சினிமா
Published:Updated:

"எங்கள் உலகத்தைக் கொஞ்சம் பாருங்கள்!”

டி.அருள் எழிலன், படங்கள்: ஆ.முத்துக்குமார்

##~##

''இப்படி காலங்காத்தால வந்து ரோட்டை மறிச்சா, எப்படி ஆபீஸ் போறது?''

''சென்னையில் ரோட்ல உட்காந்து மறியல் பண்றவங்களைக் கடுமையா பனிஷ் பண்ணணும் சார். அப்போதான் இவங்க சரிப்பட்டு வருவாங்க.''

''லத்தி சார்ஜ் பண்ணாம போலீஸ்காரங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க. அடிச்சுத் துரத்த வேண்டியதுதானே?''

போராட்டக்காரர்களின் ஓங்கி ஒலிக்கும் குரல்களை மட்டுமே கேட்டு, போராட்டத்தின் பின்புலம் அறியாமல் சலிப்போடு இப்படிப் புலம்புகிறார்கள் சென்னைவாசிகள். மறியல் காரணமாக நகர முடியாமல் பிதுங்கி நிற்கின்றன வாகனங்கள்.

கடந்த 12 நாட்களாக சென்னையின் பிரதான சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் அத்தனை பேரும், விழித்திறனற்ற மாற்றுத்திறனாளிகள்! நீண்ட ஒரு ரயிலைப் போல கைகளைக் கோத்தபடி வந்து சாலையில் அமர்ந்துவிடுகிறார்கள். கோஷங்களை விண்ணை முட்டும் அளவுக்கு அதிர அதிர எழுப்புகிறார்கள். அடையாளப் போராட்டங்களை மட்டுமே பார்த்துப் பழகிய மக்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் வீரியமிக்க இந்தப் போராட்டங்கள் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கின்றன.

ஆரம்ப நாட்களில், காவல் துறை இவர்களைக் கடுமையாக அணுகியது; சிலரைத் தரதரவென இழுத்துச் சென்றது; சிலரைத் தள்ளிவிட்டது. இவர்கள் எங்கே கூடுகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து, அங்கே முன்னரே சென்று அவர்களை அப்புறப்படுத்தியது. இதனால் போராட்டக் குழு தங்கள் போராட்ட பாணியை மாற்றிவிட்டார்கள். எங்கே மறியல் செய்யப்போகிறோம் என்பதை 15 நிமிடங்களுக்கு முன்புதான் முடிவுசெய்கிறார்கள். போராட்டத்தைத் தொய்வு இல்லாமல் நடத்த, பல குழுக்களாகப் பிரிந்து செயல்படுகிறார்கள்.

"எங்கள் உலகத்தைக் கொஞ்சம் பாருங்கள்!”

இந்தப் போராட்டங்கள் பற்றிச் சொல்கிறார் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் - பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் நாகராஜன்.

''இது, மிகச் சாதாரணமாக ஆரம்பித்த ஒரு போராட்டம். விழித்திறனற்ற மாணவர்கள் - பட்டதாரிகளுக்காக ஒன்பது அம்சக் கோரிக்கைகளை, கடந்த பல ஆண்டுகளாக அரசிடம் முன்வைத்துக்கொண்டே இருக்கிறோம். கடந்த பல ஆண்டுகளாக எங்களுக்கு வேலைவாய்ப்பே கொடுக்கவில்லை.

பொதுவாகவே, 'அரசு வேலை’ என்பது குதிரைக் கொம்பு என்றாலும், எங்களுடைய பிரச்னை பிரத்யேகமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவம், அறிவியல், பொறியியல் போன்ற படிப்புகளை நாங்கள் படிக்க முடியாது. படித்தாலும் வேலை செய்ய முடியாது. கலை, கல்வி தொடர்பான கல்வியை மட்டுமே படிக்க முடியும்; அதற்குரிய வேலைகளுக்குச் செல்ல முடியும். எங்களுக்கு தனியார் துறையில் முற்றிலுமாக வேலை வாய்ப்பே கொடுப்பது இல்லை. இதனால் அரசாங்கத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கிறோம்.

விழித்திறனற்றப் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையரைச் சந்தித்தோம். அமைச்சர் வளர்மதியிடம் முறையிட்டோம். அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அதனால் தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்து இருக்கிறோம்'' என்கிறார்.

''ரோட்டை மறித்து, மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. எங்களின் குரல் அரசின் காதுகளை எட்ட வேண்டும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 16-ம் தேதி சேப்பாக்கத்தில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோம். அன்று மாலை வரை எங்களை அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவே இல்லை. அதனால் உண்ணாவிரதத்தைத் தொடர முடிவு செய்தோம்.

போராட்டத்தை முடிக்கச் சொன்ன போலீஸ்காரர்கள், இரவு 9 மணிக்கு மேல் எங்களை போலீஸ் வேனில் ஏற்றி மதுரவாயல் அருகே இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார்கள். அங்கிருந்து மீண்டும் சேப்பாக்கம் வந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் வந்த போலீஸார் எங்களை வேனில் ஏற்றி, நாங்கள் சோர்ந்துபோகும் அளவுக்கு வேனிலேயே வைத்து ரவுண்ட் அடித்து, எங்களைப் பிரித்து பல இடங்களில் இறக்கிவிட முயற்சி செய்தார்கள். நாங்கள் ஒருவரோடு ஒருவர் கைகோத்துக்கொண்டு இறங்க மறுத்தோம்.  நள்ளிரவு வரை எங்களை வைத்து வேனிலேயே சுற்றியவர்கள், ஆள் அரவமற்ற ஏதோ ஓர் இடத்தில் வலுக்கட்டாயமாக இறக்கி விட்டார்கள். 'இது எந்த இடம்?’ என்று கேட்டபோது, பதிலே சொல்லவில்லை. நாங்கள் வைத்திருந்த தண்ணீர், பிஸ்கட் பாக்கெட், எலுமிச்சைப் பழங்களையும் பறித்துவிட்டு, தார்ப்பாயை எங்கள் மேல் வீசிவிட்டு சென்றுவிட்டார்கள். சோர்வில் தார்ப்பாயை விரித்துப் படுத்துவிட்டோம். காலையில் இயற்கை உபாதைக்காக வந்த பெண்கள், எங்களைப் பார்த்து எழுப்பிவிட்டார்கள். அப்போதுதான் அது சென்னைக்கு வெளியே 'உத்தண்டி’ என்ற இடத்தில் உள்ள சுடுகாடு என்பது தெரிந்தது.

"எங்கள் உலகத்தைக் கொஞ்சம் பாருங்கள்!”

ஆத்திரமும் அவமானமும் உசுப்பிவிட, மறுபடியும் அங்கிருந்து சென்னைக்கு வந்து மறியல் செய்தோம். முதல் நாள் ஒன்பது பேராகத் தொடங்கிய எங்கள் போராட்டத்தில் இன்று நூற்றுக்கணக்கான பார்வையற்ற தோழர்கள் இணைந்திருக்கிறார்கள்'' - உணர்ச்சி பொங்கும் குரலில் பேசுகிறார் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் ராஜா.

ஒவ்வொரு நாள் போராட்டமும் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. களத்தில் போராடுகிறவர்களை வெளியிலிருந்து ஒரு குழுவினர் ஒருங்கிணைக்கிறார்கள். முகம்மது நஸ்ருல்லாஹ் என்கிற விழித்திறன் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் இந்தப் போராட்டம் தொடர்பாக புகார் மனுவை நீதிபதிகளிடம் அளிக்க, அதையே வழக்காகப் பதிவுசெய்த நீதிமன்றம், அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது. இப்போது, 'வேலையில்லா விழித்திறனற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்புத் தேர்வுகள் நடத்தப்பட்டு, பின்னடைவு காலிப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்’ என்பன உள்ளிட்ட, அரசு வேலைவாய்ப்புச் சலுகைகள் சிலவற்றை அறிவித்துள்ளார் முதல்வர். இதையடுத்து, தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது இவர்களின் போராட்டம்.

''ஆள் துணை இல்லாமல் எங்களால் ஒரு சாலையைக்கூட கடக்க முடியாது. யாராக இருந்தாலும், கண் தெரியாதவர்களைக் கரிசனத்தோடுதான் நடத்துவார்கள். ஆனால், போலீஸார் எங்களிடம் மோசமாக நடந்து கொண்டார்கள். எங்களைக் கைதுசெய்யாமல் விடுவதை நீங்கள் கருணை என்று நினைக்கலாம். ஆனால், நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்; நீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றுதான் கைது செய்வதைத் தவிர்க்கிறார்கள்.

பொதுமக்கள் பலரும் நாங்கள் இடையூறு செய்வதாக நினைக்கிறார்கள். பசியில் அழும் நலிந்த குழந்தை ஒன்று உங்கள் ஆடையைப் பிடித்து இழுத்து உணவு கேட்டால் எப்படியோ, அப்படித்தான் நாங்கள் உங்களிடம் வேலை கேட்கிறோம். கொலைகாரன்களைச் சுட்டுக்கொன்றால்கூட கும்பலாக வருகிற மனித உரிமையாளர்கள், பத்து நாட்களாக வதைபடும் எங்களை ஏனோ கண்டுகொள்ளவில்லை. நாங்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான், எங்களின் குரலுக்குப் பின்னே வலி இருக்கிறது; பசி இருக்கிறது; வேதனை இருக்கிறது; இயலாமை இருக்கிறது!'' என்கிறார் சித்ரா.

போராட்டத்தின் முடிவில், தங்களின் தங்கும் இடங்களுக்குச் செல்வதற்காக போலீஸ் வாகனத்தில் வரிசையாகச் சென்று ஏறுகிறார்கள். வாகனம் கிளம்பும்போது உரத்த குரலில் கோஷங்களை எழுப்புகிறார்கள்.

''வேலையே கிடைக்கலே... எங்க வேதனை இன்னும் தீரலே...
சட்டப்பேரவை நடக்குது... சட்டங்கள் பல இயற்றுது...
பார்வையத்தவங்க கோரிக்கை மட்டும் மேசைக்கு மேசை தாவுது...
வேலையே கிடைக்கலே... எங்க வேதனை இன்னும் தீரலே!''