உ.கு.சங்கவி, ரா.சுகன்யா வர்மா
ஆச்சரியப்படுத்துகிறார்கள் 'மெட்ராஸ்டர்ஸ்’! சென்னையைச் சேர்ந்த, சென்னையைக் காதலிக்கும், சென்னையைக் கொண்டாடும் இளைஞர்களின் டீம் இது. சமூக வலைதளங்கள் மூலம் சுமார் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருங்கிணைந்து கற்பனைத் திறனை வளர்த்துக்கொள்ளவும், திறமையைப் பகிர்ந்துகொள்வதுமாக ஆர்வத்துடன் இயங்கி வருகிறார்கள்.
'மெட்ராஸ்டர்ஸ்’ குறித்து சின்ன அறிமுகம் கொடுத்தார் குழுவின் மேனேஜர் ஜாக்.
''எங்க குரூப்ல ஒவ்வொருத்தரும் ஒரு படைப்பாளி; ஒரு டிசைனர். ரொம்பச் சின்ன அளவில் பேப்பர் டூடில்ஸ்ல ஆரம்பிச்சு வெப்சைட் டிசைனிங் வரை எல்லா வேலைகள் பார்க்கிறவங்களும் இங்கே இருக்காங்க. எங்க எல்லாரையும் இணைச்சது 'போட்டோஷாப் சாஃப்ட்வேர்’. 'மெட்ராஸ்டர்ஸ்’ங்கிற வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் வரும். ஒண்ணு... கேங்ல இருக்க அத்தனை பேரும் சென்னைப் பிரியர்கள். அடுத்து 'ராஸ்டர்’ங்கிறது போட்டோஷாப்ல அடிக்கடி பயன்படுத்தும் ஒரு முக்கியமான டெக்னிக்கல் வார்த்தை. இங்கே எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் டிசைனர்களா இருப்பாங்க. அவங்கவங்க டிசைன் பண்ண விஷயத்தை எங்க பேஜ்ல போஸ்ட் பண்ணுவாங்க. அதைப் பத்தி மத்தவங்க கமென்ட்ஸ் பண்ணி விவாதிப்பாங்க!'' என்று விளக்கும் ஜாக்கை, சட்டென இடைமறிக்கிறார் ராமகிருஷ்ணா.

''ஜாக் கொடுக்கிற இன்ட்ரோவை வெச்சு நீங்க இது சீரியஸ் மேட்டர்னு நினைச்சிடாதீங்க. இது ஒரு கிரியேட்டிவ் குரூப். ரொம்பக் குறும்பான டீம். நான் படிச்சது இன்ஜீனியரிங். ஆனா, டிசைனிங்ல விருப்பம் உண்டு. இப்போ நான் ஒரு தனியார் நிறுவனத்தில் 'இன்ட்ராக்ட்டிவ் டிசைனரா’ இருக்கேன். அதாவது உங்க மொபைல் பட்டன்ல, ஸ்க்ரீன்ல எதை அழுத்தினா எது டிஸ்ப்ளே ஆகணும்னு டிசைன் பண்றதுதான் எங்க வேலை. இந்த மாதிரி நாங்க எல்லாரும் ஏதோ ஒருவிதத்தில் டிசைனிங் வேலையில் இருக்கோம். இப்போ 'யமாஹா கிளப்’, 'புல்லட் கிளப்’னுலாம் வெச்சிக்கிட்டு அடிக்கடி ரைட் போவாங்கள்ல அந்த மாதிரி இது டிசைனர்ஸ் கிளப்.
டிசைனிங் ஒரு கடல் மாதிரி. அதுல நாம கத்துக்கவேண்டியது இன்னும் நிறைய இருக்கு. குறிப்பிட்ட ஒரு நிறுவனம் அல்லது பொருளோட முதல் தோற்றத்தை மக்கள் மனசுல பதிய வெக்கிறது அதோட லோகோதான். அப்படிப் பார்த்தா, படிச்சவங்க, படிக்காதவங்க எல்லாருக்கும் புரியிற மாதிரி, புடிக்கிற மாதிரி டிசைன் பண்றது பெரிய சவால். ஏன்னா, வார்த்தைகள் உதவி இல்லாம, பல விஷயங்களைப் புரியவெக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை. டிசைனிங் ஆர்வத்தோட வர்ற பசங்களுக்கு அந்தக் கஷ்டத்தைக் கொஞ்சம் குறைக்கலாமேனுதான் இந்த குரூப் ஆரம்பிச்சோம். இப்ப நாங்களே எதிர்பார்க்காத வரவேற்பு கிடைச்சிருக்கு!'' என்கிறார் ராமகிருஷ்ணா.
இந்தக் குழுவின் செயல்பாடுகளை விவரித்தார் துளசிராம். ''ரொம்ப ஆக்டிவ் உறுப்பினர்கள் வாரம் ஒருதடவை சந்திப்போம். அது போக இந்திய ரூபாய்க்கான சின்னத்தை வடிவமைச்ச உதயகுமார், என்ஃபீல்ட் தண்டர்பேர்டு பைக்கை டிசைன் பண்ண ரமேஷ் மாணிக்கம், இந்தியா வின் சிறந்த டிசைன் இன்ஸ்டிட்யூட்டான 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்’ல இருந்து அனுபவமிக்க ஆசிரியர்கள், படைப்பாளிகள்னு பலரை எங்க மீட்-அப்பில் கலந்துகொள்ள வைப்போம். அவங்களோட அனுபவம் ஆரம்பக்கட்ட டிசைனர்களுக்குப் பெரிய பாடமா இருக்கும். நாங்களும் டிசைனிங்கின் அடிப்படை பாடங்களைக் கத்துக்கொடுப்போம். இது எல்லாமே இலவச சேவைதான்!''
''நான் விஸ்காம் படிச்சிட்டு மத்த கம்பெனிகள்ல வேலை செய்யும்போது என்னோட ஐடியாக்களை வெளிக்காட்ட போதுமான சுதந்திரம் இல்லை. நம்ம எதுக்கு மத்தவங்களை நம்பி இருக்கணும். என் வடிவம், என் படைப்பு, என் எண்ணம், என் சுதந்திரம்னு கனவோட சின்ன அளவுல ஆரம்பிச்சதுதான் இந்த கேங். இப்ப இதுல சேர்ந்த எல்லாருமே என்னை மாதிரியோ அல்லது எனக்கு மேலாகவோ திறமைசாலியா இருக்காங்க. சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் தெரிஞ்சாதான் டிசைன் பண்ண முடியும்ங்கிற பயத்தை நாங்க போக்கியிருக்கோம். அதுதான் எங்க முதல் வெற்றி. டிசைனிங் என்பது, ஒரு கலை மட்டும் இல்லை; அது ஒரு காதல்னு ஃபீல் பண்ணவெச்சிருக்கோம். அந்தக் காதல் மேலும் மேலும் பரவணும். அதான் எங்க ஆசை!'' என்று சிரிக்கிறார் ஜாக்.
லவ் ஆல்!
டிசைனிங்குக்கான அடிப்படை விதிகள்...
• ஒரு பிரச்னைக்கான தீர்வு தான் ஒரு டிசைன். அதனால், முதலில் பிரச்னையை நன்கு புரிந்துகொள்ளுங்கள்.
• டிசைன் குறித்து உங்களை நீங்களே பல கேள்விகள் கேட்டு ஒவ் வொரு கேள்விக்கும் பதில் பெறுங்கள்.
• பேப்பர், பென்சில், ஸ்கெட்ச் பயன்படுத்தி ரஃப்பாக பல டிசைன்களை வரைந்து பாருங்கள்.
• புத்தகங்கள், இணையம் என பல ரெஃபரன்ஸ் குறிப்புகள் எடுங்கள்.
• முதல்கட்ட டிசைனிங் முடிந்ததுமே நண்பர்கள், சீனியர்களிடம் கருத்து கேளுங்கள். பிறர் பார்வையில் டிசைனில் எது ஃபோகஸ் ஆகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
• மிக அவசியம் என்றால் மட்டுமே நிறங்களைப் பயன்படுத்துங்கள். குறைந்தபட்ச நிறங்கள் இருந்தால் நல்லது.
• சின்ன கோடு, காலியிடம், புள்ளி... என எதுவும் தேவையிருந்தால் மட்டுமே பயன்படுத்தவும். இல்லாவிட்டால், வேண்டாம்.
• மொழி, பொது அறிவு ஆகியவை கடந்து, உலக மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும் ஒவ்வொரு டிசைனும்!