'நான் ஒரு திறந்த புத்தகம்’ என்று பேட்டி அளித்திருக்கிறாரே மன்மோகன்சிங்?''
''சரிதான்... ஆனா, காணாமல்போன நிலக்கரி விவகார கோப்புகள், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ வகையறாவா?''
- கே.புஷ்பா, சேலம்.
''தமிழகத்தில் சகலர் மீதும் சகட்டுமேனிக்குப் பாயும் அவதூறு வழக்குகள் சொல்லும் பாடம் என்ன?''
''ரோம் நகரில் ரோமானியனாக இரு. தமிழ்நாட்டில் சரத்குமாராகவோ அல்லது தா.பாண்டிய னாகவோ இரு!''
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.
''விலைவாசி உயர்வைப் பற்றியும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைப் பற்றியும் பொருளாதாரக் காரணங்களை ப.சிதம்பரம் போன்றவர்கள் விரிவாக விளக்கியும், அடம்பிடிக்கும் எதிர்க்கட்சிகளைப் பற்றி?''
''நீங்களும், ப.சிதம்பரம் போன்றவர்களும் தெரிந்துகொள்ளவேண்டிய ஓர் உண்மை உள்ளது. பொருட்களை வாங்கும்போது 'விளக்கம்’ கொடுத்து வாங்குவது நடைமுறையில் இல்லை... 'பணம்’ கொடுத்துதான் பொருட்களை வாங்கவேண்டியுள்ளது!''
- புதூர் பாலா, நாமக்கல்.
''போக்கிரிகளை எப்படிச் சமாளிக்க வேண்டும்?''
''நாங்கள் சமீபத்தில் உயிரியல் பூங்காவுக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த கொரில்லா குரங்கைப் பார்த்து பூங்கா ஊழியரிடம், 'இது ஆணா, பெண்ணா, அதை எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்று ஓர் இளைஞன் கேட்டான். சுற்றிலும் குழந்தைகள், பெண்கள் இருந்ததால் அவர் எதுவும் சொல்லாமல் சிரித்துச் சமாளித்தார். ஆனால், விடாமல் மீண்டும் மீண்டும் அவன் கேட்டுக்கொண்டே இருந்தான். அந்த ஊழியர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஒருகட்டத்தில் அவன் கிண்டலும் நக்கலும் அத்துமீறிப் போகவே, 'தம்பி... அது ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்துகொள்ள இன்னொரு கொரில்லாவுக்குத்தான் அக்கறை வேண்டும். நீ எதற்காக அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?’ என்று கேட்டார். அதுவரை பூங்கா ஊழியரை வம்புக்கு இழுத்த அந்த இளைஞனின் முகம் போன போக்கு இருக்கிறதே..!''
- கே.சரஸ்வதி, ஈரோடு-12.
''உங்களுக்குப் பிடித்த பன்னாட்டுப் பழமொழிகள் ஏதேனும்?''
''முதலில் ஒரு சீனப் பழமொழி... 'நடப்பதை நிறுத்தினால் உன்னைக் கடந்து போய்விடுவார்கள்.’ அடுத்து ஓர் ஈரானியப் பழமொழி... 'சேவல் விடியற்காலையில் எழுந்து கூவுவது ஏன் தெரியுமா? உன் வாழ்நாளில் மேலும் ஒரு நாள் முடிந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காகத்தான்!’ ''
- கே.விஸ்வநாதன், கோவை.
எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space) விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்!