நானே கேள்வி... நானே பதில்!
''நீதிமன்றங்களில் நீதிபதிகள் கிண்டல் செய்தால்... வக்கீல்கள் பதிலடி கொடுப்பது உண்டா?''
''பெரும்பாலும் பொறுத்துக்கொள்ளவார்கள். ஏனெனில், வழக்கு வெற்றியடைய வேண்டுமே! ஆனால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எர்ட்லி நார்ட்டன் என்கிற பிரபல வழக்கறிஞர் துணிச்சலானவர். ஒரு (ஆங்கிலேய) நீதிபதிக்கு, அவரைக் கண்டாலே பிடிக்காது. ஒரு வழக்கில் அவர் வலுவான வாதங்களை அடுக்கிக்கொண்டு இருந்தபோது அந்த நீதிபதி கிண்டலாக, 'மிஸ்டர் நார்ட்டன்... உங்கள் வாதங்களில் சாரமே இல்லை. அவை என் ஒரு காது வழியாக நுழைந்து இன்னொரு காது வழியாக வெளியேறிக்கொண்டிருக்கின்றன’ என்றார். நார்ட்டன் அமைதியாக, 'இரு காதுகளுக்கு இடையில் ஒன்றும் இல்லாவிட்டால் அப்படித்தான் நேரும்’ என்றதும் நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பு!''
- அ.ஷண்முகசுந்தரம், பெங்களூரு.

'''தோன்றிற் புகழோடு தோன்றுக...’ என்ற வள்ளுவர் வாக்கின்படி 'வி.ஐ.பி.’ அந்தஸ்துடன் இருப்பதுதானே சந்தோஷம் தரும்?''
''வாரியாருக்கு வடை, பாயசம் பிடிக்காது. ஆனால், போகும் இடமெல்லாம் அவருக்கு அதையேதான் விருந்து படைப்பார்கள். அவருக்கு அகத்திக் கீரை என்றால் அவ்வளவு இஷ்டம். ஆனால், விருந்தில் அகத்திக் கீரை பரிமாற மாட்டார்களே! அவருக்கு மோர் பிடிக்கும். ஆனால், கெட்டித் தயிர்தான் பரிமாறப் படும். சரி, வீட்டில் நமக்குப் பிடித்ததைச் சமைக்கச் சொல்லி சாப்பிடலாம் என்றால், ஆன்மிகப் பயணங்களால் அவருக்கு வீட்டுச் சாப்பாடு அமைவதே இல்லை. புரிந்துகொண்டீர்களா?''
- ஆ.யாழினி பர்வதம், சென்னை-78.
''வரி கட்டுவதை, மக்கள் பாரமாகக் கருதுவது ஏன்?''
''ஓர் அறிஞர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. 'அபராதம் என்பது, தவறாக நடந்துகொண்டதற்காகச் செலுத்தப்படும் 'வரி’. 'வரி’ என்பது சரியாக நடந்துகொண்டதற்காகச் செலுத்தப்படும் அபராதம்!’ - இப்போது புரிகிறதா?''
- கி.ரவிக்குமார், நெய்வேலி.
''பணி ஓய்வு பெறுவோர்க்கு ஓரிரு வார்த்தைகள்..?''
'' 'திருடன், தான் வந்துபோனதற்கு எந்த அடையாளமும் இருக்கக் கூடாது என்று எண்ணுவான்’ என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். நம் உழைப்பின் அடையாளங்களும், 'வழியனுப்புவது நம் பாதங்களைத்தான்; பதித்த சுவடுகளை அல்ல’ என்ற திருப்தியும் இருந்தால், நம் பணி ஓய்வு அங்கே முற்றுப்புள்ளி அல்ல... நெற்றித் திலகம்!''
- தாமு, தஞ்சாவூர்.
''விஜயகாந்துக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் என்ன வேறுபாடு?''
''கேப்டன் அடி கொடுத்துப் பிரபலமாக, அரவிந்த் கெஜ்ரிவாலோ அடி வாங்கியே பிரபலமானவர். அல்லது கவுண்டமணிக்கும் வடிவேலுக்குமான வித்தியாசம் என்று வைத்துக்கொள்ளலாமா?''
- ஏ.தென்றல், விருதுநகர்.
''கோடிக்கணக்கில் செலவு செய்த 'ஆதார்’ அட்டை அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதே?''
''ஆம்... 'ஆதார்’க்குச் செலவு செய்த கோடிக்கணக்கான பணத்தை, ஏழைகளின் 'ஆகார’த்துக்காகவாவது செலவிட்டிருக்கலாம்!''
- சம்பத் குமாரி, திருச்சி.
''சமீபத்தில் படித்ததில் ரசித்தது, சிந்திக்கவைத்தது?''
''யாருக்காவது குழி தோண்டவும், அவர்கள் மீது மண்ணைப் போடவும் விரும்பினால், அதை விதைகளுக்குச் செய்யவும்!''
- குணசேகரன், புவனகிரி.
''மின்வெட்டு, இந்தத் தலைமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருகிறதா?''
''ஆம். 'ஜெ.ஜெ.’ என்று மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதாவது, ஜெனரேட்டர் ஜெனரேஷனாக மாற்றிக்கொண்டு வருகிறது!''
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. 'நானே கேள்வி - நானே பதில்’என்று தலைப்பிட்டு தபாலில் அனுப்பவும்!