Published:Updated:

”பார்ட்டியில பச்சப்புள்ள!”

ம.கா.செந்தில்குமார், படங்கள்: எஸ்.கேசவசுதன்

ருவர், கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஃபீல்டில் இருக்கிறார். இன்னொருவர், அறிமுகமான இரண்டு படங்களிலும் 'ஹிட்டர்’. அந்த இருவர்... 'நாக்கமுக்க’ நகுல், 'குக்கூ’ தினேஷ்!

இவர்கள் இருவருமே 'ஹீரோ அந்தஸ்து’க்கான பந்தா, வம்புதும்பு, பார்ட்டி பஞ்சாயத்து என எதிலும் அடிபடாமல் சின்சியர் இளைஞர்களாக மெனக்கெடுகிறார்கள். 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் இணைந்து நடிக்கும் இருவரையும் சந்தித்தேன். காலேஜ் கேம்பஸ் உற்சாகத்துடன் இருந்தது சந்திப்பு...

”பார்ட்டியில பச்சப்புள்ள!”

''படத்துல ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்கோம். படம் கிட்டத்தட்ட ஃபினிஷிங் ஸ்டேஜ்ல இருக்கு. ஆனா, விகடனுக்காக இப்ப சந்திக்கிறதுதான் எங்க முதல் மீட்டிங். நம்ப கஷ்டமா இருந்தாலும், அதுதான் உண்மை!'' என்ற நகுலின் தோள் தட்டி அணைத்துக்கொள்கிறார் தினேஷ்.

படத்தின் அறிமுக இயக்குநர் ராம் பிரகாஷ், படத்தைப் பற்றி சின்ன இன்ட்ரோ கொடுத்தார். ''முன்னாடி இந்தக் கதையை நிறையப் பேர்கிட்ட சொல்லியிருக்கேன். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றவுடன், 'என் கேரக்டருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்?’ என்ற கேள்வியைத்தான் எல்லாரும் கேட்டாங்க. ஆனா நகுல், தினேஷ்... மத்தவங்க போர்ஷன் பத்தி எதுவுமே விசாரிச்சுக்காம நடிச்சுக் கொடுத்திருக்காங்க. இந்த மூட், படத்துக்கு பெரிய ப்ளஸ்!''

''ஓ.கே. இப்போ கொஞ்சம் பெர்சனல் பேசலாம். ரெண்டு பேரும் அவங்கவங்களுக்கு வந்த லவ் புரபோசல், நீங்க சொன்ன காதல்... எல்லாம் சொல்லுங்க!'' என்றதும், ''சீனியரே... நீங்க ஆரம்பிங்க!'' என்று சிரிக்கிறார் தினேஷ்.

''மும்பையில் பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சிட்டு நைன்த் படிக்க சென்னை வந்தேன். கோ-எட் ஸ்கூல். ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு.  அப்போ நான் ரொம்ப குண்டா இருப்பேன். பயங்கரமா வெட்கப்படுவேன். இப்ப நடிச்சிட்டு இருக்கிற ஒரு நடிகை அப்போ பக்கத்துல இன்னொரு ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தாங்க. கல்ச்சுரல்ஸ்ல பார்க்கிறது உண்டு. பார்த்த முதல் நாள்ல இருந்து காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா, அப்பவும் இப்பவும் அவங்ககிட்ட இதை சொன்னது இல்லை!'' என்று நகுல் நிறுத்த ''அது யார்னு எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க பிரதர்!'' என்று கண்ணடித்துவிட்டு தன் கதை சொல்கிறார் தினேஷ்.

''எனக்கு வந்தது கம்மி. நான் போய் சொன்னதுதான் அதிகம். ஸ்பென்சர்ல பார்த்த ஒரு பொண்ணை விரட்டி விரட்டிப் பின்னாடியே போயிட்டு இருந்தேன். அவங்களும் என்னைப் பார்த்துட்டாங்க. ஆள் இல்லாத ரோட்ல போறப்ப சட்டுனு திரும்பி, 'எனக்கு எங்கேஜ்மென்ட் ஆயிடுச்சு. நீங்க ரொம்ப லேட். ஆனா, என் கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரணும்’னு சொல்லிட்டு டாட்டா காட்டிட்டாங்க. இப்படி நிறைய சோகம் இருக்கு.

'குக்கூ’ல நடிக்கும்போது மாளவிகாகிட்ட நான் பேசுறதைப் பார்த்தா, ராஜுமுருகன் சார் ஓட்ட ஆரம்பிச்சிடுவார். 'டேய் அது குழந்தைடா. நீ பண்றது வன்கொடுமை. அவங்க அப்பா திருவனந்தபுரம் கோயில் நகைக்கே கணக்கு கேக்கிறவர். நீ செவ்வாப்பேட்டைல பிளாக்ல சரக்கு அடிக்கிறவன்’னு கலாய்ப்பார்!''

''இப்படி ஒரு கேரக்டர் பண்ணணும்னு நீங்க ஆசைப்படுற கேரக்டர் என்ன?''

''சிரிக்கக் கூடாது!'' என்று நிபந்தனை விதித்துவிட்டுச் சொல்கிறார் நகுல். ''நிறைய விஷயம் முயற்சி பண்ண ஆசை. உதாரணமா 'குருதிப்புனல்’, 'குணா’ கமல் சார், 'காக்க காக்க’ சூர்யா சார் மாதிரி எல்லாம்!''

''இவங்களோட நான் போட்டி போட முடியுமா? நான் ஸ்ட்ரெயிட்டா ஹாலிவுட்தான். 'டைட்டானிக்’ ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ படங்கள் எனக்குப் பிடிக்கும். 'ப்ளட் டைமண்ட்’, 'டிஜாங்கோ அன்செயின்ட்’, 'தி கிரேட் கேட்ஸ்பி’னு ஒவ்வொரு படமும் வித்தியாசப்படுத்துவார். அட்டகாசமான ஆக்டர்!'' - இது தினேஷ்

”பார்ட்டியில பச்சப்புள்ள!”

''சரி... எந்த ஹீரோயின்கூட நடிக்க ஆசை?''

சட்டென, ''நயன்தாரா'' என்கிறார் நகுல். ''நான் அவங்க ஃபேன். சான்ஸ் கிடைச்சா நிச்சயம் நடிப்பேன்'' என்கிறார்.

''இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேணாம்னு நினைக்கிறேன். தீபிகா படுகோன், பரினிதி சோப்ரானு பல தடவை சொல்லிட்டேன். ஆனா, எதுவும் நடக்கலை. அப்புறம் எதுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டு!'' என்று விரக்தியாகச் சிரிக்கிறார் தினேஷ்.

''விடிய விடிய ஆட்டம், விடிந்த பிறகும் கொண்டாட்டம்... பார்ட்டில உங்க லிமிட் என்ன..?''

பதறுகிறார் தினேஷ். ''இதுவரைக்கும் பார்ட்டினு எங்கேயும் போனதே இல்லை. அந்த அட்மாஸ்பியர் எப்படி இருக்கும்னுகூட எனக்குத் தெரியாது. இப்ப ஏதோ பார்ட்டிக்கு ஹயாத் ஹோட்டல்தான் ஃபேமஸ்னு சொல்றாங்க. அங்க வீக் எண்ட்னா பயங்கரமா இருக்குமாம்ல? ஆமாவா நகுல்?'' என்று அவர் நகுலைச் சிக்கவைக்க, ''எனக்கு எப்படிங்க அந்த விஷயம்லாம் தெரியும்? நானும் பார்ட்டி விஷயத்தில் பச்சப்புள்ளைதான்'' என்று சிரிக்கிறார் நகுல்.