சினிமா
Published:Updated:

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்

பிரபாகரன்...தலைவராக சிறந்த ரோல்மாடல் !

##~##

என்.மாதேஷ், தூத்துக்குடி.

'' 'என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?''

''பிரபாகரன் மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லைனு சொல்லமாட்டேன். அதே நேரம், விமர்சனம் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்த காந்திமீதுகூட விமர்சனங்களை அடுக்கின ஆளுங்கதான் நாம். ஆனா, விமர்சனங்களையும் தாண்டி கருத்து வேறுபாடுகளையும் கடந்து, யார் மக்களுக்கு உண்மையா இருந்திருக்காங்களோ, அவங்கதான் தலைவர்கள்.

தன் போராட்டத்துக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும், உண்மையாவும் நேர்மையாவும் பிரபாகரன் நடந்துக்கிட்டார்னு நான் நம்புறேன். போரில் தன் மகனைப் பலி கொடுத்ததில் தொடங்கி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். பிரபாகரனின் ஆளுமை, கம்பீரம், மக்கள் மீது அக்கறை, லட்சியத்துக்கு உயிரையும் தரும் அர்ப்பணிப்பு... இது எல்லாமே எனக்குப் பிடிச்ச விஷயங்கள். ஒரு தலைவனா பிரபாகரனை 'ரோல்மாடலா’ சுட்டிக்காட்டுறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!''

தெ.பரமசிவன், காஞ்சிபுரம்.

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்

''நீங்கள் குஷ்புவுக்கு நெருக்கமான நண்பர்தானே... அதனால் கேட்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் தேர்தலில் அவர் தமிழக முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவார்தானே?''

"'குஷ்புவுக்கு, நான் நண்பர்தான். ஆனா, அவங்க அரசியல் நடவடிக்கைகளைப் பத்தி பகிர்ந்துக்கிற அளவுக்கு நெருக்கம் இல்லை. இந்தக் கேள்வி குஷ்புவுக்கு மட்டும் பொருந்தாது. சினிமாவில் இருக்கிற இன்னும் சிலருக்கும் பொருந்தும். 'அரசியல்’ என்பது எல்லாருக்கும் பொதுவானது. ஓட்டுரிமை இருக்கிற யாரும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனா, யார் என்ன பதவிக்கு வரணும்னு தீர்மானிக்கிறது மக்கள்தான்!''

கே.அன்னசிங், சோமனூர்.

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்

 ''நீங்கள் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்வதால், செய்த தப்புகள் எல்லாம் சரியானவை என்று ஆகிவிடுமா பிரகாஷ்ராஜ்?''

''நான் அப்படி சொன்னேனா செல்லம்?   100 சதவிகிதம் எல்லாத்தையும் சரியா செய்றவங்க யாராவது இருந்தா காட்டுங்களேன். நானும் அவங்களைத் தெரிஞ்சுக்கிறேன். தப்பு செய்றப்பதான், எதையாவது கத்துக்க முடியும்னு உறுதியா நம்புறவன் நான். அதே நேரம் தவறுகளுக்குரிய விளைவுகளையும் நாம எதிர்கொண்டுதான் ஆகணும். நான் செய்த தவறுகளுக்குரிய விளைவுகளை ஓடி ஒளியாமல் நின்னு நேரா சந்திச்சிருக்கேன். தவறு செய்வதைவிட, அதை வெளிப்படையா சொல்றதுக்குத்தான் எல்லாருக்கும் அச்சம். அதை மறைக்கிறதுக்கு நிறையத் தவறுகள் செய்றவங்கதான்  அதிகம். 'நான் தப்பு பண்ணிட்டேன்’னு சொல்றதுல, 'நான் செஞ்சதெல்லாம் சரி’னு எங்கே அர்த்தம் வருதுன்னு எனக்குத் தெரியலை.

'தவறுகள் எல்லாம் குற்றங்கள் இல்லை’னு சொல்லியிருக்கார் ஜெயகாந்தன். குற்றம் செய்தால்தான் தண்டனை. நான் நிறையத் தவறு செஞ் சிருக்கேன். இப்பவும் செய்றேன். என் தவறுகளுக்கு நிறைய விலை கொடுத்திருக்கேன். ஆனா, அதைத் தண்டனையா எடுத்துக்கிறது இல்லை!''

சேகர், திருச்சி.

''காமெடியா நடிக்கிறது கஷ்டம்னு சொல்லியிருக்கீங்க. அப்போ... நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம்... இவர்களில் யாருடைய காமெடி பெஸ்ட்?''

''உங்க லிஸ்ட்ல முதல் ஆள்... அவர் நம்ம ஊர் சார்லி சாப்ளின். நான் முதன்முதலில் காலில் விழுந்து வணங்கிய சினிமா நடிகர். வார்த்தைகளால் கிச்சுக்கிச்சு மூட்டாமல், நடிப்பு என்ற கலையை உடலோட ஒவ்வோர் அங்கத்துலயும் பிரவாகமாப் பரவவிட்ட இயல்பான கலைஞன்.

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்

''சர்வர் சுந்தரம்’ படத்தை வேற ஒரு நடிகன், அந்த வசனங்களைப் பேசி நடிக்கணும்னா, அது ஆறு மணி நேரப் படம். நாகேஷால் மட்டும்தான் அது ரெண்டரை மணி நேரப் படமாச்சு’னு சொன்னார் பாலசந்தர் சார். நாகேஷோட வேகத்துக்கு இந்திய சினிமாவுல இப்பவரைக்கும் யாராலயும் ஈடுகொடுக்க முடியாது. இன்னைக்கு காமெடியனா இருக்கிற ஒவ்வொரு நடிகரும், நாகேஷை ரோல்மாடலா வெச்சுக்கிட்டா, காலத்துக்கும் பேர் சொல்ற மாதிரியான படங்களை உருவாக்கலாம்!''

மு.சுரேஷ், தகட்டூர்.

 ''உங்களால் பதில் சொல்லமுடியாத கேள்வி எது?''

 ''அவசியம் இல்லாத எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. அவசியம் இருக்கிற எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் இருக்க முடியாது. இதைவிட, பதில் தெரியாத கேள்விகள்தான் ரொம்ப அதிகம்!''

எம்.செல்லையா, சாத்தூர்.

''சமீபத்தில் உங்களைச் சந்தித்ததில் நெகிழ வைத்த மனிதர்கள் யார்?''

 ''தெரு நாடகங்கள்ல நடிச்சுட்டு இருந்தவரை, பொதுமக்களோட நெருக்கமா இருந்திருக்கேன். வெங்காய விலை ஏறினா, சாதாரண மக்கள் கண்ணுல எப்படி கண்ணீர் வரும்னு நல்லாவே தெரியும். சினிமாவுக்குப் போன பிறகு, கொஞ்சம் யதார்த்தத்துல இருந்து தள்ளிப் போயிட்டேங்கிற உண்மையை ஒப்புக்கத்தான் வேணும். ஆனா, சமீபத்தில் நான் தொகுத்து வழங்கிய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி, என் சட்டைக் காலரைப் பிடிச்சு மீண்டும் யதார்த்த வாழ்க்கைக்குக் கூட்டிட்டு வந்திருச்சு.

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்

வீட்டுக்கு வெளியே நின்னு விளையாடினாலே அடிக்கிற அப்பாவுக்குத் தெரியாம, பாக்ஸிங் கத்துக்கிட்ட ஓர் இளம்பெண் இப்பவும் என் ஞாபகத்துல இருக்காங்க. 'எல்லாருமே என்னை, 'கணவனால் கைவிடப்பட்ட பெண்’னு சொல்றாங்க. என் புருஷன் தகுதி இல்லாதவன்னு, நான்தான் அவனைக் கைவிட்டேன். 'கணவனைக் கைவிட்ட பெண்’னு சொல்லுங்க’னு சொன்ன ஓர் இல்லத்தரசியை எப்பவுமே மறக்க முடியாது.

60 வயசு தாண்டின ஓர் அம்மா, 'என் அக்காவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏதோ சின்ன சண்டையில ஒரு மாசம் அவகூட நான் பேசவே இல்லை. அவ எவ்வளவோ முயற்சி செஞ்சும் கோபத்துல பேசாம இருந்துட்டேன். திடீர்னு ஒருநாள் அவ விபத்துல செத்துப் போயிட்டா. அவகிட்ட எனக்குப் பேசுறதுக்கு, என் சுக-துக்கங்களைச் சொல்லி அழறதுக்கு நிறைய இருக்கு. ஆனா, இப்ப அவ இல்லை. நீங்க அந்த மாதிரி கோபத்தை மனசுல வெச்சுக்கிட்டு யார்கிட்டயும் பேசாம இருந்துடாதீங்க’னு சொன்னாங்க. என் வாழ்க்கையில் இனி எப்பவும் கடைப்பிடிக்க நினைக்கிற அட்வைஸ் அது.

என் பொண்ணு வயசு இருக்கிற ரெண்டு குட்டி ராட்சஸிங்க, என்னை மாதிரி இமிடேட் பண்ணி ஷோவை நடத்திக் காமிச்சாங்க. நான் எதையெல்லாம் அதிகமா ரிப்பீட் பண்றேன்னு சொல்லாமச் சொல்லிப் புரியவெச்சாங்க.

இனி, அடிக்கடி இப்படி நிறைய மனிதர்களைச் சந்திக்கணும் செல்லையா!''  

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்

மு.அழகரசன், சேலம்.

'' 'இருவர்’ படத்தில் கருணாநிதி சாயல் உள்ள அந்தத் தமிழறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்க எந்தத் தைரியத்தில் ஒப்புக்கொண்டீர்கள்? பின்னாட்களில் கருணாநிதி அதைப் பற்றி உங்களிடம் ஏதேனும் பகிர்ந்துகொண்டாரா?''

''மொழி தெரியாத ஒருத்தன், கலைஞரோட தமிழ் பேசி நடிக்கணும்னு நினைச்சதே கொஞ்சம் துணிச்சல். என்னை நான் நம்பினதைவிட, மணிரத்னம் நம்பினது அதிகம். 'இருவர்’ படத்துக்கு முதல்ல 'ஆனந்தன்’னுதான் பேர் வெச்சாங்க. அப்புறம்தான் 'இருவர்’னு மாறுச்சு. அந்த நேரத்துல 'கல்கி’ படத்துக்காக சிறந்த வில்லன் விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்தது தமிழக அரசு. அப்போ கலைஞர் முதல்வர். 'இருவர்’ படத்தின் தமிழறிஞர் கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்கிறேன்னு முடிவாகிடுச்சு. அந்த மேடையில் நான் ஏறினதும் பலத்த கைத்தட்டல். 'சிறந்த வில்லன் விருது வாங்குபவர் சிறந்த நடிகர். அது நம் 'இருவருக்கும்’ தெரியும்’னு மறைமுகமா வாழ்த்தினார் கலைஞர்.

அடுத்த வருஷம், 'இருவர்’ படத்துல நடிச்சதுக்காக எனக்கு தேசிய விருது கிடைச்சது. ஆனா, மாநில அரசு தந்த விருதுப் பட்டியல்ல என் பேர் இல்லை. 'உங்களுக்கு தமிழக அரசு விருது தரலையே?’னு என்கிட்ட கேட்டப்ப, 'அரசு விருது அரசியல் விருது ஆகிடுச்சு’னு சொன்னேன். அதுல கலைஞருக்கு வருத்தம். அதுக்குப் பதில் சொன்னார். அப்புறம் விகடன்ல, 'தமிழ் பேசியதால் எனக்கு தேசிய விருது. தமிழறிஞர் கையாலும் விருது கிடைக்கும்னு ஆசையா இருந்தேன். கலைஞன் கோபம் குழந்தைக் கோபம். கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர் அவர். என் கோபம் அவருக்குப் புரியும்’னு சொன்னேன். அதன் பிறகு கலைஞர் கையால் தமிழக அரசு விருது வாங்கி இருக்கேன். அவருடைய 'சங்கத் தமிழ்’ கவிதையை மேடையில் நடிச்சிருக்கேன். 'அபியும் நானும்’ இசையை அவர் வெளியிட்டு வாழ்த்தினார்.

எனக்கும் அவருக்கும் இடையில இருப்பது, முழுக்க முழுக்க அன்புப் பிணைப்பு!''

- அடுத்த வாரம்...

 ''ஓடாதுனு தெரிஞ்சும் எதுக்காக சில படங்களில் நடிக்கிறீங்க?''

''ரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ்... இந்த வரிசை உங்களோடு முடிவுக்கு வந்து நிற்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''பிரகாஷ்... எதற்காக இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்?''  

- பேசலாம் செல்லம்...