மதுரை: களவு போன நடிகர் சங்கத்தை மீட்டெடுக்க விஷால், நாசர் கொண்ட பாண்டவர் அணியால் மட்டுமே முடியும் என்று நடிகர் வடிவேலு கூறினார்.

அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியினரும், விஷால் அணியினரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், விஷால் அணியினருக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு நேற்று நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, ''மதுரையில் நாடக சங்க உறுப்பினர்களை சந்தித்து பாண்டவர் அணிக்கு ஆதரவு திரட்டினேன். நாடக நடிகர்கள் படும் இன்னல்களை கேட்டு மனம் நொந்து போய்விட்டேன். அவர்களின் குறைகளைத் தீர்க்கவும், களவுபோன நடிகர் சங்கத்தை மீட்டெடுக்கவும் விஷால், நாசர் கொண்ட பாண்டவர் அணியால் மட்டுமே முடியும்.
சரத்குமார் அணியினர் தோற்றுப் போய்விடுவோம் என்று உறுதியாக எண்ணிவிட்டார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட பீதி காரணமாகத்தான் சமாதானம் பேச அழைக்கிறார்கள். இந்த சமாதானத்தின் பின்னணியில் ஒருவித உள்நோக்கமும், சூழ்ச்சியும் இருப்பதாக நினைக்கிறோம். அதற்கு நாங்கள் பலியாக மாட்டோம். சமரசம் கிடையாது என்று விஷால் திட்டவட்டமாக கூறி விட்டார். ஜனநாயக முறைப்படி நடக்கும் இந்த தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெறுவது உறுதி.
ராதிகா பேசும்போது, விஷாலை ரெட்டி, ரெட்டி என்று சொன்னார். அந்தச் சமயத்தில் ராதிகா பக்கத்தில் இருந்த ஊர்வசியை, இவர் மலையாளி, மலையாளி என்று சொல்ல வேண்டியதுதானே? ஒற்றுமையாக இருக்கும் சங்கத்தில் சாதி, மதத்தை வைத்து பிரிக்க நினைப்பது வருத்தமாக உள்ளது. ஒருவேளை ரஜினி எங்களுக்கு ஆதரவு தெரிவித்தால், அவரை மராட்டிய சிவாஜி என்று சொல்லி விடுவார்கள்போல் இருக்கிறது. எங்கள் சங்கத்தில் சாதி, மதம் கிடையாது என்பதைத் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
விஷால், பெரிய நடிகர் இல்லை. குறைந்த சம்பளம் வாங்குகிறார். அவரால் எப்படி சங்கக் கட்டடம் கட்ட முடியும்? எனக்கு இப்போது படம் இல்லை. அதனால் நான் பேசக் கூடாது என்று சொல்வதெல்லாம் கேட்கும்போது வேடிக்கையாக உள்ளது. நரிக் கூட்டம் என்றெல்லாம் சிம்பு சொல்வது சரியில்லை. அவர் மிகவும் நல்லவர். இப்படியெல்லாம் அவர் பேசக் கூடாது என்பதுதான் எனது கருத்து.
எனக்கும் விஜயகாந்துக்கும், பிரச்னை இருக்கும்போது சரத்குமார்தான் உதவி செய்தார் என்று ராதிகா சொல்வது சுத்தப் பொய். அதில் துளியளவும் உண்மை இல்லை. கமல் எங்களுக்கு ஆதரவு தருகிறார் என்றால், அனைத்து விஷயத்தையும் தெரிந்த பின்தான் அவர் இந்த முடிவு எடுத்து இருக்கிறார். அதேபோல் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நடிகர் சங்கத்தில் நடக்கும் அனைத்து விஷயமும் தெரியும். அவர் இதனை அரசியலாக்க விரும்பவில்லை. எனவேதான் தன் கட்சி சார்ந்தவர்களை போட்டியிட வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார். கடந்த சட்டசபையில் தேர்தலின்போது எதற்காக நான் பிரசாரம் செய்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். நான் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர் எல்லாம் கிடையாது. எந்த அரசியல் கட்சியிலும் நான் இல்லை என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்" என்று கூறினார்.