அக்டோபர் 18 ஆம் தேதி நடக்கவிருக்கும் நடிகர்சங்கத்தேர்தல் பெரும் பரபரப்பாகியிருக்கிறது. விஷால் அணியினர், தமிழகம் முழுவதும் உள்ள நாடகநடிகர்களைச் சந்திக்கப் புறப்பட்ட அதேநேரம், சென்னையில் சரத்குமார் அணி சார்பில் பத்திரிகையாளர்சந்திப்பு நடந்தது.

அந்தச்சந்திப்பில், ராதிகா, பாக்யராஜ், பூர்ணிமாபாக்யராஜ், சிம்பு, மோகன்ராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். அக்டோபர் 2 ஆம் தேதி நடந்த விஷால்அணியினர் நடத்திய கூட்டத்திலும் பாக்யராஜ் கலந்துகொண்டார். நேற்று சரத்குமார் அணியின் கூட்டத்திலும் அவர் பங்கேற்றது எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
பாக்யராஜ் பேசும்போது, இரண்டுஇடங்களிலும் பங்கேற்றது எதனால்? என்பதை விளக்கிப்பேசினார். " நான் அந்தக்கூட்டத்துக்குப் போனது என் மகனுக்காகத்தான். வரவில்லையென்று சொன்னால் அவன் கோபித்துக்கொள்வான். மனைவியை வைத்துத்தான் அவனிடம் பேசவேண்டியிருக்கிறது.
அந்தளவுக்குக் குடும்பத்திலேயே குழப்பம் உண்டாகிவிட்டது. அந்தக் கூட்டத்துக்குப்போய், இரண்டுதரப்பும் சமரசமாகப் போகவேண்டும் என்று பேச நினைத்தேன். அங்கிருந்த சூழலில் அதைப்பேசமுடியவில்லை. இப்போது இங்கு வந்ததும் அதைச் சொல்லத்தான்.
இரண்டுஅணிகள் தேர்தலில் போட்டியிடலாம், ஆனால் பிளவாக மாறிவிடக்கூடாது, இனிமேல் இந்தஅணியைச் சேர்ந்தவர்கள் படங்களில் மட்டும்தான் இவர்கள் நடிப்பார்கள், அந்த அணியைச் சேர்ந்தவர்கள் படங்களில் அவர்கள் மட்டும்தான் நடிப்பார்கள் என்கிற சூழ்நிலை உண்டாகிவிடக்கூடாது என்பதற்காகவே நான் பேசுகிறேன் என்று விளக்கமளித்தார்.