Published:Updated:

‘கொதிக்கும் தார் எனக்குக் குளிர் நீர்!’

கதிர்பாரதி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

''எனது முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் எவற்றால் ஆனவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களால் ஆனது!'' - 1982-ம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வானொலிக்கு அளித்த பேட்டியின்போது, அவரது ஆழ்மனதில் இருந்து வந்த வார்த்தைகள் இவை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இறந்து இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் காலத்தால் துருப்பிடிக்காத தெம்பும் திராணியும் கொண்டவை அவரது திரைப்பாடல்கள்.

இவற்றின் பின்னணியில் இருக்கும் வலி, வாழ்வு, வரலாற்றை 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாட்டாளி - படைப்பாளியான வரலாறு (1930-1959)’ என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இருக்கிறார் பு.சாரோன்.

கல்யாணசுந்தரத்துக்குத் திருமணம் ஆகும் வரை, அவரோடு சென்னை ராயப்பேட்டை பொன்னுசாமித் தெரு 10-ம் நம்பர் வீட்டில் தங்கியிருந்த ஓவியர் கே.என்.ராமசந்திரன் மற்றும் பட்டுக்கோட்டையாரின் நண்பர்கள் பலரைச் சந்தித்து அவரது நினைவுகளைப் பதிவுசெய்கிறது ஆவணப்படம்.

‘கொதிக்கும் தார் எனக்குக் குளிர் நீர்!’

''இன்னைக்கும் மக்கள் மனசுல பாட்டுக்கோட்டைக் கட்டி வாழும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு, நாடக நடிகர் ஆகணும்ங்கிறதுதான் லட்சியம். ஆனா, பால்ய வயசுல அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. 'தஞ்சைப் பகுத்தறிவு சிங்கம்’ அணைக்கரை டேவிஸ்தான் எழுதப் படிக்கக் கத்துக்கொடுத்தார். இவர் வீட்லதான் கல்யாணசுந்தரம், பட்டுக்கோட்டை அழகிரியைச் சந்திச்சார். அவரோட நடிப்பு ஆசையைத் தெரிஞ்சுக்கிட்ட அழகிரி, மதுரை சக்தி நாடக சபாவில் சேர சிபாரிசுக் கடிதம் கொடுத்து அனுப்பினார். தன் பாடல்களால் இன்னைக்கும் கதாநாயகனா வாழ்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு, நாடகத்துல நடிக்கக் கிடைச்ச முதல் வாய்ப்பு வில்லன் ரோல். 'ராஜகுரு’, 'கவியின் கனவு’ நாடகங்களில் வில்லனாக நடிச்சார். இதுக்கு முன்னாடி இந்த வில்லன் ரோல்ல நடிச்சவர், பின்னாளில் பிரபல வில்லனான எம்.என்.நம்பியார் என்பது சுவாரஸ்ய முரண்.

1950-ம் வருஷம் நடிகர் டி.கே.பாலச்சந்தரோட மக்கள் நாடக மன்றம் சார்பா திண்டுக்கல் காந்தி மைதானத்தில் 'கண்ணின் மணிகள்’ என்ற நாடகம் போட்டாங்க. நாடகத்தைப் பார்த்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் பேசும்போது, நாடகத்துக்காக கல்யாணசுந்தரம் எழுதின

'தேனாறு பாயுது
செங்கதிர் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது-
ங்கிற பாடல் வரியைச் சுட்டிக்காட்டி, மக்கள் கவிஞருக்குரிய தரம் இந்த வரிகளில் இருக்கிறது’னு பேசினார். அவர் வாக்கு, பின்னாளில் பலிச்சது.

கல்யாணசுந்தரம், சினிமா பாடல் வாய்ப்புத் தேடின காலகட்டத்தில் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் பாடல்களாவே பதிஞ்சி வெச்சிருக்கார். உதாரணத்துக்கு சில...

ஒருநாள், கலைவாணர் என்.எஸ்.கே-யைப் பார்க்கப் போயிருக்கார் கல்யாணசுந்தரம். இவரது கஷ்டங்களைத் தெரிஞ்ச அவர், 'ஏன் தம்பி இப்படிச் சிரமப்படறீங்க? ஊருக்குப் போயிப் பொழைக்கிற வழியைப் பாருங்க’னு சொல்லி 100 ரூபாய் கொடுத்திருக்கார். அப்போ எழுதிய பாடல் இது...

'புழலேரி நீரிருக்க
போக வர காரிருக்க
பொன்னுசாமி சோறிருக்க
போவேனோ சென்னையை விட்டு
தங்கமே தங்கம்
நான் போவேனோ தங்கமே தங்கம்..!’

இந்தப் பாடலில் வரும் பொன்னுசாமி சோறு என்பது, இன்றைக்கும் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் பொன்னுசாமி ஹோட்டல். அந்த ஹோட்டல் பக்கத்தில்தான் தங்கியிருந்தார். அங்கேதான் அவருக்கு சாப்பாடு.

‘கொதிக்கும் தார் எனக்குக் குளிர் நீர்!’

சென்னை வாணிமஹால் பக்கமா நடந்துபோகும்போது கல்யாணசுந்தரத்தோட செருப்பு அறுந்துபோச்சு. கையில் எடுத்துக்கிட்டுப் போயிருக்கார். எதிரே வந்த நண்பர் ஒருவர் 'என்ன கல்யாணசுந்தரம்... செருப்பு அறுந்துபோச்சா?’ என்று சிரித்திருக்கிறார். அப்போது அவருக்குப் பதில் சொல்றது போல எழுதின பாட்டு இது...

      'உறுப்பறுந்து போனாலும் உள்ளம் கலங்கேன்
      செருப்பறுந்து போனதற்கோ சிந்திப்பேன்
      நெருப்பை எதிர்ப்பதற்கும் அஞ்சாத
       எண்ணம் படைத்தாற்பின்
       கொதிக்கும் தார்
       எனக்குக் குளிர் நீர்.’

அப்போ மருதகாசி, கண்ணதாசன் எல்லாம் மார்டன் தியேட்டர்ஸுக்குப் பாடல் எழுதிக்கொண்டிருந்த நேரம். அந்த நிறுவன முதலாளி டி.ஆர்.சுந்தரம்தான் படம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் ஒப்புதல் செய்வார். அவரது அறையில் அவருக்கு மட்டும்தான் நாற்காலி இருக்கும். சந்திக்க வருபவர்கள் நின்றுதான் பேசணும். அவரிடம் கல்யாணசுந்தரத்தை அறிமுகப்படுத்தி, 'இவர்தான் புதுசாப் பாட்டு எழுத வந்த கவிஞர்’னு சொல்லியிருக்கார் எம்.எஸ்.வி. உடனே, 'பாட்டு எழுதுங்க பார்ப்போம்’னு டி.ஆர்.சுந்தரம் சொல்ல, கல்யாணசுந்தரம் பேப்பர் ஒன்றில் 'மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவும்’னு எழுதிக் கொடுத்திருக்கார். அதன் பிறகுதான் தன்னைச் சந்திக்க வருபவர்கள் உட்கார்ந்து பேச நாற்காலிகளைப் போடச் சொன்னாராம் சுந்தரம்.

கல்யாணசுந்தரம், ஒருபோதும் அடுத்தவர் வாய்ப் பைத் தட்டிப் பறித்தவர் அல்ல. அடுத்தவருக்குப் போகவேண்டிய பாடல் வாய்ப்பு தனக்கு வந்தபோதும் அதை மறுத்து ஒதுக்கிய பண்பாளர்.

‘கொதிக்கும் தார் எனக்குக் குளிர் நீர்!’

அந்தக் காலத்தில் ஏவி.எம்-க்கு கண்ணதாசனும், ஜெமினி ஸ்டுடியோவுக்கு கொத்தமங்கலம் சுப்புவும் பாட்டு எழுதுவாங்க. 'ஜெமினி’ தயாரிச்ச 'இரும்புத்திரை’ படத்துக்குப் பாடல் எழுத கல்யாணசுந்தரத்துக்கு அழைப்பு வந்தப்போ, 'அங்க கொத்தமங்கலம் சுப்புனு ஒரு கவிஞர் இருக்கார். அவர் எழுதுறதுதான் நியாயம். நான் வர மாட்டேன்’னு சொல்லிட்டார். இதைக் கேள்விப்பட்ட கொத்தமங்கலம் சுப்பு, பட்டுக்கோட்டையாரை நேரில் சந்தித்து, 'நீங்க கட்டாயம் எழுதணும்’னு வற்புறுத்தவே...

'கையில வாங்குனேன்
பையில போடலை...
காசு போன இடம் தெரியலை’
- ங்கிற பாட்டு எழுதினார். அந்தப் பாடல் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனுக்குப் பிடித்துப்போகவே 'இரும்புத்திரை’ படத்திலேயே நாலு பாட்டு எழுதினார் கல்யாணசுந்தரம்.

இவரது பாடல் புனையும் திறனைப் பார்த்த எம்.ஜி.ஆர். தன்னுடைய படங்களுக்கு மட்டுமே பாடல் எழுத ஒப்பந்தம் போடலாம்னு சொல்லிருக்கார். ஆனாலும், எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பாட்டு எழுதுறவராத்தான் இருந்திருக்கார்.

1955-58 ஆண்டுகளில் 19 இசையமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதின ஒரே கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மட்டும்தான். திரைப்பாடல்கள் தொகுப்பாகி முதன்முதலாகப் புத்தகமாக வந்த பெருமை பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்கு உண்டு. கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம்தான் கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சென்னை பெரம்பூரில் நடந்த தொழிலாளர் கூட்ட மேடையில் பேசினார்.

‘கொதிக்கும் தார் எனக்குக் குளிர் நீர்!’

குறுகிய காலத்தில் திரையுலகில் பெரிய சாதனை செஞ்ச பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தோட கடைசி ஆசை, 10 நாள் காஷ்மீர்ல தங்கி இருந்து ஒரு புத்தகம் போடுற அளவுக்கு கவிதைகள் எழுதணும்ங்கிறதுதான். ஆனா, அது கடைசி வரை நிறைவேறலை. இந்தத் தகவலைச் சொல்லும்போது ஓவியர் கே.என்.ராமசந்திரனுக்குக் கண்ணு கலங்கிப்போச்சு.

'இந்த ஆவணப்படத்தை நாம் தியேட்டர்ல வெளியிடலாம். நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன். 'மானமுள்ள தமிழர்கள் இந்தப் படத்தைப் பார்க்கணும்’னு நாம விளம்பரம் பண்ணுவோம்’னு ஆவணப்படத்தை எடிட் பண்ணின லெனின் சார் சொன்னார். அவர் ஆசைப்பட்டது போல என்னால் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியுமானு தெரியலை. அதனால் இந்த மாசமே வாணி மஹாலில் எம்.எஸ்.வி., இளையராஜா ரெண்டு பேரும் சேர்ந்து வெளியிட, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி கௌரவம்மாள் ஆவணப்படத்தின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார். 'மானமுள்ள தமிழர்கள்’னு இல்லை... ஒவ்வொரு தமிழர் வீட்லயும் இருக்கவேண்டிய ஆவணப்படம் இது. இந்த ஆவணப்படத்துக்குப் பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பற்றி முழுத் தகவல் அடங்கிய வலைதளம் ஒன்றை உருவாக்குவது என் அடுத்த இலக்கு. என் தேடல் தொடரும்'' என்று முத்தாய்ப்புடன் முடிக்கிறார் இயக்குநர் பு.சாரோன்.