சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் சரத்குமார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இந்த இரு அணியை சேர்ந்தவர்களும் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
நடிகர் விஷால், ''நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்திருக்கிறது. நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல் பற்றி விசாரிக்கப்படும்'' என்று கூறி வருகிறார்.
இந்நிலையில், சரத்குமார் சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் விஷால் மீது புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் சரத்குமார், "விஷால் என் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். என் நற்பெயருக்கு களங்கும் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பும் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரூ.10 கோடி நஷ்ட ஈடு தர உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால், ''சரத்குமார் தொடர்ந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். சரத்குமார் மீதான புகாருக்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன'' என்று கூறியுள்ளார்.