சென்னை: "விஷால் அணியினர் மாற்றம் கொண்டு வருவோம் என்கின்றனர். அவர்களால் மாற்றம் வராது. ஏமாற்றம்தான் வரும்" என்று நடிகர் ராதாரவி கூறினார்.

நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட, சரத்குமார் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ராதாரவி நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
துணைத்தலைவர் பதவிக்கு சிம்புவும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணனும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நளினி, டி.பி.கஜேந்திரன், ராம்கி, கே.ராஜன். ரவிகுமார், பசி சத்யா, ஜாகுவார் தங்கம், ஜெயமணி உள்பட 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களுக்கு ராதாரவி அளித்த பேட்டியில், "நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெறும். தேர்தலில் வென்ற பிறகு நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவோம். நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் நல்லது செய்வோம்.
எதிர் அணியினர் மாற்றம் கொண்டு வருவோம் என்கின்றனர். அவர்களால் மாற்றம் வராது. ஏமாற்றம்தான் வரும். நடிகர் சங்க கூட்டங்களுக்கு அவர்கள் வந்தது இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு மாற்றம் கொண்டு வருவதற்கு தகுதி இல்லை. குழப்பம்தான் செய்வார்கள். நல்லதை அவர்களால் செய்ய முடியாது.
நலிந்த நடிகர்களையும், நாடக நடிகர்களையும் வெளியே அனுப்புவதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது. நடிகர் சங்க கட்டட பிரச்னையில் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதில் உண்மை இல்லை. அவர்கள் பின்னணியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.