சினிமா
Published:Updated:

காட்சித்திரையில் கபில்தேவின் கனவு!

1983 - இந்திய கிரிக்கெட் அணி
பிரீமியம் ஸ்டோரி
News
1983 - இந்திய கிரிக்கெட் அணி

இந்தப் படத்துக்காகத் தங்கள் கதைகளை 15 வீரர்களும் பகிர்ந்திருக்கிறார்கள். அந்த 15 பேரும் கபிலை முன்னிலைப்படுத்த அனுமதித்திருக்கிறார்கள்.

கிரிக்கெட்டை ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் ரசித்துக்கொண்டிருக்கும் இந்திய ரசிகர்களுக்கு, ரீவைண்ட் பட்டன் அழுத்தி ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் ரீப்ளே காட்டியிருக்கிறது ‘83.’ இந்திய கிரிக்கெட்டின் சூப்பர்ஹிட் தருணத்தையும், அதற்குக் காரணமாக இருந்த சூப்பர் ஸ்டார்களையும் பெரிய திரையில் காட்டி நெகிழச் செய்திருக்கிறார்கள். இரண்டரை மணி நேரம், கடந்த காலத்தில் அமரவைத்து கண்ணீர் சிந்த வைத்திருக்கிறார்கள்.

1983 உலகக் கோப்பையை வென்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் உறையவைத்த இந்திய அணியின் சாதனையைத் திரைப்படமாக்கியிருக்கிறார் பாலிவுட் இயக்குநர் கபீர் கான். உண்மைச் சம்பவங்களில் கொஞ்சம் மசாலா கலந்து, ஒரு கமர்ஷியல் சினிமாவாகக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

அந்த மகத்தான சம்பவத்தை நேரில், தொலைக்காட்சியில், ரேடியோவில், செய்திகளில் ரசித்தவர்களுக்கு, ரசித்தவர்கள் மூலம் செவிவழியாக அதைக் கேட்டு மெய்சிலிர்த்திருந்தவர்களுக்கு, இது ஒரு அட்டகாசமான நாஸ்டால்ஜியா பயணம். கபில் தேவ் எனும் மாபெரும் ஜாம்பவானின் பங்களிப்பை இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், இது கபில்தேவின் பயோபிக் படமாக இல்லாததுதான் அவர் மீதான பிம்பத்தை இன்னும் சிறப்பாகக் கட்டமைத்திருக்கிறது!

இது இந்தியா 1983-ல் உலகக் கோப்பை வென்றதைப் பற்றிய படம்தானே ஒழிய, கபில் தேவ் பயோபிக் அல்ல. எந்தவொரு தருணத்திலும் ஒரு அணியின் வெற்றியை, ஒற்றை நபரின் வெற்றியாக உருவகப்படுத்திட முடியாதே! அதனால், இங்கு கபில் தேவை ஹீரோவாக்க முடியாது. ஆனால், இத்தனை காலம் நாம் அவரை ஹீரோவாக்கியே வைத்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் அதை நியாயப்படுத்தக் கிடைத்திருக்கும் ஓர் ஆவணம். படத்தில் ஸ்ரீகாந்தாக வரும் ஜீவா, “நாங்க எல்லாம் ஜாலியா இங்க வந்தா, கபில் என்னடான்னா வெஸ்ட் இண்டீஸ ஜெயிப்போம்னு பேட்டி தர்றார். He is a Mad captain.” என்பார். கபிலின் அந்த அசுரத்தனமான நம்பிக்கைதான், ஒரு போட்டியைக்கூட அதற்கு முன்பு வென்றிடாத இந்தியாவைக் கோப்பையைத் தொட்டுப் பார்க்க வைத்தது.

இந்தப் படத்துக்காகத் தங்கள் கதைகளை 15 வீரர்களும் பகிர்ந்திருக்கிறார்கள். அந்த 15 பேரும் கபிலை முன்னிலைப்படுத்த அனுமதித்திருக்கிறார்கள். அவரைச் சுற்றிப் படம் நகர்வதை, அவர்தான் இந்த உலகக் கோப்பையை வென்றதற்கான காரணம் என்பதை உணர்த்தும் வசனங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், நிஜ வாழ்விலும் அவர்கள் அதை ஒப்புக்கொண்டிருந்தார்கள். அந்தக் கோப்பையை வெல்வதற்கு முன்பு, அதை ‘கபிலின் மிஷன்’ என்றே குறிப்பிட்டார்கள். வென்றபிறகு அதைக் கபிலின் உழைப்பென்றே குறிப்பிட்டார்கள். இன்றும்கூட அது கபிலின் கனவுக்கான பரிசு என்றுதான் சொல்கிறார்கள்.

காட்சித்திரையில் கபில்தேவின் கனவு!

பெரிய அனுபவம் கொண்டிராத, சரியாக ஆங்கிலம் பேசத் தெரிந்திராத கபிலை, தங்கள் தலைவனாக, தளபதியாக அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அதுவே, ஓர் அணியைப் பற்றிய படத்திலும் ஒரு ஹீரோவை உருவாக்கியிருக்கிறது! கபிலை, ரன்வீரை ஹீரோவாக்கியிருப்பது இயக்குநர் கபீர் கான் அல்ல. அந்த அணிதான். ஏனெனில், கபில் ஒரு சூப்பர் ஹீரோதான்!

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு, இது கபிலின் படமாக மட்டுமே இல்லை என்பதுதான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில் யஷ்பால் ஷர்மா ஆடிய அட்டகாச ஆட்டம், மொஹிந்தர் அமர்நாத்தின் நாக் அவுட் ஹீரோயிசம், சந்தீப் பாட்டீல், வெங்சர்க்கார், கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி என ஒவ்வொரு வீரரின் பங்களிப்புக்கும் உரிய மரியாதை செய்திருக்கிறார்கள். கபிலை மட்டுமே கொண்டாடுபவர்களுக்கு, இவர்களையும் ஞாபகப்படுத்தியிருக்கிறது ‘83.’

கோப்பைக்காகப் போராடிய அணியின் வெற்றியையே நாம் மிகப்பெரிய அளவில் கொண்டாடுகிறோம். மானத்துக்காகப் போராடிய அந்தக் கத்துக்குட்டி அணியின் போராட்டத்தை இந்தத் தலைமுறைக்கு எடுத்துவந்திருப்பதே கொண்டாடப்படவேண்டிய விஷயம். ‘நாம என்ன டாக்டரா, எஞ்சினியரா? கிரிக்கெட் பிளேயருக்கு எவன் பொண்ணு கொடுப்பான்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அந்த நிலையிலிருந்த இந்திய கிரிக்கெட்டை இந்தச் சூழலுக்குக் கொண்டுவந்தவர்களுக்கு, சிறப்பான முறையில் மரியாதை செய்திருக்கிறது இந்தப் படம்.

ஸ்போர்ட்ஸ் பயோபிக் படங்களில் உருவ ஒற்றுமை மிகவும் அவசியம். இதில் ஒருபடி மேலே போய் பெவிலியனுக்குள் நடக்கும் தோரணையிலிருந்து, பௌலிங் செய்யும் விதம், சிக்ஸர் அடிக்கும் விதம் எனப் பலவற்றைச் சரியாகச் செய்ய வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இவர்கள் இப்படித்தான் ஆடினார்கள் எனக் காட்டும் ஒரு தருணம், அதை 100 சதவிகிதப் பொறுப்புடன் சரியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் கபீர் கான். படத்தில் மோஹிந்தர் அமர்நாத்தின் தந்தை லாலா அமர்நாத்தாக மோஹிந்தர் அமர்நாத்தையே நடிக்க வைத்தது; மேற்கு இந்திய முன்னாள் வீரர்களின் மகன்களைப் பயன்படுத்தியது என `83’ படத்தில் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமே இல்லை.

கபில் தேவ் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடித்த 175 ரன் சாதனையை அப்போது நடந்த போராட்டத்தால், பிபிசி வீடியோ பதிவு செய்யவில்லை. அந்தக் குறையைப் போக்கியிருக்கிற்து இந்தத் திரைப்படம். அறிவியலின் முன்னேற்றத்தைக் காரணம் காட்டி, கடந்த காலத்தை சுய நினைவோடு மறந்துகொண்டிருக்கிறோம் நாம். வரலாற்றுக்கு ஒரு எக்ஸ்பயரி டேட் வைத்து அதன் வயதைக் குறைத்துக்கொண்டிருக்கிறோம். இன்று யார் சாதிக்கிறார்களோ அவர்களையே சரித்திரத்தின் முதல் படியில் நிற்கவைக்கிறோம். விராட் கோலி போன்ற ஒருவரே இப்போது கடந்த காலம் ஆகிக்கொண்டிருக்கையில், இந்தக் கதை இன்றைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான தருணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது!