விகடன் வரவேற்பறை
நினைவுகளின் சுவட்டில் - வெங்கட் சாமிநாதன்
வெளியீடு: அகல், 342, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, சென்னை-14.
பக்கங்கள்: 336 விலை:

170

தமிழின் மூத்த இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன் தன் 74 வயது வரையிலான வாழ்க்கை நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் நூல். 'எழுத்துலகிலும் வெளியிலும் நான் சந்தித்த சில மனிதர்கள், அவர்களது சில குறைகளையும் பலவீனங்களையும் மீறி உன்னதமானவர்கள்தான்!’ என்று சொல்லும் வெங்கட் சாமிநாதன், தனது வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்த சாதாரண மனிதர்கள் தொடங்கி, கரிச்சான்குஞ்சு முதலான எழுத்தாளர்கள் வரை தனது நினைவுத் தடங்களைப் பதிந்துள்ளார். தனது எழுத்துக்களில் எப்போதும் திராவிட இயக்கம் குறித்து எதிர்மறையான பதிவுகளையே செய்யும் வெ.சா 'எனக்குப் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதே திராவிடர் கழகம் ஊர்கள் தோறும் நடத்தி வந்த படிப்பகங்கள்தான்’ என்று சொல்வது சுவாரஸ்யம்!
ஐடியா மரம்! http://www.exploratree.org.uk

'இப்படி ஒரு விஷயம் செய்யலாம்’ என்று தோன்றுகிறது. ஆனால், மறந்துவிடுகிறீர்கள். நீங்கள் நினைப்பதை இங்கே எழுதி வைத்துவிடுங்கள். அதை எப்படி, எப்போது செயல்படுத்தப்போகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதில் கொடுத்தால், செடி வடிவில் உங்கள் ஐடியாவுக்கு வரைபடம் காட்டும். அடுத்தடுத்த நாட்களில் ஐடியாவை மெருகேற்றினால், அது புதுப்புது இலையாக உருவெடுத்து மரமாக வளர்ந்து நிற்கும். நீங்கள் உங்கள் செடியை வளர்க்காதபோது, நினைவூட்டலும் உண்டு. நினைத்ததை நிறைவேற்றிய திருப்தியோடு அடுத்த ஐடியா விதையை விதைக்கலாம்!
பசி இயக்கம்: எல்.ஜெயபால்

'உலகை இயக்கும் ஒரே சக்தி... பசி! அதனால், பசி என்று வருவோர்க்கு உணவளிப்போம்’ என்ற கருத்தை வலியுறுத்தும் குறும்படம். வியாபாரத் தலங்களில் துரத்தப்பட்டு, பிச்சைக்காரர்களால் அடிக்கப்பட்டு, ஒரு வாய் சோற்றுக்காக அலைகிறார் மனநலம் பிறழ்ந்த பெண் ஒருவர். இன்னொரு பக்கம் இனிப்புகள், பழங்கள், விருந்து என்று வளைகாப்பு நிகழ்ச்சியில் சந்தோஷத்தின் உச்சியில் திளைக்கிறார் ஒரு கர்ப்பிணிப் பெண். பசி தாங்க முடியாமல் மனநலம் பிறழ்ந்த பெண் எதைச் சாப்பிடுகிறார் என்பது முகத்தில் அறையும் க்ளைமாக்ஸ். அதைப் பார்க்கும் கர்ப்பிணிப் பெண்ணின் மனமாற்றத்தை பாஸிட்டிவ்வாகச் சொல்லி முடிக்கிறார்கள்!
தகவல் கடல்! www.thagavalthulikal.blogspot.com

பல்வேறு தகவல்களைத் திரட்டித் தரும் வலைப்பூ. நம் தலைமுடியின் உண்மையான நிறம் வெள்ளை. மெலனின் என்ற நிறமி கலக்கும்போது தலைமுடி அடையும் மாற்றங்களை விளக்கும் பதிவு, செல்போன் சிக்னல் கிடைக்காத இடத்துக்குச் செல்ல நேரிட்டால், 112 என்கிற எண்ணுக்கு போன் செய்தால், உடனடியாக நெட்வொர்க் கிடைக்கும் என்னும் தகவல், விமானம் பறப்பது எப்படி, செயற்கையான முறையில் தண்ணீரைத் தயாரிக்கும் சாத்தியங்கள் என பலப் பல சங்கதிகள். ஆப்கானிஸ்தானின் கனிமப் புதையல், உலகின் மிகப் பெரிய புகைப்படம், ஈ.சி.ஜி ரீடிங்கை டாக்டருக்கு அனுப்பும் செல்போன் எனப் பல தளத் தகவல்!
காவலன் இசை: வித்யாசாகர் வெளியீடு: வீனஸ் விலை:

99

எந்த விஜய் படத்திலும், எங்கும் பொருந்தக்கூடிய பாடல் 'விண்ணைக் காப்பான் ஒருவன்’, எதிர்காலத் தலைவருக்கான கட்டியம் கூறுகிறது. 'யாரது, வித்யாசாகரா இந்தப் பாடலுக்கு இசையமைத்தது?’ என்று கேள்வி கேட்கும் அளவுக்கு மிகச் சாதாரணமாகக் கடக்கிறது 'யாரது யாரது’ பாடல். விஜய்யின் நடனத் திறமைக்கு ஓவர் டைம் வேலைவைக்கும் 'ஸ்டெப் ஸ்டெப்’ பாடலின் ஸ்டெப் மியூஸிக். கேட்டுப் பழகிய மெட்டாக இருந்தாலும், தாளமிடவைக்கிறது 'பட்டாம்பூச்சி கூப்பிடும்போது’ பாடல். அழுந்தத் தடம் பதிக்காத விஜய் பட ஆல்பம்!