விகடன் மேடை... நாஞ்சில் நாடன் பதில்கள்

சி.கருணாகரன், பெருந்துறை.
''மலையாளிகளின் வாசிப்புக்கும் தமிழர்களின் வாசிப்புக்கும் நீங்கள் உணரும் வித்தியாசம் என்ன?'' ''கோவை வந்திருந்த தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், 'பரதேசி’ படம் பார்த்துவிட்டு, எனக்குப் பாராட்டு சொல்ல வீட்டுக்கு வந்திருந்தார். உரையாடலின்போது கேட்டேன், 'எல்லா தமிழ் தினசரிகளின் மொத்த சர்க்குலேஷன்
15 லட்சம் இருக்குமா?’. அவர் சொன்னார், 'ரொம்பக் குறைச்சுச் சொல்றீங்க நாஞ்சில்... கிட்டத்தட்ட 25 லட்சம் இருக்கும்’ என்று. இது 7ரு கோடி தமிழர்களுக்கானது.
'மாத்ருபூமி’ எனும் மலையாளத் தினசரியின் கோவைக் கிளை மேலாளர், மொழிபெயர்ப்பாளர் விஜயகுமார் குன்னிசேரி என் நண்பர். அவரிடம் கேட்டேன், 'சேட்டா... மலையாள தினசரிகளின் சர்க்குலேஷன் எந்தாணு?’. அவர் சொன்னார், 'உத்தேசமா 75 லட்சம் இருக்கும்’ என்று. இது 3வு கோடி மலையாளிகளுக்கானது.
இதுதான் வித்தியாசம்!''
கேப்ரியல், புனல்வாசல்.
''நீங்கள் வசனம் எழுதிய 'பரதேசி’ படத்தில் கிறிஸ்துவப் பாதிரியார் குறித்து இடம்பெற்ற காட்சிகள், மதவாத வன்மத்துடன் அமைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து?''
''கிறிஸ்துவத்தின் மீது எனக்கு எந்தவித மதவாத வன்மமும் இல்லை. கிறிஸ்துவம் நம் மக்களுக்கு மொழி, கல்வி, மருத்துவம் போன்ற புலம்களில் செய்த நன்மைகளையும் சேவைகளையும் நாம் மறக்கவோ, மறைக்கவோ இயலாது. அதே நேரத்தில் அவர்களது மதமாற்றக் குறுக்கு வழிகளையும் வரலாறு பேசுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தூத்துக்குடி சாலை நூற்பாலைக்கு பணி நிமித்தமாகச் சென்றிருந்தபோது, நூற்பாலை முதலாளி என்னை அவர் சொந்த ஊரான சாயர்புரம் கூட்டிச் சென்றார். ஜி.யு.போப், கால்டுவெல், ஹென்றி ஆல்ஃபிரெட் கிருஷ்ணப்பிள்ளை என்கிற கிறிஸ்துவக் கம்பர் என்போர் தொழுத தேவாலயத்தின் முன் நின்றிருந்தேன். இறைத்தலத்தின் முன் கிடந்த மண்ணெடுத்து நெற்றியில் பூசிக்கொண்டேன்.
'பரதேசி’ படத்தின் என் வசனங்கள், வன்மங்கள் நிறைந்தவை அல்ல; வரலாற்று உண்மைகள் நிறைந்தவை. உண்மைகள் சில சமயம் சுடும். யாருக்கு, எங்கே சுட்டது என்பது என் கவலை அல்ல. இன்னோர் உண்மை சொல்கிறேன். அந்த மருத்துவப் பாதிரியார் வேடத்தை என்னைத்தான் தரிக்கச் சொன்னார் இயக்குநர் பாலா. என் பெண்டு, மக்களின் நல்ல காலம், என் தலைக்கு விலை வைக்கப்படாமல் தப்பித்தேன்!''
பார்வதி, திருநெல்வேலி.
''இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?''
''இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, என்.ஸ்ரீராம், தூரன் குணா, சந்திரா, இளஞ்சேரல், அ.வெண்ணிலா, லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் சாதிக்கிறவர்களும் நம்பிக்கை தரக்கூடியவர்களும். மீனா, தி.பரமேசுவரி, ச.விசயலட்சுமி ஆகியோர் திறனுடன் கட்டுரைகள் எழுதுகிறார்கள். கவிஞர்களில் உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, சக்தி ஜோதி, சாம்ராஜ், லிபி ஆரண்யா, இசை, இளங்கோ கிருஷ்ணன் என்போர் என்னைக் கவர்ந்தோரில் சிலர். வகை மாதிரிக்காக சில பெயர்களைச் சொன்னேன்!''
சிவக்குமார், கும்பகோணம்.
''பெண் படைப்பாளிகளை ஆண் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் போக்கு பற்றி உங்கள் கருத்து?''
''தமக்கு வாய்த்திருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, முன் எப்போதும் இருந்திராத தீவிரத்துடன் எழுதுகிறார்கள் பெண் படைப்பாளிகள். சமூகப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். அவர்களின் படைப்பு மொழி, சிலருக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும். ஆனால், அவர்களுக்கான வெளியை அனுமதியுங்கள் என்பது என் கோரிக்கை.
சக ஆண் படைப்பாளிகள், அவர்களைப் பொறுப்புடன் நடத்த வேண்டும். அந்தரங்கங்களில் தலையிடுவதோ, புறம்பேசுவதோ, புண்படுத்துவதோ, பாலியல் நெருக்கடிகள் தருவதோ, ஆரோக்கியமான படைப்புச் சூழலுக்கு உதவாது!''
சுகன்யா கார்த்திக், காரைக்கால்.
''ஒரு கலைஞனை, கவிஞனை, எழுத்தாளனை விருது என்ன செய்யும்?''
''சற்று உற்சாகப்படுத்தும். அவன் உறவை, நட்பை மகிழ்விக்கும். மற்றபடி அவன் படைப்பு முயற்சிகளில் வேறு தாக்கம் ஏதும் செய்யாது. ஆனால், சிலர் விருது வாங்கிவிட்டு ஓய்வெடுக்கப் போய்விடுகிறார்கள்!''

கருப்பையா, அன்னவாசல்.
''பழந்தமிழ் இலக்கியங்கள் மீது உங்களுக்குள்ள ஈடுபாட்டை அறிவோம். ஒரு நவீன படைப்பாளிக்கு பழம் இலக்கியங்களை வாசிப்பது அவசியமா?''
''அவசியம் என்றே கருதுகிறேன். 2,000 ஆண்டுகளுக்கு மேலான இலக்கிய வளம் கொண்ட மொழி தமிழ். ஏற்கெனவே, மொழிக்குள் என்ன நடந்துள்ளது என்பதை, புதிதாக எழுத வருகிறவர் அறிந்திருக்க வேண்டாமா? நாளை எழுத வருகிறவர், இன்று எழுதிக்கொண்டிருக்கும் நவீன படைப்பாளியை வாசித்திருக்க வேண்டாமா? பழந்தமிழ் இலக்கியங்களை சுமை என்று பாராமல் பலம் என்று பார்க்க வேண்டும். இலக்கியவாதிக்கு மொழி ஆயுதம். மொழியைப் பயில்வது ஆயுதப் பயிற்சி. 1927-ல் சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் அட்டவணைப்படுத்தியுள்ள 1,24,000 சொற்களில் நவீனப் படைப்பாளி, 10,000 சொற்களுக்குள் புழங்கினால் போதுமா? யானை எனும் ஒற்றைச் சொல் போதுமா? களிறு, வாரணம், போதகம், குஞ்சரம், தும்பி, பகடு, கரி, வேழம், தந்தி, நாகம், சிந்துரம், கைம்மா, களபம் எனும் சொற்கள் வேண்டாமா? பழந்தமிழ் இலக்கியங்களைப் பயிலவே பொழுது இல்லை என்றால், இவை எங்கிருந்து கிடைக்கும்?''
கலைச்செல்வி, சரவணம்பட்டி.
''முருகனுக்கு, ஐயப்பனுக்கு மாலை போட்ட அனுபவத்தைச் சொல்லுங்கள்!''
''ஊரில், உறவில் இன்னொரு பெயர் எனக்கு, முருகன். சொந்தப் பெயரும் சுப்பிரமணியம். ஆனால், முருகனுக்கு நான் மாலை போட்டது இல்லை. 18 ஆண்டுகள் பம்பாய் வாழ்க்கை முடிந்து கோவை வந்த முதல் வருடம், 1989-ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி சபரிமலைக்கு மாலை போட்டு, விரதம் இருந்து, எரிமேலியில் பேட்டை துள்ளி, பம்பையில் நீராடி, மலை ஏறினேன். மொத்தம் ஏழு மலைகள் என் கணக்கில். 24 மலைகள் மிதித்த என் தம்பி, செழுங்கிளை தாங்கிய செல்வன், என்னில்
12 வயது இளையவன். பி.டெக்., எம்.எஸ்., பிஹெச்.டி., படித்துப் பணிபுரிந்தவன். ஆறு ஆண்டுகள் முன்பு ஆர்ம்ஸ்டாடாமில் இறந்த பின்பு, அவனைக் கவனித்துக்கொள்ளப்போன மருத்துவக் கல்லூரி மாணவியான என் மகள், அவன் சடலத்துடன் நாகர்கோவில் திரும்பிய பின்பு, எனக்கு மனம் விட்டுப் போயிற்று.
மேலும் ஒன்று, ஏழு முறை சபரிமலை ஏறி இறங்கினாலும், 'மண்ணுள்ளிப் பாம்பு’ எனும் என் முதல் கவிதைத் தொகுப்பில், 'அருள் ஞானப் பழம்கூட அழுகக்கூடும்’ என்றும், 'வழிபாட்டுத் தலங்கள் வசம் கலைக்கின்றன’ என்றும் எழுதியவன் நான்!''
சிவன் தெற்குவீதி சிங்கம், கருப்பம்புலம்.
''சிலரைக் கேட்டால் 'விடைபெறும் வேளை வந்துவிட்டது’ என்பார்கள். சிலரோ 'கடைசி மூச்சு வரை எழுதுவேன்’ என்பார்கள். நீங்கள் எந்த ரகம்?''
''இன்னும் 15 ஆண்டுகள் தர மாட்டாளா என் அம்மை சகலகலாவல்லி? வாழ்க்கையில் கனவும் காதலும் கொண்டவன் நான். 'நாஞ்சில் நாட்டு உணவு’ என்றொரு நூல், கம்பனில் மேலும் ஒரு நூல், ஒரு நாவல், கும்பமுனிக் கதைகள், ஒன்றிரண்டு கட்டுரைத் தொகுப்புகள் என கண் முன். வாங்கி வாசிக்காமல் வைத்திருக்கும் சில பணுவல்களைப் படித்துத் தீர்க்க வேண்டும். மாணிக்கவாசகன் சொன்ன 'கற்பனவும் இனி அமையும்’ என்பதை மாற்றிப் பொருள் கொள்கிறவன் நான். என்னால் எழுதப்படவேண்டிய நூல்களை வேறு எவரும் எழுத முடியாதுதானே! கடைசி மூச்சை விடுபவர்கள், நம் மூச்சை வாங்காமல், விட்டுக்கொள்ளட்டும்!''
கிருத்திகா, மேகளத்தூர்.
''வெளியூர் பயணங்களுக்கு நீங்கள் நிறுத்தி நிதானமாகக் கிளம்பும் முஸ்தீபுகளைப் பற்றி, உங்கள் நட்பு வட்டாரங்களில் கதை கதையாகச் சொல்வார்கள். பயணங்களில் அப்படி என்ன முன்னெச்சரிக்கை?''
''30 ஆண்டுகளாகப் பயணம், என் கும்பித் தீ ஆற்றும் பிழைப்பு. இந்தியாவின் 24 மாநிலங்களில் அலைந்திருப்பேன். தமிழ்நாட்டில் என் கால் படாத தாலுகா இல்லை. நான் நீராடிய, கால் நனைத்த நதிகள் அநேகம். மலேசியா, தாய்லாந்து, குவைத், துபாய், அமெரிக்கா, கனடா என்பன பயணம் செய்த நாடுகள். அருள் கூர்ந்து, 'தாய்லாந்துக்கு எதற்குப் போனாய்?’ என்று கேட்காதீர்கள்! ஆதிப் பயணங்களில் நான் கண்ட இடர்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களே என் முஸ்தீபுகள். நண்பர்கள் செய்யும் கலாட்டா மிகை. அவற்றை நானும் ரசிக்கிறேன். நான் தொட்டால் வாடும் செடி அல்ல. வைக்கம் முகம்மது பஷீர் தன்னையே நக்கல் செய்துகொள்கிறவர்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். திருவனந்தபுரம் மகாத்மா காந்தி நினைவுக் கல்லூரியில் எம்.எஸ்சி பயின்றபோது ஈராண்டு மாணவர் விடுதியில் வாசம்.
ஒரு குன்றின் மேல் இருந்த கல்லூரி அது. கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. குளிக்கும்போது, சோப்புத் தேய்த்துக் கொண்டிருக்கையில் தண்ணீர் நின்றுவிடும். என்ன செய்வீர்கள்? பின்பு குளிக்கும் முன் நான் தண்ணீர் பாக்கெட்டை நிறைத்து வைத்துக்கொள்வேன். இதைத்தான் 'முஸ்தீபு’ என்கிறார்கள். இதுவரை நூற்றுக்கணக்கான விடுதிகளில் தங்கி இருப்பேன். அவற்றுள் ஐந்து நட்சத்திர விடுதிகளும் அடங்கும். அறைக்குள் நுழைந்தவுடன் முதல் வேலை பக்கெட் நிறைப்பதுதான். வெளிநாடுகளில், விடுதிகளில், பக்கெட் வைப்பது இல்லை என்பது என் மனக்குறை.
சமீபத்தில், சென்னை கம்பன் கழகத்தில் ஒரு தனி உரைக்காகப் போயிருந்தேன். ஏவி.எம் மண்டபத்தில் தங்கவைத்திருந்தார்கள். விழா முடிந்த மறுநாள் காலை, எனக்கு கோவைக்கு துரந்தோ விரைவு ரயில். கண் விழித்து பாத்ரூம் போனால் தண்ணீர் இல்லை. நான் நிறைத்துவைத்திருந்த வாளித் தண்ணீர் உதவியது.
எந்தப் பயணத்திலும், பற்பசை கொணர மறந்து, அதிகாலையில் நான் பெட்டிக்கடை தேடியது இல்லை. எனவே, முஸ்தீவு நோய் அல்ல; பாதுகாப்பு. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு... 'கடவுளை நம்பினாலும், கைத்துப்பாக்கியைத் தயாராக வைத்திரு’!
-தீதும் நன்றும் பேசலாம்...
படங்கள்: ரா.சதானந்த்
''தமிழைத் தவறு இல்லாமல் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தமிழர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு; உங்களுக்கு?''
''முன்பு மாதிரி இலக்கியக் கூட்டங்களில் சண்டைச் சச்சரவு இல்லையே... ஏன்?''
''பொதுவாக... தமிழர் உணவு வகை குறித்து எழுதுவதில் ஆர்வமுள்ளவர் நீங்கள். ஆனால், சாதி ரீதியாக, மதரீதியாக உள்ளுறைந்திருக்கும் உணவின் அரசியல் குறித்து உங்கள் பார்வை என்ன?''
-அடுத்த வாரம்...
நாஞ்சில் நாடனிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:
'விகடன் மேடை - நாஞ்சில் நாடன்’,
ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002.
இ-மெயில்: av@vikatan.com
கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.