விகடன் வரவேற்பறை
ஹிட்லர்
ஒருவரலாற்றுப் புதிர்
-ச.இராசமாணிக்கம்
வெளியீடு: சந்தியா பதிப்பகம், ப.எண்.57, 53-வது தெரு, 9-வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை-83.
பக்கங்கள்: 240 விலை:

140

ஹிட்லர் - ஒரு எதிர்மறை முன்னோடி. தொடக்கக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஹிட்லருக்கு இருந்த ஈர்ப்பு, அவர் மக்கள் தலைவராக வளர்ந்தது, யூத இனப் படுகொலைகள், ஹிட்லரின் தற்கொலை என ஒரு வரலாற்றுப் புதினத்தைப்போல விறுவிறுப்பாகச் செல்லும் புத்தகம். ஹிட்லரைப் பற்றி மட்டும் அல்லாமல் கோயபல்ஸ், ஹிட்லரின் காதலி ஈவா பிரவுன், நாஜிக் கட்சித் தலைவர்களான ருடால்ப் ஹெச், அடால்ஃப் எய்ச்மேன் ஆகியவர்களைப்பற்றிய குறிப்புகள் வரலாற்றுப் பின்னணி உரைக்கின்றன. ஹிட்லரின் காதலி ஈவா பிரவுனின் டைரிக் குறிப்புகள் ஹிட்லர் என்னும் மோசமான மனிதனின் இதயத்துக்குள் ஒளிந்திருந்த அன்பையும் அவனது இறுக்கமான தன்மையையும் காட்சிப்படுத்துகிறது என்றால், வதை முகாம்கள் குறித்த புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்கும் ஆவணங்கள். 'என்னுடைய உடைமைகள் அனைத்தும் கட்சிக்குச் சொந்தமாக வேண்டும்!’ என்கிற ஹிட்லரின் உயில், ஒரு மோசமான இனவெறியாளனுக்குள் படர்ந்திருக்கும் நேர்மையைச் சுட்டிக் காட்டுகிறது. நவீனகாலத் தமிழ்நடையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத பழைய நடை சில இடங்களில் அலுப்புத் தட்டுகிறது!
பூச்சி பாச்சா பலிக்காது!
http://www.nomorepests.co.uk

கரப்பான், வெட்டுக்கிளி, மூட்டைப்பூச்சி போன்ற கண்ணுக்குத் தெரியும் பூச்சிகள் நமக்குத் தெரியாமல் என்ன வகை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை விரிவாக ஆராய்ந்து சொல்லும் தளம். எந்த வகை பூச்சிக் கடிக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பதில் இருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெளிவாகக் கொடுக்கிறது!
தலித் மகள்
இயக்கம்: சாய்பாஸ்கர்
வெளியீடு: வேல்முருகன் ஃபிலிம் மேக்கர்ஸ்

தாழ்த்தப்பட்ட பெண்ணைக் காதலித்துக் கை பிடிக்கும் மகனை வீட்டை விட்டு வெளியே துரத்தும் சாதி வெறி பிடித்த அப்பா, மனக் கவலையுடன் வண்டி ஓட்டும்போது விபத்துக்கு உள்ளாகிறார். அவருக்கு ஆபரேஷன் செய்ய மூன்று யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. மகனின் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி ரத்த தானத்துக்கு மறுக்க, தலித் மருமகள் ரத்தம் கொடுத்து மாமனாரைக் காப்பாற்றுகிறார். கொஞ்சம் டிராமா வாக இருந்தாலும், நல்ல விஷயத் தைப் பளிச் என்று சொன்னதற்காகப் பாராட்டலாம்!
காதல் 2 கல்யாணம்
இசை: யுவன்ஷங்கர் ராஜா ,வெளியீடு: சோனி மியூஸிக் விலை:

99

சிநேகனின் 'நீ கேட்டதால் சொன்னேன்... கேட்காததை! நீ சொன்னதால் கேட்டேன்... சொல்லாததை!’ போன்ற க்ரீட்டிங் கார்டு காதல் வரிகள் சுவாரஸ்யம் 'இது காதலாய் இருந்திடுமோ’ பாடலில். கிளப் டிஸ்கோ சாயலில் ஒலித்து தாளமிடத் தோன்றுகிறது 'தேடி வருவேன்’ பாடல். யுவன் மிகவும் மெனக்கெடாத மெலடி 'எனக்காக உனக்காக’. பழகிய தொனியில் டெம்ப்ளேட்டாக ஒலிக்கிறது 'நான் வெட்டப் போற ஆடு’ பாடலின் இசை. யுவன் டச் இல்லாத யுவன் ஷங்கர் ஆல்பம்!
ஆழ்ந்த வாசிப்பை நேசிக்க...
http://kuttyrevathy.blogspot.com

கவிஞர் குட்டி ரேவதியின் வலைப்பூ இது. அவர் எழுதிய கட்டுரைகளும் கவிதைகளுமே வலைப்பூவில் முக்கிய இடம்பிடிக்கின்றன. தன்னைப் பாதித்த பல கவிதைகளை யும் வாசகர்களின் வாசிப்புக்கு அளிக்கிறார் குட்டி ரேவதி. பரந்த வாசிப்பனுபவத்தின் சாரத்தை வலைப்பூ வாசகர் களுக்கு அளிக்கும் குட்டி ரேவதியின் இந்த வலைப்பூ, ஆழ்ந்த வாசிப்பனுபவம் வேண்டுபவர்களுக்கானது!