சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் அதிமுக நடிகர், நடிகைகள் போட்டியிட அக்கட்சி தலைமை திடீர் தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் சரத்குமார் அணி, விஷால் அணி மோதுகிறது. சரத்குமார் ஆளும்கட்சிக்கு ஆதரவாக உள்ளார். எனவே, ஆளும்கட்சியினர் ஆதரவு இருப்பதாக கூறி சரத்குமார் ஆதரவு நடிகர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், அதிமுகவில் இருக்கும் விஷால் அணி நடிகர், நடிகைகள் கடும் குழப்பம் அடைந்தனர். இந்த தகவல் அதிமுக தலைமைக்கு சென்றது. அதனால் அதிமுகவில் இருக்கும் நடிகர், நடிகைகளை அழைத்து கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது கட்சியில் உறுப்பினராக உள்ள நடிகர், நடிகைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்கள் யாரும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று பன்னீர் செல்வம் தடைவிதித்தார்.

சரத்குமார் அணியில் நடிகர்கள் தியாகு, குண்டு கல்யாணம், சேலம் ஏ.சவுண்டப்பன், நடிகைகள் குயிலி, பாத்திமா பாபு, விந்தியா ஆகியோரும், விஷால் அணியில் சரவணன், அஜய் ரத்னம், ரித்தீஷ் ஆகியோருக்கும் சங்க தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதையறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசியல் சாயம் இல்லாமல் இதுவரை நடந்து வந்த நடிகர் சங்க தேர்தலில் முதன்முறையாக அரசியல் புகுந்திருக்கிறது. அதிமுகவினர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று அதிமுக தடை விதித்ததன் மூலம் நடிகர் சங்க தேர்தலுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டிருக்கிறது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.