நா.சிபிச்சக்கரவர்த்தி
''தம்பி... சாப்பிட்டுட்டு இருக்கேன். பத்தே நிமிஷத்துல உங்க கேள்விகளுக்குப் பதில் சொல்லிடுறேன்!'' - ஒன்பதாவது நிமிடத்திலேயே கேள்விகளை எதிர்கொள்ளத் தொடங்கினார் நீதியரசர் சந்துரு.
''அய்யய்யோ... இந்த வம்பே வேணாம்யா! அறிவை யூஸ் பண்ற கேள்வியாக் கேட்பீங்க... வி.ஐ.பி-களுக்கே பதில் தெரியாது. நான் என்னத்தைச் சொல்லப்போறேன். ஆத்தா... என்னைக் காப்பாத்து!'' - உற்சாக உதறலுடன் தயாரானார் நடிகர் தம்பி ராமையா.
''ஆந்திராவில் வாக்குப்பதிவு வேலைகளில் மும்முரமா இருக்கேன். இதோ இப்பத்தான் வாக்குப்பதிவு இயந்திரங்களை சேஃப்ட்டி பண்ணிட்டு கொஞ்சம் மூச்சு விட்டுருக்கோம். கேளுங்க... கேளுங்க!'' - ஆர்வமாக வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்.,
'''ஜெனரல் நாலேட்ஜ்னா என்ன?’னு கேட்குற ஆளு நான். என்கிட்ட போய் ஜெனரல் நாலேட்ஜ் கேள்விகளா..? ம்க்கும்!'' - அலுத்துக்கொண்டாலும் எதிர்பார்ப்புடன் கேள்விகளை எதிர்கொண்டார் நடிகை தேவ தர்ஷினி.

''இந்தியப் பிரதமர் ஆவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு என்ன?''
பதில்: பிரதமருக்கான வயது வரம்பு என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எம்.பி-களுக்கான அதே தகுதிதான். எம்.பி-களுக்கான குறைந்தபட்சத் தகுதி, அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட 25 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 30 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்!
நீதியரசர் சந்துரு: ''அரசியல் சட்டத்தில் பிரதமருக்கு வயது நிர்ணயிக்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அதில், ராஜ்ய சபா உறுப்பினர் என்றால் 30 வயது. லோக்சபா உறுப்பினர் என்றால் 25 வயது!''
தம்பி ராமையா: ''குறைந்தபட்ச வயசு தெரியாது. அதிகபட்ச வயசுனா, சாகிற வரைக்கும்னு சொல்லலாம்!'' என்று சிரிப்பவர் பதிலைக் கேட்டுத் தெரிந்துகொண்டதும் பதறுகிறார். ''25 வயசுலயே பிரதமர் ஆகலாமா? நாசமாப்போச்சு! ரெண்டு மூணு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் வெச்சுக்கிட்டு எந்தப் பொண்ணுக்கு எந்த நம்பர்னு தெரியாம குழம்பித் திரியிற வயசுல, நாட்டு நிர்வாகத்தையே கையில கொடுத்தா விளங்குமா? உறவில் விருப்பம் இன்றி, உணவில் விருப்பம் இன்றி இருப்பவர்கள்தான் பிரதமர் பதவியில் இருக்கணும்!''
வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்.: ''பிரதமருக்கு எனக் குறைந்தபட்ச வயதுவரம்பு எதுவும் கிடையாது. எம்.பி-களுக்கான தகுதி இருந்தாலே போதும்!''
தேவ தர்ஷினி: ''அய்யோ..! முதல் கேள்வியே அரசியலா? அச்சச்சோ..! ராகுல் போன தடவை பிரதமர் ஆகலை. அப்ப அவருக்கு 35 இருக்கலாம். என் வயசும் அதுதான்!'' என்றவர் பதறி, ''அய்யோ... என் வயசைச் சொல்லிட்டேனா? அதை 25-னு மாத்தி எழுதிக்கங்க!'' என்றவர் பதில் தெரிந்ததும், ''அப்ப எனக்கு பிரதமர் பதவிக்கான வயசு வந்துடுச்சுனு சொல்லுங்க!''
''ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தின்போது மயங்கி விழுந்த நடிகை கம் அரசியல்வாதி யார்?''
பதில்: ரோஜா.
நீதியரசர் சந்துரு: ''சட்டெனப் பதில் சொல்கிறார். ''நடிகை ரோஜா. ரெண்டு, மூணு கட்சி மாறி இருக்காங்க. வேற என்ன சொல்றது..? அவ்வளவுதான். அடுத்த கேள்வி?''
தம்பி ராமையா: ''நல்ல நடிகை. கடின உழைப்பாளி. சிறந்த பேச்சாளர். ஆந்திராவில் பிறந்தாலும் நம் தமிழ்நாட்டு மருமகள். இயக்குநர் சங்கப் பொதுச்செயலாளர் அன்பு நண்பர் இயக்குநர் செல்வமணியின் மனைவியார். (அட, ஒரு வார்த்தையில பேரைச் சொல்லுங்க சார்) 'ஆப்பிள் பெண்ணே’ என்ற படத்தில் இவருடன் நான் நடிச்சிருக்கிறேன். மயங்கி விழுந்த அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்கள் இரண்டு நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொன்னபோதும், உடனே சிகிச்சை எடுத்துக்கொண்டு பிரசாரத்துக்குச் சென்ற தைரியம், துணிச்சல் இருப்பது... வேற யாருக்கு? நம்ம 'ரோஜா’வுக்குத் தானே!''
வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்.: ''ரோஜா. ப்ச்ச்..! இந்த மாதிரி சம்பவம்தானே நியூஸ் ஆகுது. ஆனா, எல்லா கட்சிப் பிரசாரத்தையும் கவனிச்சு, வீடியோ பதிவு எடுத்து, வாக்காளர் பட்டியல் தயாரிச்சு, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவைச்சு, வேட்பாளர்கள் செலவுக் கணக்கைச் சரிபார்த்து... ஹ்ம்... எங்க வேலைகளை இன்னும் அடுக்கிட்டே போகலாம்! சரி... இப்போ அடுத்த கேள்விக்குப் போகலாம்!''
தேவ தர்ஷினி: ''எனக்குத் தெரியலை. ஆனா, கெஸ் பண்றேன்... ரோஜா!''

''ரஜினியின் இரண்டு பேரன்களின் பெயர் என்ன?''
பதில்: லிங்கா ராஜா, யாத்ரா ராஜா!
நீதியரசர் சந்துரு: ''ரஜினி கிராண்ட் சில்ரன் பேரா?'' யோசித்தவர்... ''அது தெரியலை. அவர் பொண்ணுங்க பேரு தெரியும். ஒரு பொண்ணு பேரு சௌந்தர்யா. இன்னொரு பொண்ணு பேரு... தெரியலையே! ரஜினி மாப்பிளைங்க தெரியும். ஒருத்தர் தனுஷ்; இன்னொருத்தர் அஸ்வின்!''
தம்பி ராமையா: ''ஒரு பையன் பேரு இப்ப ரஜினி நடிச்சிட்டு இருக்கிற படம் பேரு... லிங்கா. இன்னொரு பையன் பேரு... ம்ம்ம்ம்.... யாத்ரா! ரொம்ப அவசியமான கேள்விதான். நெக்ஸ்ட்!''
வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்.: ''தெரியலைங்க!''
தேவ தர்ஷினி: ''இந்தக் கேள்விக்கு கூகுள் யூஸ் பண்ணிக்கவா... கூடாதா? சரி சொல்றேன். ஒருத்தன் பேரு யாத்ரா. அடிக்கடி ரஜினி சார் யாத்திரை போவாரு. அதனால வெச்சிருப்பாங்க. இன்னொரு பையன் பேரு... மறந்துட்டேங்க!''
''தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்த்து எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள்?''
பதில்: 33 அமைச்சர்கள்.
நீதியரசர் சந்துரு: ''அது வாராவாரம் மாறுமே!'' என்று சிரிப்பவர், ''எனக்கு ஞாபகம் இருக்கிற வரை சொல்றேன். 24 அல்லது 26 வரை இருக்கலாம்!''
தம்பி ராமையா: '' 'புரட்சித்தலைவர்’ காலத்துல மாவட்டச் செயலாளர் பேர் வரைக்கும் ஞாபகம் வெச்சிருப்பேன். இப்போ 'அம்மா’ எல்லாருக்கும் பதவியை மாத்தி மாத்திக் கொடுக்கிறதால, ஞாபகம் வெச்சுக்க முடியலை. எப்படியும் 'அம்மா’ ராசியான நம்பர்லதான் அமைச்சரவை அமைச்சிருப்பாங்க. அதனால 2 4 = 6... 3...'' என்று ஏதேதோ கணக்குப் போடுகிறார். சில நிமிடங்கள் கழித்து, ''30-ல இருந்தது 36-க்குள்ள இருக்கணும்!'' என்பவர் பதில் தெரிந்ததும் அதிர்ந்து சிரிக்கிறார்.
வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்.: ''26 அமைச்சர்கள் இருப்பாங்களா?'' என்று கேட்டவர், '''எம்.எல்.ஏ-கள் எண்ணிக்கையில் 15 சதவிகித உறுப்பினர்கள் அமைச்சராகலாம்’னு சொல்வாங்க. தமிழ்நாடு அரசியலைப் பத்தி தினமும் படிச்சிட்டுத்தான் இருக்கேன். ஆனா, இந்த அமைச்சர்கள் பத்தி மட்டும் அப்டேட் பண்ணிக்கவே முடியலை!''
தேவ தர்ஷினி: ''ஜெயா டி.வி. முன்னாடி 'ஜெ.ஜெ. டி.வி’யா இருந்தப்ப நடந்த ஒரு தேர்தல்ல, சூறாவளி சுற்றுப்பயணம் போய் ஒவ்வொரு அமைச்சரையும் பேட்டி எடுத்தேன். அப்ப இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தா, டக்கு... டக்குனு பதில் சொல்லி இருப்பேன். இப்ப 20 பேரு இருப்பாங்களா? ஏன்னா, பெண்கள்கிட்ட எண்ணிக்கை பத்திக் கேட்டா, எப்பவும் 20 தாண்ட மாட்டாங்க!''

''இந்தியாவில் சமீபத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடிய ரயில்வே பாலம் எது?''
பதில்: ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம்!
நீதியரசர் சந்துரு: ''தனுஷ்கோடி ரயில்வே பாலம். அந்தப் பாலத்தோட பேரு... ம்ம்... பாம்பன் பாலம்!''
தம்பி ராமையா: ''அய்யோ..! எனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரிஞ்சிருக்கணுமே! ஆனா, இப்ப தெரியலையே. கலைஞரும் ஜெயலலிதாவும் போட்டி போட்டுட்டு 'கால்டுவெல்லுக்கு 200’-வது ஆண்டு விழா எடுத்தாங்கனு படிச்சேன். அதே மாதிரி இந்தப் பாலம் பத்தியும் எங்கேயோ படிச்சிருக்கேன்!'' என்று யோசிக்கிறார். ''தமிழ்நாடுதான்னு தெரியும். பெரம்பூர் மேம்பாலமா? ம்ஹூம். தெரியலையே!'' பதிலைக் கேட்டதும், ''ஓ... அதான் தினமும் டி.வி-ல சிமென்ட் விளம்பரம் ஒண்ணு போட்டு அந்தப் பாலத்து மேல சர்ரு... புர்ரு...னு கார் விடுறாய்ங்களா? சரியாப் போச்சு!''
வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்.: சின்ன சந்தேகத் துடன், ''பாம்பன் பாலமா?'' என்று கேட்கிறார். 'சரி’ என்றதும் உற்சாகமாகிறார்.
தேவ தர்ஷினி: ''அந்தப் பாலம் தமிழ்நாட்டுல இருக்கா? ஏதாவது க்ளூ கொடுங்க! எந்தெந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு. எந்த எக்ஸ்பிரஸ் ட்ரெயின் அது மேல போகும்?'' என்றெல்லாம் ஏதேதோ கேட்டு இறுதியில், ''பதில் தெரியலைங்க!'' என்று ஒப்புக்கொள்கிறார்.