சினிமா
Published:Updated:

செல்லப்பன் சார்...

ம.கா.செந்தில்குமார், படம்: ஆ.முத்துக்குமார்

##~##

''இது எங்கள் நான்கு வருடக் கனவு!'' என்கிறார் அண்ணா பல்கலைக்கழக ஆங்கிலத் துறை தலைவர்  டாக்டர் இளங்கோ.

''இந்தத் திட்டத்தை, அடுத்த  ஆண்டு ஆசிரியர் தினம் வரை தமி ழகம் முழுக்க எடுத்துச் செல்வோம்'' என்கிறார் மாநில கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ஆசைத்தம்பி.

''இவர்களின் கனவு நிறைவேறியதில் என் பங்கும் இருந்ததில் மகிழ்ச்சி'' என்கிறார் திரைப்பட இயக்குநர் வெங்கி.

இவர்களின் பூரிப்புக்குப் பின் இருப்பவை,  AN INSPIRING TEACHER என்ற ஆவணப்படமும், அந்தப் படத்தில் சொல்லப்பட்ட ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் செல்லப்பனின் வாழ்க்கைக் கதையும்தான்!

''முனைவர் செல்லப்பன், சிவகங்கை மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தமிழ் வழியில் படிப்பை ஆரம்பித்த இவர், தன் உழைப்பால் சிறந்த ஆங்கிலப் பேராசியராக உயர்ந்தவர்'' என்ற இளங்கோவைத் தொடர்கிறார் பேராசிரியர் ஆசைத்தம்பி.

''நான் செல்லப்பன் சாரின்  மாணவன். இளங்கோ இவரிடம் படிக்காதவர். எங்களைப் போன்றோருக்கு செல்லப்பன் சார்தான் உத்வேகம் கொடுக்கும் ரோல்மாடல். போதுமான பேராசிரியர்கள் இல்லாத காலகட்டத்தில், பிரிட்டிஷ் கவுன் சிலின் புராஜெக்ட்டில் இங்கிலாந்துக்குச் சென்று ஒரு வருடப் பயிற்சி பெற்று வந்தவர் செல்லப்பன் சார். இவர் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தாலும், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் வழிகாட்டலில், இளங்கோவடிகளையும் ஷேக்ஸ்பியரையும் ஒப்பிட்டு ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்'' என்கிறார்.

செல்லப்பன் சார்...

இந்த ஆவணப்படத்தைப் படம்பிடித்த  இயக்குநர் வெங்கி, செல்லப்பன் சாரின் ரசிகராகவே மாறிவிட்டார். ''நல்லாப் படிக்கிற எல்லாரும் எம்.பி.பி.எஸ்., பி.இ., என்று தொழிற்படிப்புகள் படிச்சுட்டு வேலைக்குப் போயிடுறாங்க. எந்த வேலையும் கிடைக்காதவங்கதான் ஆசிரியர் வேலைக்கு வர்றாங்க. ஆனா, ஆசிரியர் பணிதான் நாட்டுக்கு ஹீரோக்களை உருவாக்கும் பணினு இந்தப் படத்தில் சொல்லியிருக்கோம்.

'கிரிக்கெட்டுக்கு சச்சின் மாதிரி ஆசிரியர் பணிக்கு செல்லப்பன் சார்’னு சொல்லாம சொல்லி, முதல்தர மாணவர்களை ஆசிரியர் பணிநோக்கி மடை மாற்றும் முயற்சிதான் இந்த ஆவணப்படம். டாக்குமென்ட்ரினு சொன்னாலும் ஜிம்மி ஜிப், கேமரா சாதனங்கள், லைவ் சவுண்ட்னு ரொம்ப ரிச்சாவே உருவாக்கி இருக்கோம்.

செல்லப்பன் சார் பணியாற்றிய பெரும்பாலான கல்லூரி, பல்கலைக்கழகங்கள்ல அவரோட ஒரு போட்டோகூட எங்களுக்குக் கிடைக்கல. ஆனாலும் தேடித் தேடி பல விஷயங்களைச் சேர்த்தோம். அவரோட தனிப்பட்ட வாழ்க்கை, போர்க்குணம், தமிழ்ப்பணி, மொழிபெயர்ப்பு ஆற்றல்னு நிறைய விஷயங்களை படத்தில் சொல்லியிருக்கோம். இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்த ஆவணப்பட டி.வி.டி-க்களை அனைத்து தமிழகக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியிருக்கோம். இந்த ஆவணப்படத்துக்கான தயாரிப்பு செலவு எல்லாமே அவரோட பழைய மாணவர்களான இன்றைய பேராசிரியர்கள் தந்ததுதான்'' என்கிறார் வெங்கி.

இந்த இடத்தில் ஒரு சின்ன விஷயம்... இத்தனை உயரங்களைத் தொட்ட முனைவர் செல்லப்பன், பிறவியிலேயே ஒரு மாற்றுத்திறனாளி!