சார்லஸ்

உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...

பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!


போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!

எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.

போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என

எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.

2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.


போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
ஜூன் 12 முதல் கோல் மழை பொழியும்!