சினிமா
Published:Updated:

கூகுள் கிளாஸ்... உஷார்!

அண்டன் பிரகாஷ்

##~##

ணினிய சாதனங்கள், நம்மைச் சுற்றியும்... நம் மீது நகர்ந்தபடியும் இருக்கின்றன. கணினியாக நமக்கு முன் இருக்கும் மேசையில் இருந்து மடிக்கு நகர்ந்து, தற்சமயம் கைகளில் தவழும் அலைபேசி வரையிலான கணினியச் சாதனங்கள் நம் உடலின் மற்ற பாகங்களைப் பார்த்து நகர்ந்தபடியே இருக்கின்றன.

கை மணிக்கட்டில் கைக்கடிகாரம் போல அணிந்துகொள்பவை, இடுப்பில் பெல்ட் போல அணிந்துகொள்ளும் இணைய சாதனம்... என, மாதம் ஒரு சாதனம் வந்துகொண்டே இருக்கிறது. இவற்றில், இன்னும் வெளிவராத 'கூகிள் கிளாஸ்’ அதற்குள் உலகப் பிரசித்தம் அடைந்துவிட்டது. கண்களில் கண்ணாடி போல அணிந்துகொள்ளும் கூகுள் கிளாஸ் ஐடியாவைக் கட்டமைக்க, பிரமாண்டமான தொழில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், 'கூகுள் கிளாஸ்’ என்பது நம் கண்களுக்கு முன்னால், கேமரா சகிதமாக இருக்கும் ஓர் அலைபேசி அவ்வளவே! 'அது நல்லதுதானே... கையில் அலைபேசியை வைத்துப் பேசுவது, புகைப்படம் எடுப்பது போன்றவற்றை எளிதாகச் செய்ய முடியுமே’ என்ற எண்ணம் எழலாம். ஆனால், கூகுள் கிளாஸ் பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் பிரைவசி பற்றிய சாத்தியக்கூறுகளைத்  தெளிவாகத் தெரிந்துகொண்டால், அந்த எண்ணம் மாறிவிடக்கூடும்.

முதலில் பிரைவசி பிரச்னைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

கூகுள் கிளாஸ்... உஷார்!

கூகுள் கிளாஸின் மிக முக்கிய வசதியாக சொல்லப்படுவது, நம் கண்கள் எதை நோக்குகின்றனவோ, அதை கூகுள் கிளாஸும் கேமரா கொண்டு நோக்கும். நீங்கள் உங்களுக்கு முன் இருப்பவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, உங்களுக்கு வலதுபுறமாக நடந்து செல்லும் மற்றொருவரைப் பார்த்தால், கூகுள் கிளாஸின் கேமரா பக்கவாட்டில் நடக்கும் நபரை ஸ்கேன் செய்து தகவல்கள் திரட்ட முனையும். இடதுபுறமாகச் செல்லும் பேருந்தை ஒரு கணம் பார்க்க முற்பட்டால், கூகுள் கிளாஸ், அந்தப் பேருந்தையும் ஸ்கேன் செய்து அதைப் பற்றிய தகவல்களைத் திரட்டி உங்களுக்கு அளிக்க முற்படும்.

கண் அசைவுகள், நமது உடல்மொழியின் முக்கிய அங்கம் என்பதுடன், மனநிலையைப் பிரதிபலிக்கக்கூடியது என்பதால், கூகுள் கிளாஸ் தொடர்ந்து கண் அசைவுகளைப் பதிவுசெய்துகொண்டே இருக்கும். 'அப்படிச் செய்வதன் மூலம் நமக்குத் தேவையான தகவல்களைத்தானே தருகிறது?’ என்ற கேள்வி எழலாம். அது மேலெழுந்தவாரியாகப் பார்ப்பதற்கு நன்மையாகத் தோன்றினாலும், இதன் மிகப் பெரிய சிக்கல், உங்களைப் பற்றியும், உங்களைச் சுற்றி இருப்பவற்றைப் பற்றியும் தகவல்களை தொடர்ந்து சேகரித்து, பதிவுசெய்யப்பட்டுக்கொண்டே இருக்கும். இது, 'இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாட்டில் அத்தனை ஆரோக்கியமான அம்சமா?’ என்ற கேள்விக்கு, நிச்சயம் நாம் விரும்பும் பதில் கிடைக்காது!

உதாரணத்துக்கு, பல்லாவரத்தில் இருக்கும் சரவணன், தரமணியில் இருக்கும் அலுவலகத்துக்கு பேருந்தில் தினமும் செல்வதைப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளும் கூகுள் கிளாஸ், சரவணன் செல்லும் பாதையில் குறிப்பிட்ட தினத்தில் விபத்து நடந்து போக்குவரத்துத் தடைப்பட்டுவிட்டது என்றால், அவர் வீட்டைவிட்டுப் புறப்பட்டதும், 'ரயிலில் செல்வது நல்லது’ என ஆலோசனை கொடுக்கும். ரயில் நிலையத்துக்குச் செல்ல நடக்கும் பாதையையும் காட்டும்.

கூகுள் கிளாஸ்... உஷார்!

ரயிலில் எதிர்கொள்ளும் பக்கத்து வீட்டு ஷீலா முகத்தை ஸ்கேன் செய்து, சமூக வலைத்தளத்தில் அவரது புரொஃபைல் படித்து, 'ஷீலாவுக்கு இன்று பிறந்த நாள்... வாழ்த்துச் சொல்லு’ என்று சரவணனிடம் சொல்லும். இதெல்லாம் நல்லதுதானே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், ஷீலாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து மட்டும் சொன்னால் ஓ.கே.. ஷீலா, தன் பாய் ஃப்ரெண்டுடன் முந்தைய தினம் எடுத்த படங்களையோ, 'கேர்ள்ஸ் பார்ட்டி’யில் ரிலாக்ஸாக இருக்கும் படங்களையோ உங்கள் விழித்திரையில் திரையிட்டுக் காட்டினால்?

அதுவும், கூகிள் கிளாஸில் சாத்தியம்!

சரவணனைப் பற்றிய தகவல்களை கூகுள் கிளாஸ் மூலமாக, கூகுள் நிறுவனம் சேமித்து வைத்துக்கொள்வதை அவர் விரும்புவாரா என்பது ஒரு பக்கம். அவரைச் சுற்றி இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் சரவணன் மூலம் தங்கள் பிரைவசி பறிபோவதை விரும்புவார்களா?

இந்த பிரைவசி பிரச்னை காரணமாக, கூகுள் கிளாஸில் இயங்கும்வண்ணம் தயாரிக்கப்பட்டு வரும் 'Glassware’ எனப்படும் பல்வேறு மென்பொருட்களுக்கு, முகத்தை ஸ்கேன் செய்து புரிந்துகொள்ளும் Facial Recognition என்ற வசதியைக் கொடுக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறது கூகுள். ஆனால் இத்தகைய அறிவிப்புகள் அனைத்தும், சந்தைப்படுத்துதலின்போது காற்றில் கரைந்துவிடும். அதுவும்போக, நம்மைப் பற்றிய தொடர் பதிவுகளே நிச்சயம் நம் பிரைவசிக்கு விடப்படும் மிகப் பெரிய சவால்தான்!

இதுபோக பிராக்டிகல் பிரச்னைகள் பல உள்ளன...

நீங்கள் பார்க்கும் இடங்களை எல்லாம் தொடர்ந்து பதிவுசெய்துகொண்டே இருப்பதால், கூகுள் கிளாஸை கவனமாகக் கையாள வேண்டியிருக்கும். நீங்கள் ஏ.டி.எம்-மிலோ, வங்கியின் வலைத்தளத்திலோ, இணையத்திலோ, என்ன கடவுச்சொல் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பார்த்து, அதைப் பயன்படுத்தி திருட இயலும்.

கூகிள் கிளாஸில் கண்களுக்கு மிக அருகில் ஒளித்திரையைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் கண்களுக்கு வரும் பாதிப்பு பற்றிய பரிசோதனைகள் அதிக அளவில் நடத்தப்படாததால், இந்தப் பாதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது இப்போதைக்குக் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஆக, உங்களுக்கென்று எந்த ரகசியமும் இல்லாமல், எங்கேயும் எப்போதும் உங்கள் செயல்களை உலகம் உற்று நோக்கிக்கொண்டே இருக்கும் அபாயம் இருக்கிறது. நீங்கள் கூகுள் கிளாஸ் அணிந்திருந்தாலும், உங்களுக்கு அருகில் இருப்பவர் அதை அணிந்திருந்தாலும்!