Published:Updated:

கடிகாரம், மொபைல், டி.வி... எதுவும் இல்லை...! நிருபரின் 24 மணி நேர திக்திக் ‘பிக் பாஸ்’ அனுபவம் #BiggBoss

கடிகாரம், மொபைல், டி.வி... எதுவும் இல்லை...! நிருபரின் 24 மணி நேர திக்திக் ‘பிக் பாஸ்’ அனுபவம் #BiggBoss

கடிகாரம், மொபைல், டி.வி... எதுவும் இல்லை...! நிருபரின் 24 மணி நேர திக்திக் ‘பிக் பாஸ்’ அனுபவம் #BiggBoss

கடிகாரம், மொபைல், டி.வி... எதுவும் இல்லை...! நிருபரின் 24 மணி நேர திக்திக் ‘பிக் பாஸ்’ அனுபவம் #BiggBoss

கடிகாரம், மொபைல், டி.வி... எதுவும் இல்லை...! நிருபரின் 24 மணி நேர திக்திக் ‘பிக் பாஸ்’ அனுபவம் #BiggBoss

Published:Updated:
கடிகாரம், மொபைல், டி.வி... எதுவும் இல்லை...! நிருபரின் 24 மணி நேர திக்திக் ‘பிக் பாஸ்’ அனுபவம் #BiggBoss

ஒருநாள் முழுவதும் மொபைல் பயன்படுத்தாமல் உங்களால் இருக்க முடியுமா? கையில் சல்லிப் பைசா இல்லாமல் பயத்துடன் அலையும் திக்திக் நொடிகளை நினைத்துப் பார்க்கமுடிகிறதா? வெளியுலகோடு சுத்தமாக தொடர்புகள் அறுந்து நேரம் காலம் கூடத் தெரியாமல் உலா வர உங்களால் முடியுமா? சுற்றிலும் கேமராக் கண்கள் கூர்ந்து நோக்க, நீங்கள் மூச்சு விடும் சத்தத்தைக் கூட ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா? பெரிதாக பரிச்சயம் இல்லாத 13 பேரோடு நூறு நாள்கள் பொழுதைக் கழிக்க வாய்ப்பிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் உங்களின் பதில் ஆம் என்றால்... வெல்கம் டு 'பிக்பாஸ்'

கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, பல கோடி ரூபாய் பட்ஜெட், பதினான்கு செலிபிரிட்டிகள், முதன்முறையாக தமிழில் என எக்கச்சக்க விஷயங்கள் இருக்கின்றன இந்த ஷோவைப் பற்றிச் சொல்ல. அதை எல்லாம் தாண்டி சொல்ல வேண்டியது அந்த ஒரு க்ரவுண்டு வீடு உங்களுக்குள் நிகழ்த்தும் உளவியல் மாற்றங்களைத்தான். பிக் பாஸ் குழுவின் சார்பில் அந்த வீட்டில் 24 மணிநேரம் வசிக்க வருமாறு எங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புதான் இந்த மாற்றங்கள் எங்களுக்குள் நிகழ்ந்ததற்கான தொடக்கப் புள்ளி. நாங்கள் இருவர், பிற ஊடகங்களில் இருந்து 12 பேர் என பதினான்கு போட்டியாளர்கள். மொத்தம் 53 கேமராக்கள். மெயின் ஷோவிற்கான ட்ரெய்லராக இருந்தது இந்த 24 மணிநேர அனுபவம் - எங்களுக்கும் பிக் பாஸ் குழுவிற்கும்!

வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு அவர்களின் ரேடாரில் இருந்து தப்பிப் பிழைப்பது நாம் போட்டிருக்கும் ஆடைகள் மட்டும்தான். உணவு வகைகளுக்கு உள்ளே அனுமதி கிடையாது. மருந்து மாத்திரைகளைக் கூட தீவிர பரிசோதனைக்குப் பின்பே அனுப்புகிறார்கள். பாக்கெட்டில் இருக்கும் மொபைலுக்கு அனிச்சையாய் கை போவது நம் எல்லாருக்குமே பழக்கம்தான். அப்படிப் போகும் கை வெறுமையாய் திரும்புவதில் தொடங்குகிறது முதல் பயம். பிடித்தவர்களுடனான சாட் தடைபடுவது தொடங்கி வேலை சம்பந்தப்பட்ட போன்கால்கள் வரை... மூச்! பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் மட்டுமல்ல, எந்தவித எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் அனுமதி இல்லை. தீவில் தனித்திருக்கும் தருணத்திலும் புத்தகம் சிறந்தத் துணை என்பதால் இங்கே அதற்கும் அனுமதி இல்லை. பேனா, பேப்பருக்குக் கூட கொடுத்து வைக்காது உங்களுக்கு! சுருங்கச் சொன்னால்... உங்களைச் சுற்றி இருக்கும் அந்த 13 பேரும் ஸ்பீக்கரின் வழி அவ்வப்போது கசியும் எந்திரக் குரலும்தான் அடுத்த நூறு நாள்களுக்கான உலகம்.

இப்படி சும்மாவே இருந்தால் எப்படி பொழுது போகும்? வேறென்ன வழி? வாய் வி.ஆர்.எஸ் வாங்கும்வரை பேசிப் பேசி பொழுதுகளைத் தீர்க்கவேண்டும். அதிலும் ஒரு செக்மேட். உங்கள் கழுத்தோடு ஒரு குட்டி மைக்ரோபோனை எந்நேரமும் மாட்டிக்கொள்ள வேண்டும். குளிக்கும்போது மட்டுமே அதைக் கழற்றிக்கொள்ள அனுமதி. நாள்கள் ஆக ஆக, வெளியே இருப்பவர்களை பற்றி எல்லாம் பேசித் தீர்த்து வெறுத்து உங்களின் சக ரூம்மேட்களைப் பற்றியே பேசத் தொடங்குவீர்கள். முதல் கொஞ்ச நாள்கள்தான், மைக் இருப்பது உறுத்தி நல்லவர் வேஷம் எல்லாம். ஒரு கட்டத்தில், பொறுமை இழந்துவிடுவோம். நல்லதும் கெட்டதுமாக நீங்கள் பேசும் அந்த ஒலிக்குறிப்புகள் நாளை ஊரே பார்க்கும்படி டிவியில் வெளியாகும். முதல் மூன்று மணிநேரம் அமைதி காத்த நம்மால், அதற்கு மேல் வாயைக் கட்ட முடியவில்லை. ட்ரம்ப் தொடங்கி தண்டையார்பேட்டை குழாயடி சண்டை வரை மற்ற மீடியா நண்பர்களோடு பேசித் தீர்த்தோம். மைக் வழி கேட்டவர்களின் நிலைமை 'ஒய் பிளட் சேம் பிளட்தான்'! நல்லவேளை அவை எதுவும் ஒளிபரப்பாகாது.  

‘வாய் வலிக்குது பாஸ். தூங்குறோம்' என்றெல்லாம் பிக்பாஸை ஏமாற்றிவிடலாம் என்றுதான் நாங்களும் நினைத்தோம். ஆனால், நினைத்த நேரம் தூங்கவும் முடியாது. நண்பர் ஒருவர் அசதியில் லேசாக கண்ணசர விசித்திரமான ஒலிகளை அலறவிட்டு அவரை பதற வைத்தார்கள். தூக்கம் பாவம் பல கி.மீ தூரம் தள்ளிப்போயிருக்கும். அவர்களாக விளக்குகளை அணைக்கும்போதுதான் நீங்கள் தூங்கவேண்டும். எங்குமே கடிகாரம் இருக்காதென்பதால் பகல் இரவு மட்டுமே தெரியுமே தவிர டைம் தெரிய வாய்ப்பே இல்லை. அவர்கள் விளக்குகளை அணைக்கும்போதுதான் உங்களுக்கு குட்நைட் டைம்!

பிக்பாஸின் பிரதான மந்திரமே 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' என்பதுதான். வீடும் அதைப் போலவே! 53 கேமராக்கள்! குளியலறை, கழிவறை மட்டுமே விதிவிலக்கு. அங்கேயும் நீங்கள் உள்ளே சென்று கதவை மூடிக்கொள்ளும் வரை கேமராக்கண்கள் கண்காணிக்கும். மறைப்பில்லாத பொதுவான படுக்கையறை, கிச்சன், இருபாலருக்கும் பொதுவான ரெஸ்ட்ரூம்கள் என வீட்டின் அமைப்பே அயர்ச்சியைத் தருகிறது. காலைக்கடன்களை முடிப்பதற்குள் இரண்டு சின்னச் சின்ன சண்டைகளுக்கு நாட்டாமை பண்ணவேண்டிய நிலைமை எங்களுக்கு! வீட்டின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் வீடு முழுக்கத் தெரியும்படி வடிவமைக்கப்பட்டிருப்பதால் தும்முவதைக் கூட சங்கடத்தோடு செய்யவேண்டிய நிலை. 

வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, துணி துவைப்பது என எல்லாவற்றையும் அவரவர்களே செய்துகொள்ள வேண்டும். இங்குதான் பெரும்பாலான சண்டைகள் தொடங்கும். அதிகபட்சம் மூன்று பேர் மட்டுமே ஒருநேரத்தில் சமைக்க முடியும் என்பதால் யார் யார் எப்போது சமைப்பது என்பதில் சிக்கல் வரும். எங்களில் ஒருவருக்கு பசி வர அவர் பத்துப் பேரையும் மறந்து காச்மூச் என கத்தத் தொடங்கிவிட்டார். வெளியுலகில் இருந்து உங்களுக்கு வரும் அதிகபட்ச உதவி சமைப்பதற்கான மளிகைப் பொருட்களும், மைக்கிற்கான பேட்டரிகளும்தான். அதுவும் பூட்டிய அறைக்குள் இருக்கும். பெல் அடித்தவுடன் ஓடிச் சென்று அந்த அறை திரும்பப் பூட்டிக்கொள்வதற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக, நீங்கள் பார்க்கப்போவது 13 பேர் மற்றும் கமல் என மொத்தம் 14 பேரின் முகங்களை மட்டும்தான்.

குறிப்பிட்ட இடைவேளைகளில் விளையாட்டுகள், போட்டிகள் போன்றவை நடக்கும். நம்மை ஒரு பெட்ரூமில் அடைத்து ஸ்கீரீன் போட்டு மூடி தேவையான ஏற்பாடுகளை செய்தபின் திறந்துவிடுவார்கள். இந்தச் சின்ன சின்ன விளையாட்டுகள்தான் உங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை குலைத்து குரோதத்தை வளர்க்கப் போகும் வில்லன். ‘அவன் போங்கு பண்ணிட்டான்டா’, ‘இந்தப் பொண்ணுக்கு விளையாடவே தெரியலை’ என நீங்கள் அடிக்கும் கமென்ட்களை நாளை டிவியில் உங்களுக்குத் தெரிந்தவர்களே பார்ப்பார்கள். நீங்கள் கட்டிக் காப்பாற்றிய குட் பாய் இமேஜ் எல்லாம் காற்றில் பறக்க வாய்ப்பிருக்கிறது. எங்களுக்கு இப்படி நடத்தப்பட்ட போட்டியில் போராடி ஜெயித்தார் ஒரு ஊடக நண்பர். மறுநாள், 'ஏன்டா ஜெயித்தோம்?' என்றாகிப்போனது அவருக்கு. 

வாரம் ஒரு முறை அங்கிருக்கும் confession அறைக்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், 'நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்பும் நபர் யார்? என்ன காரணத்துக்காக வெளியேற்ற நினைக்கிறீர்கள்? என இரண்டு கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் அந்த வாரம் முழுவதும் போட்ட சண்டைகள், வளர்த்த நட்புகள் ஆகியவையே இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தீர்மானிக்கும். அதிகமான போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபர் உடனடியாக வெளியேற்றப்படுவார். இரண்டு பேருக்கு சமமான ஓட்டுகள் விழுந்தால், மற்றவர்கள் குழுவாய் பேசி அவர்களில் ஒருவரை ஒருமனதாக வெளியே அனுப்பவேண்டும். முதல் நாள் போட்டியில் ஜெயித்த நண்பர் மற்றவர்களின் வயிற்றெரிச்சலை ஏராளமாக கிளறியிருப்பார் போல. அவருக்கு எதிராக எக்கச்சக்க ஓட்டுகள் விழுந்திருந்தன. அவரோடு ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவரே எதிராக வாக்களித்திருந்தார். யெஸ்... பிக்பாஸ் வீட்டிற்குள் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. 24 மணிநேரம் அந்த வீட்டில் இருந்ததே விவரிக்க முடியாத வித்தியாச காக்டெயில் அனுபவமாக இருக்கிறது. நூறு நாள்கள் அந்த உலகத்தில் இருந்துவிட்டு திரும்பும்போது நிறையவே மாறியிருக்கும்... உங்களுக்கு உள்ளும் புறமும்!