நா.சிபிச்சக்கரவர்த்தி

''வணக்கம். சொல்லுங்க... நாட்டு நடப்பைப் பத்தி கேட்கப்போறீங்களா? அம்மா ஆட்சியில எல்லாமே நல்லாத்தானே இருக்கும்!'' - செம அமர்த்தலாக அ.தி.மு.க. கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
''அச்சச்சோ..! விகடன் கொஸ்டீன் பேப்பர் கஷ்டமா இருக்குமே. பார்டர்ல பாஸ் ஆனாலே பெரிய விஷயம்தான்!'' - உஷார் முன்னுரையுடன் சமூக சமத்துவப் படையினரின் நிறுவனத் தலைவர் சிவகாமி.
''இருக்கிற இருப்புல குறும்புக் கேள்விகள் வேறயா? சரி... நம்ம பொது அறிவும் எப்படி இருக்குனு பார்க்கலாம்... கேளுங்க!'' - புறக்காரணிகளைக் கண்டு கொள்ளாமல் ரிலாக்ஸாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
''இப்பத்தானே பிரசாரம் முடிச்சிட்டு வர்றேன். கொஞ்சம் நியூஸ்லாம் ரெஃப்ரெஷ் பண்ணிக்கவா?'' - சிறிய இடைவேளைக்குப் பிறகு கேள்விகளை எதிர்கொண்டார் தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு.
''மத்தியில் ஆட்சி அமைப்பதற்குக் குறைந்தபட்சம் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றிபெற வேண்டும்?''
பதில்: 272
நாஞ்சில் சம்பத்: ''272.''
சிவகாமி: ''இப்போ இருக்கிற நிலவரத்துக்கு 278'' என்றவர் பதிலைக் கேட்டதும், ''எப்படியோ ஆன்ஸருக்குப் பக்கத்துல வந்துட்டேன்லே!''
ஜி.ராமகிருஷ்ணன்: ''மொத்தம் 543. அதுல பாதின்னா 271. அதுல ஒண்ணு கூட்டினா 272. அவ்வளவு சீட் தேவை. ஆனா, இந்தக் குறைந்தபட்ச எண்ணிக்கைகூட இப்போ யாருக்கும் கிடைக்காது போல!''
தங்கம் தென்னரசு: ''272.''

'' 'எங்க கூட்டணியில இருக்கும் கட்சிகளின் பேரை நான் சொல்லப் போறதில்லை. ஏன்னா, ஏதாவது ஒரு கட்சிப் பேரை நான் சொல்லாம விட்டுட்டா, அதையே பிடிச்சுக்குவாங்க!’ என்று பிரசாரத்தில் சொல்லிய அரசியல் பிரபலம் யார்?''
பதில்: விஜயகாந்த்.
நாஞ்சில் சம்பத்: ''இவரு பேரை நான் சொல்லப்போறதில்லை. ஆனா, முன்னுக்குப் பின் முரணா, என்ன பேசுறோம்னே தெரியாத, குடிகாரனைக்கூட குழப்பும் தலைவர் அவர். காரத்தைக் குறைச்சுராதீங்க... நான் சொன்னதை அப்படியே நச்சுனு எழுதுங்க!''
சிவகாமி: ''யாரு... நம்ம விஜயகாந்தா?!'' என்று சிரித்துக்கொள்கிறார்.
ஜி.ராமகிருஷ்ணன்: ''இப்போதைய நிலவரத்துல தி.மு.க. கூட்டணியில அவ்வளவு நிறைய கட்சிகள் இல்லை. அ.தி.மு.க-வுல யாருமே இல்லை. காங்கிரஸ்ல... ம்ஹும் சுத்தம்! தமிழ்நாட்டுல பி.ஜே.பி. கூட்டணியிலதான் நிறைய தலைவர்கள் இருக்காங்க. அப்படிப் பார்த்தா, இப்படிச் சொல்றவரு விஜயகாந்தாதான் இருக்கும்! சரியா?'' 'சரி’ என்றதும் தன் கணிப்பு உண்மையான சந்தோஷத்தில் பெரிதாகச் சிரித்துக்கொள்கிறார்.
தங்கம் தென்னரசு: ''விஜயகாந்த்! நான் அவர் பேசினதை எல்லாம் கேட்கலை. ஆனா, இப்படி ஒரு பிரசாரத்தை தமிழ்நாட்டுல வேற யாரு பண்ண முடியும்?! தமிழ்நாட்டுல இப்போ ஈவினிங் டைம்பாஸ் விஜயகாந்த் பிரசாரம்தான். வடிவேலு காமெடியை எல்லாம் ஒரே அடியில் ஓவர்டேக் பண்ணிட்டாரு!''

''ஃபேஸ்புக் ஆரம்பித்ததற்காக அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கைப் பாராட்டிய தமிழக அரசியல் தலைவர் யார்?''
பதில்: மு.கருணாநிதி.
நாஞ்சில் சம்பத்: ''தெரியலையே! யாருப்பா... சொல்லுப்பா?'' என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, ''ஓ... அவரா? முதல்ல தன் பேர்ல ஃபேஸ்புக் பக்கம் திறந்து, ஃபேஸ் எல்லாம் கறையாகி, வேற வழி இல்லாம ஃபேஸ்புக் பக்கத்தை மூடிக்கொண்ட தமிழகத் தலைவர்தானே அவர்! அவர் பாராட்டித்தான் பேசுவார்... வேற வழி!''
சிவகாமி: '' 'வைகோ’வாகத்தான் இருப்பாரு! இல்லையா? ஏதாவது க்ளூ கொடுங்க..!'' என்றவர் என்ன நினைத்தாரோ, ''கேள்வி எல்லாம் நான் எதிர்பார்த்ததைவிட கஷ்டமா இருக்கு. நான் இந்த ஆட்டத்துக்கே வரலை. என்னை விட்டுடுங்க!'' என்று சிரித்தார். 'இன்னும் இரண்டே கேள்விகள்தான்’ என்று தாஜா செய்து ஆட்டத்தில் பங்குகொள்ள வைத்தேன்.
ஜி.ராமகிருஷ்ணன்: கேள்வியை இரண்டு முறை சொல்லிப் பார்த்தவர், ''கலைஞரா?'' என்று ஒரு யூகத்தில் கேட்டார். 'ஆம்’ என்றதும், ''இந்தக் கேள்விக்கு குத்துமதிப்பாத்தான் பதில் சொன்னேன். கரெக்ட் ஆகிடுச்சு!''
தங்கம் தென்னரசு: மின்னல் வேகத்தில் வருகிறது பதில். ''கலைஞர்... 'என்னய்யா... இப்படி ஒரு புது டெக்னாலஜி வந்திருக்கு. அதை யாரு பண்ணாங்க?’னு விசாரிச்சு பாராட்டக்கூடிய ஒரே தலைவர் கலைஞர்தான். ஃபேஸ்புக்ல எல்லாக் கட்சிகளும் பேஜ் ஆரம்பிச்சுப் பிரசாரம் பண்றாங்க. ஆனா, எத்தனை கட்சித் தலைவர்களுக்கு ஃபேஸ்புக் மார்க் பண்ணிருக்காருனு தெரியும்? அதான் கலைஞர் ஸ்டைல்!''
''வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் மிகச் சிறிய நாடாளுமன்றத் தொகுதி எது?''
பதில்: லட்சத் தீவுகள்
நாஞ்சில் சம்பத்: ''ஐம்மு கஷ்மீரா..? இல்லையா! தெரியலைப்பா!''
சிவகாமி: ''நீலகிரி..! ஓ... இந்தியாவுலனு கேட்டீங்கள்ல... தெரியலையே!''
ஜி.ராமகிருஷ்ணன்: ''சிறிய வாக்காளர் தொகுதி... லட்சத் தீவுகள். போன வாரம்தான் படிச்சேன். பரவாயில்லை... சுலபமான கேள்விகளாத்தான் கேட்கிறீங்க!''
தங்கம் தென்னரசு: ''புதுச்சேரியா? இல்லை அந்தமானா..? இல்லையா... தெரியலையே!'' பதிலைச் சொன்னதும், ''ஓஹோ... நான் இந்தியாவோட இந்தப் பக்கம் போனதுக்குப் பதிலா, அப்படியே அந்தப் பக்கம் போயிருக்கலாம். ஏதோ ஒரு தீவுனு நினைச்சேன்!''

'' 'எனக்கு மூணு கட்சில சேரச் சொல்லிக் கேட்டிருக்கு!’ என்று கூறிய பிரபல நடிகை யார்?''
பதில்: நமீதா.
நாஞ்சில் சம்பத்: சட்டென ''குஷ்பு'' என்றவரிடம், 'இல்லை’ என்று சொன்னதும், ''வேற யாரைக் கூப்பிட்டாங்க..? இருங்க... சொல்றேன். ஆங்... ஞாபகம் வந்துடுச்சு. என்கிட்டயே பேசுனாங்களே. நமீதாதானே! 'நான் உங்க கட்சில சேர்றேன்’னு என்கிட்ட சொன்னாங்க. 'அதைப் பத்தி நான் முடிவு எடுக்க முடியாது. முதல்வர் அம்மாதாங்க முடிவு எடுக்கணும். நீங்க வேற யாரு மூலமாவது பேசிப் பாருங்க. என்னை ஆளை விட்ருங்க’னு சொல்லிட்டேன். அப்புறம்... தம்பி... தம்பி... 'மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் நித்தம் நித்தம் தமிழைக் கொலை செய்யும் நமீதா’னு போட்டுக்கோங்க!''
சிவகாமி: ''குஷ்புவும் ராதிகாவும் ஏற்கெனவே ஃபீல்டுல இருக்காங்க. சினிமா பத்தி எனக்கு அவ்வளவு ஜி.கே. இல்லியே!'' என்றவர் பதிலைச் சொன்னதும், ''நமீதாவுக்கு அழைப்பு வரலைன்னா தானே தப்பு!'' என்று சிரிக்கிறார்.
ஜி.ராமகிருஷ்ணன்: ''குஷ்புவைக் கூப்பிட மாட்டாங்க. ஏன்னா, தி.மு.க-வுல இருக்காங்க. ராதிகா... கணவர் சரத்குமாரோட இருக்காங்க. அதனால நமீதாவாத்தான் இருக்கும். ஏன்னா, பேப்பர்ல நமீதா படத்துக்குப் பக்கத்துல அரசியல் தொடர்பா ஏதோ தலைப்பு இருந்துச்சு. 'அது எல்லாம் ஒரு செய்தியா..? படிக்கலாமா... வேண்டாமா?’னு யோசிச்சு சும்மா பார்த்து வெச்சேன். அது இப்போ கைகொடுக்குது! பார்த்தீங்களா சின்னச் சின்னத் தகவல்களையும் மதிச்சதால, இப்போ அஞ்சு கேள்விக்கும் பதில் சொல்லிட்டேன்!''
தங்கம் தென்னரசு: ''முன்னணி நடிகையா சார்?'' எனக் கேட்டுவிட்டுச் சிரிக்கிறார். ''நடிகைகள் சமாசாரமா இருக்கே... இதுக்கு நான் டக்குனு பதில் சொன்னாலும் சிக்கல்தான். 'பாருடா இவருக்கு லட்சத் தீவுக்குப் பதில் தெரியலை. ஆனா, நடிகை பத்தி யோசிக்காமலே பதில் சொல்லிட்டாரு’னு கமென்ட் அடிப்பாங்க! அதனால நான் கொஞ்சம் யோசிச்சே பதில் சொல்றேன்!'' என்று சிரித்தவர், சில நிமிடங்களுக்குப் பிறகு, ''உண்மையாவே தெரியலை சார்!'' என்றார் இன்னும் பெரிதாகச் சிரித்தபடி!