சூப்பர் ஸ்டாரின் இதயம் திறக்கிறதுரா.கண்ணன்

'என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே’
- சிவவாக்கியர்
ரஜினி, கிரியா யோகாவுக்கான தீட்சை வாங்கியது பாபாஜியின் குகையில்!
அந்த முதல் விஜயத்தின்போது, தன் மனைவி லதாவையும் அழைத்து வந்தார். அது இன்னும் கடுமையான பயணம். ஆனால், ரஜினியும் லதாவும் ஒரு பரவசத் தரிசனத்துக்குத் தயாராக வந்திருந்ததால், எந்தச் சிரமத்தையும் பொருட்படுத்தவில்லை. பாபாஜியின் குகையில் இருந்த ஒவ்வொரு கணமும் ரஜினி, லதா இருவரிடமும் அப்படி ஓர் உற்சாகம். வெளியே வந்த ரஜினி சொன்னார்... ''நான் புதிதாகப் பிறந்திருக்கிறேன். இந்தச் சந்தோஷம் நான் இதுவரை அறியாதது!''
இதோ இந்த முறை பாபாஜியின் குகையில் நுழைகிறோம். அது இயற்கை அமைத்துத் தந்த கற்குகை. பாபாஜியும் அவரது சீடர்களும் வாசம் செய்யும் தலம். உள்ளே பிரவேசித்ததுமே அந்த அதிர்வை உணர முடிகிறது. மௌனமாகக் குகையில் தியானத்தில் அமர்கிறார் ரஜினி. பக்கத்திலேயே ஹரியும் வெங்கட்டும்!
திடுமென ஏதோ ஒரு தகவல் கிடைத்த உள்ளுணர்வில், ''வாப்பா... வா!'' என ரஜினியை அழைத்தபடி, பதற்றமும் பரவசமுமாக மலை மீது ஓடுகிறார் ஹரி!
மேலே சில தப்படிகள் கடந்து, ஒரு புதரோரம் ஒளிந்துகிடக்கிற ஒரு பாறைப் பிளவைக் காட்டுகிறார். ''இதுதான் பாபாஜியின் அருள் குகை. இதுக்குள்ள இறங்குறது உயிரைப் பணயம் வைக்கிற வேலை!'' என ஸ்ரீரி சொல்லச் சொல்ல... ரஜினியின் விழிகளில் டிகிரி டிகிரியாக ஒளிர்கிறது பிரகாசம்!

''இப்போதான் நமக்கு பாபாஜியின் அருள் கிடைச்சிருக்கு. தோ பாருங்க தலைவரே, நாம பெரிய குகை பார்த்துட்டோம். இப்பவே இப்படியே சந்தோஷமாத் திரும்பிடலாம். உங்களுக்கு ரெண்டு சாய்ஸ் இருக்கு. நீங்க பெரிய சூப்பர் ஸ்டார். சந்தோஷமான லைஃப் ஸ்டைல். அப்படியே ஜாலியா இருக்கலாம். ஏன்னா, இந்தக் குகைக்குள் இறங்கணும்னா அது ரொம்ப ரிஸ்க்கான விஷயம். பகவானோட ஆசீர்வாதம் வேணும்.
இது கிட்டத்தட்ட டபிள்யூ ஷேப்பில் இருக்கிற குகை. ஒரு மனுஷன் ஊர்ந்து ஊர்ந்து உள்ளே போகணும். கூர் கூரான கல் குத்திக் கிழிக்கும். உள்ளே என்ன இருக்கும்னு யாருக்கும் தெரியாது. மனுஷ நடமாட்டமே இல்லாத வனாந்தரம் இது. இங்கே என்ன வேணா நடக்கலாம்!
இந்த ரிஸ்க் எடுக்கணுமா சொல்லுங்க? இப்பவும் உங்களுக்கு ரெண்டு சாய்ஸ் இருக்கு!'' - ஹரி சொல்வதைக் கவனமாகக் கேட்கிற ரஜினி, கட்டை விரலால் தன் நெற்றியில் கோடு கிழித்துச் சிரித்தபடி, ''நான் ரெடி!'' என்கிறார்.
முதலில் வெங்கட் இறங்குகிறார். கூரிய கற்களுக்கு நடுவே குனிந்து வளைந்து நெளிந்து அவர் உள்ளே நகர்ந்து நகர்ந்து செல்வதைப் பார்க்கிற ரஜினியும் இப்போது தயார்!
''பாபா!'' என வானம் நோக்கி வணங்குபவர், பூமிக்குள் இறங்குகிறார். ''கவனமா... கவனமா!'' மேலே நிற்கிற ஹரி சொல்லச் சொல்ல, ரஜினி மிகுந்த சிரமத்துடன் உள்ளே இறங்கி இறங்கிக் காணாமல் போகிறார்; தன்னைக் கண்டெடுக்க!

கருவறையின் இருளைக் கிழிக்கிறது ஒரு மெழுகுவத்திச் சுடர்!
தாயின் தொப்புள்கொடிக்குள் நுழைகிற உணர்வு. தகதகக்கிற தங்க ஜ்வாலை வழிகாட்ட, உள்ளே... மிக உள்ளே... மெள்ள மெள்ள நகர்கிறார் ரஜினி!
தாறுமாறாக நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள் போல துருத்தி நிற்கும் கூர் கற்கள். தலைகீழாகத் தவழ்ந்து தவழ்ந்து, சடாரென வளைந்து நிமிரும் வழியே சிரமப்பட்டு உடல் திணித்து, அவர் முன்னேறுகிற காட்சியை யார் பார்த்தாலும், மனதுக்குள் ஒரு கேள்வி முளைக்கும்!
'ஒரு பாவமான ஜீவன் போல, இமயமலையில் இந்த இருள் குகைக்குள் இவர் இப்படிக் கிடக்கவேண்டிய அவசியம் என்ன?’

''இது... இந்த அனுபவம் உங்க ஆத்மசுத்திக்கு பாபா தர்ற பரிசு. எல்லா அடையாளத்தையும் தொலைச்சிட்டு, ஒரு சாதாரண மனுஷனா சரணாகதி அடையறதுக்குக் கிடைக்கப்போற பரிசு!'' - பின்னாலேயே தொடர்கிற ஹரி சொல்லச் சொல்ல, மின்னும் விழிகளுடன் தன் குருவின் மடி தேடி மௌனமாக நகர்கிறார் ரஜினி.
மலைப் பயணத்தின் வழியில் ரஜினியே அதை உணர்ந்திருந்தார். ''ரெண்டு சட்டை, ரெண்டு வேஷ்டியோட நான் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, மனசளவில் எல்லாத்தையும் உதறிட்டேன் ஹரி. ஏன்னா... நான் என் வாழ்க்கையில் எதையுமே திட்டமிட்டதே இல்லை!
பொத்திவெச்ச உள்ளங்கை மாதிரி இருக்கு வாழ்க்கை. 'கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார்’னு என் கிராஃபை ஒரு கதையா சொன்னா, யாராவது நம்புவாங்களா? நான் பஸ் கண்டக்டரா இருந்தேன். ரொம்பச் சின்ன வேலை; சின்ன சம்பளம். ஆனா, அப்பவும் நான் சந்தோஷமா இருந்தேன். பெங்களூர்லயே ஸ்டைலான கண்டக்டர் நான்தான். என் விசிலுக்கே அவ்வளவு ரசிகர்கள் இருப்பாங்க. நான் வர்ற பஸ்ஸுக்காக ரெண்டு பஸ்ஸை மிஸ் பண்ணிட்டுக் காத்திருந்த பாசஞ்சர்ஸ்லாம் உண்டு. இப்போ நினைச்சுப் பார்த்தா, என்னையறியாம அப்பவும் நான் ஒரு என்டர்டெயினராத்தான் இருந்திருக்கேன்.

வாழ்க்கை என்னை ரோட்ல திரியவெச்சாலும் மனசுக்குள்ள மகாராஜாவா இருந்தேன். எதுக்கும் எப்பவும் பெரிசா ஆசைப்பட்டது இல்லை. 'கிடைச்சா சந்தோஷம்... கிடைக்கலேன்னா ரொம்ப சந்தோஷம்’கிறதுதான் நம்ம ஸ்டைல்.
அதே மாதிரி இறைபக்தி! அம்மா முதல்ல அப்பாவைக் காட்டினாங்க. அதுக்கு அப்புறம் ஆண்டவனைத்தான் காட்டினாங்க. நான், கடவுளை என்னிக்குமே மறந்தது இல்லை. கடவுள், என்னிக்குமே என்னைக் கைவிட்டதும் இல்லை. என்னோட பிரச்னை என்னன்னா... குடும்பம், தொழில்னு எல்லாம் அமைஞ்ச எனக்கு, 'மாதா, பிதா, குரு, தெய்வம்’னு சொல்வாங்களே, அதில் 'குரு’ மட்டும் அமையலை. நல்ல நல்ல வாத்தியார்கள் கிடைச்சாங்க. ஆனா... குரு?'' - கண்கள் காற்றில் அலைபாய, நடையைத் தொடர்கிறார்.
இங்கே உள்ளே... பைக்குள் தேடித் தேடி எடுத்த ஒரு டார்ச் உயிர் பெறுகிறது. இருள் குகையில் இத்தனை இத்தனை சிரமங்களுக்கு இடையில் இன்னதென்று தெரியாத ஒன்றைத் தேடி, இடைப்பட்ட வழியில் சிறையாகிக் கிடக்கிறார் ரஜினி.
''குரு ஏன் முக்கியம் தெரியுமா?'' - சில விநாடிகளுக்குப் பிறகு வழியில் மலையேறும்போது சிரித்த ரஜினி, ஒரு குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தார். ''ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர்; எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க. 10 ஆயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக்காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி, எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசு இல்லை.
'என்னப்பா பண்ணலாம்?’னு கேட்டார்.
'அய்யா! நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா, ஒண்ணே ஒண்ணு தெரியுங்க. நான் 30 குதிரை வளர்க்கிறேன். புல்லு வெக்கப் போறப்போ எல்லா குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சுட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.
பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு 'சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்கு மட்டும் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியாப் போட்டுத் தாக்கிப் பிரமாதப்படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சது. 'எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்துப் பெருமையாக் கேட்டார் குரு.
'அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க. நான் புல்லு வெக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். 30 குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!

அதானே... நமக்கு என்ன புரியுமோ, அதைச் சொல்லணும். எது புரியணுமோ அதை மட்டும்தான் சொல்லணும். இங்கே நிறைய குருக்கள் சும்மா மிரட்டுவாங்க. வித்தை காட்டுவாங்க, வித்தைகளை வேடிக்கை பார்க்கலாம்... பொழுதுபோகும். ஆனா, நமக்குத் தேவை வழிகாட்ட ஓர் ஆத்மா. அப்படி எனக்குக் கிடைச்சவர் பாபாஜி!'' என்று நெகிழ்ந்து நின்றார்.
இப்போது மீண்டும் குகைக்குள் செல்வோம். அவஸ்தைகளுடன் நழுவி நழுவி உள்ளே வந்ததும் திகைக்கிறார் ரஜினி. இத்தனை சிறிய பொந்தைக் கடந்து வந்தால், 20 பேர் அமர்கிற அளவு இடமா? அதுவும் பூமிக்கு அடியில், இத்தனை ஆழத்தில் இப்படி ஒரு குளிர்ச்சியா? வாய் திறந்தால், சுவாசித்தால் பனிக்காற்று. சுவாசம் திணறவில்லை; உடலில் துளி வியர்வை இல்லை; மனதில் துளி பயம் இல்லை. தாயின் கர்ப்பத்துக்குள் வந்துவிட்ட சிசு போல பாதுகாப்பாக உணர்கிறார் ரஜினி.
ரஜினியின் வாழ்வில் பாபா வந்த கதை தெரியுமா? 'படையப்பா’ படம் முடித்து, 'அடுத்து என்ன படம் செய்வது?’ என யோசனையில் இருந்த நேரத்தில், ரஜினியின் கைக்குத் தற்செயலாகக் கிடைத்தது பாபாவின் படம். அதைப் பார்த்த கணத்தில் ஒரு மின்னல் வெட்டு போல ஏதோ ஓர் ஆனந்த அதிர்ச்சி தாக்க, மயங்கி விழுந்தாராம் ரஜினி. இமயமலையின் அடிவாரங்களில் ரிஷிகேஷ், தயானந்த சரஸ்வதி ஆசிரமம் என அடிக்கடி போய் வந்த அனுபவம் இருந்தாலும், பாபா அப்போது ரஜினிக்குப் புதுசு!
பாபாவைப் பற்றிய தகவல்களை விசாரிக்க ஆரம்பித்தால், கிடைத்த செய்திகள் ரஜினியைப் பிரமிப்பில் தள்ளின. பாபாவின் பெயர் என்ன? தெரியாது. பாபாவின் வயது என்ன? தெரியாது. பாபாவின் புகைப்படம் என்ற ஒன்றே கிடையாது. இருப்பது எல்லாம் ஒரே ஓர் ஓவியம் மட்டுமே!
(காந்தம் இழுக்கும்)