சேலம்: எனக்கும், சரத்குமாருக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சேலத்தில் நாடக நடிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் விஷால் அங்கே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''நடிகர் சங்கத்தை வலுப்படுத்துவதற்காகவே நான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறேன். சரத்குமார் அணியினரின் சமரசப் பேச்சுவார்த்தையை மதிக்கிறேன். ஆனாலும் சமரசப் பேச்சுவார்த்தையில் எனக்கு உடன்பாடில்லை.

தேர்தலில் பங்கு கொள்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை. அவ்வாறு தேர்தலில் நிற்பது குற்றம் என்றால், அந்த குற்றத்தை செய்யப்போகிறேன்.
'தன்னுடைய சொந்தப் பிரச்னை தொடர்பாகத்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்த விஷால் நினைக்கிறார்' என்று சரத்குமார் அணியினர் கூறியிருக்கின்றனர். நான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்க நினைக்கவில்லை. குடும்பங்களை சேர்த்து வைக்கவே தற்போது தேர்தலில் நிற்கிறேன். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், மனச்சாட்சிக்கு உகந்து வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளோம்'' என்றார்.