அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

7G ரெயின்போ காலனி!

'7ஜி ரெயின்போ காலனி'
பிரீமியம் ஸ்டோரி
News
'7ஜி ரெயின்போ காலனி'

தமிழ் சினிமா இயக்குநர்களின் தரமான பட்டியலில் செல்வராகவனும் இணைந்த படம்!

சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடக்கிற காதல் கதை. சராசரி இளைஞனின் விடலைத்தனம்தான் கதையின் அடித்தளம். உடல் அழிந்தாலும் உணர்வுகள் அழிவதில்லை என்பதையும், காதல் தோல்விகள் தற்கொலையில் முடியக்கூடாது என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிற படம்.ஏகப்பட்ட அரியர்ஸ், எக்கச்சக்க கெட்ட பழக்கங்கள், அப்பாவை மதிக்காமல் சுற்றித் திரியும் பொறுப்பற்ற முரட்டுப் பையனாக புதுமுகம் ரவி கிருஷ்ணா. அவர் வசிக்கிற ரெயின்போ காலனிக்கு சோனியா அகர்வாலின் குடும்பம் குடி வருகிறது. இந்த இரண்டு பாத்திரங்களுக்கிடையே நடக்கிற சீண்டல்களும் சீற்றங்களும் மிகைப்படுத்தப்படாத கவிதையாக முன்னேறிக்கொண்டே போகிறது. பகட்டான தகுதிகள் எதுவும் இல்லாவிட்டாலும், போலித்தனங்கள் இல்லாத ஒரு ஆணை எந்தப் பெண்ணும் விரும்பத்தான் செய்வாள் என்று ஓர் இலக்கணம் சொல்லி இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.குடும்ப நிர்பந்தங்கள் காரணமாக வேறொருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட சோனியா அகர்வால், உயிராக நேசிக்கும் ரவி கிருஷ்ணாவுக்கு ஒருமுறை தன்னையே பரிசாகக் கொடுக்கத் தீர்மானிக்க, காதலன் அதை ஏற்கத் தயங்க... அங்கே காதலியின் முடிவுக்கு நியாயம் கற்பிக்கும் ஒரு நீண்ட வசனக் காட்சி. அதைத் தொடர்ந்து, விரசத்தின் எல்லை நோக்கிப் பயணிப்பதுபோல் லேசாக பயம் காட்டி, காதலர்கள் உடலால் கலக்கும் காட்சியை நளினமாகச் சொல்லி, பளிச்சென்று முக்கால் படத்தில் ஒரு திருப்புமுனையைத் தருகிறார் இயக்குநர். 

'7ஜி ரெயின்போ காலனி'
'7ஜி ரெயின்போ காலனி'

அடுத்தவர்களைக் கவர்கிற அளவுக்குத் தன்னிடம் தனித் திறமை எதுவுமில்லை என்று ஏக்கப்படுகிற இளைஞர்களைக் குறி வைக்கும் இன்னொரு கதை.நெருக்கடியான அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கே உரிய நல்லது கெட்டதுகளை நுணுக்கமாக வரிசைப்படுத்தியிருக்கும் விதம் ரொம்ப இயல்பு. சென்னையின் முரட்டு பாஷை, ஃபுட் போர்டு பயணம், அடாவடி கிரிக்கெட் ஆட்டம் என்று இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையை அப்படியே திரையில் உலவ விட்டதும் ஜோர்தான். காலனி விழாவில், ஏட்டிக்குப் போட்டியாக மைக் பிடிக்கும் ஹீரோ அண்டு கோ, `ராஜா... ராஜாதி ராஜா' என்று கனகாரியமாக பாட்டைக் கொலை பண்ணுகிற காட்சியில் குபீர் சிரிப்பு.ஆனால், காட்சிக்குக் காட்சி கெட்ட வார்த்தை, பீர் பாட்டில், மூச்சு முட்டும் புகை என்று காட்டித்தான் இளைஞர் உலக `யதார்த்தத்தை' நிலைநாட்டி இருக்க வேண்டுமா?நடுத்தர குடும்பத்து அப்பாவுக்கும், ஊதாரி மகனுக்கும் இடையிலான உறவுமுறை தமிழ் சினிமாவுக்குப் புதுசில்லை. ஆனால், வேலை கிடைத்த விஷயத்தை சந்தோஷமாக வந்து சொல்கிற மகனிடம் எரிச்சலோடு பேசுகிற அப்பா விஜயன், பிறகு அதற்குச் சொல்கிற காரணம் அசத்தலான ஒரு பக்க சிறுகதை.முதல் படம் என்ற சுவடே தெரியாமல் அசத்தியிருக்கிறார் ஹீரோ ரவி கிருஷ்ணா. ஆனால், பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு, தலையை மேலும் கீழும் ஆட்டியபடி பேசுகிற போது, `காதல் கொண்டேன்' தனுஷை ஞாபகமூட்டுகிறார். நிதானமிழந்து, வெறிகொண்டு கூச்சலிடுகிற காட்சிகளிலும், தனுஷை இப்படித்தான் இயக்கியிருந்தார் இயக்குநர்.

'7ஜி ரெயின்போ காலனி'
'7ஜி ரெயின்போ காலனி'

அனிதா பாத்திரத்தில் சோனியா பிரமாதப்படுத்தியிருக்கிறார். பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கண்களில் தீ பறக்க ஹீரோவைச் செருப்பால் அடிக்கும்போதும், `உன்னோட வொய்ஃபா ஒரே ஒரு நிமிஷம் வாழ்ந்தாக்கூட போதும்டா' என்று பிறகு அவரிடமே உருகும்போதும் இரு துருவ பரிமாணம் காட்டியிருக்கிறார்.படத்தின் இன்னொரு ஹீரோ - இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. குறிப்பாக முக்கிய காட்சிகளின் பின்னணியில் இழையோடும் இவரது தீம் மியூசிக், அதன் உருக்கத்தால் நம் அடிவயிற்றை என்னவோ செய்கிறது. பாடல்களின் போது இவருக்குப் பக்கபலமாக நா.முத்துக்குமாரின் கவிதை வரிகள்.மென்மையான சோலை காட்சிகளாகட்டும். முரட்டுத்தனமான சாலைக் காட்சிகளாகட்டும் தன்மை புரிந்து வீரியத்தைக் கூட்டியிருக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா. அசுர வேக சாலைப் போக்குவரத்தில் வாகனங்கள் தறிகெட்டு ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் காட்சிகளில் இவரது காமிராவும் டாப் கியரில் பயணித்திருக்கிறது.

'7ஜி ரெயின்போ காலனி'
'7ஜி ரெயின்போ காலனி'

இத்தனை அம்சங்கள் இருந்தாலும் படத்தின் பின்பாதி ஆனாலும் ரொம்பவே நீளம். கைவசம் பளிச்சென்று கற்பனை இருக்கிறது என்பதற்காகவே, அதில் எதையும் விட்டுத் தர மனசில்லாமல் அடுக்கிக்கொண்டே போயிருக்கிறார்கள். இதனால், பொறுமை இழந்து நெளிவதைத் தவிர்க்க முடியவில்லை. அதேபோல், என்னதான் முரட்டுப் பையன் என்றாலும், தான் குடியிருக்கிற அப்பார்ட்மெண்ட்டுக்குள்ளேயே இத்தனை அராஜகங்களை அரங்கேற்றுவானா என்ற கேள்வியும் இடையிடையே எழுந்து அடங்குகிறது.நிஜ உலகத்தை நெருங்கிப் பார்த்து படமெடுக்க வந்திருக்கும் தமிழ் சினிமா இயக்குநர்களின் தரமான பட்டியலில் செல்வராகவனும் இடம் பிடிக்கிறார்.

- விகடன் விமரிசனக்குழு

(31.10.2004 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)