Published:Updated:

“‘காடு’னா ஃபாரஸ்ட்... ‘வெட்டி’னா கட் தானே..?”

நா.சிபிச்சக்கரவர்த்தி

நீங்க என்ன கேள்வி வேணும்னாலும் கேளுங்க. பதில் சொல்லிடலாம். ஆனா, அதுக்கு முன்னாடி நான் ஒரு செய்தி சொல்லிக்கிறேன். இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள். நாங்கள் மீண்டு எழுவோம். ம்ம்ம்... ஆரம்பிங்க!'' - நிதானமாகக் கேள்விகளை எதிர்கொண்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்.

''தெரிஞ்ச கேள்விக்குப் பதில் சொல்றேன். தெரியாத கேள்விக்குப் பதில் தெரிஞ்சுக்கிறேன்!'' - ஆர்வமாகத் தயாரானார் எழுத்தாளர்        ஜோ டி குருஸ்.

“‘காடு’னா ஃபாரஸ்ட்... ‘வெட்டி’னா கட் தானே..?”

''அடுத்த பட ஸ்க்ரிப்ட் வேலையில் இருக்கேன். ஸ்க்ரீன்ப்ளேவில் ஒரு சின்ன ட்விஸ்ட் சிக்க மாட்டேங்குது. நீங்க கேக்கிற கேள்வி மூலமா எதுனா ஸ்பார்க் ஆகுதானு பார்க்கலாம்!'' - ரிலாக்ஸ் தருணத்திலும் அலெர்ட் ஆக இருந்தார் 'மூடர்கூடம்’ இயக்குநர் நவீன்.

''இதுலாம் போங்கு... என்கிட்ட ஜி.கே. கேள்வி கேட்டா எதுக்குமே பதில் தெரியாதுனு சின்னக் குழந்தைக்குக்கூட தெரியும். வேணும்னா அஞ்சு கேள்வில மூணு கேள்விக்குப் பதில் நான் கரெக்ட்டா சொன்னதா சொல்லிடுங்க. நான் ஆன்ஸர் பண்றேன்!'' - ரகசிய ஒப்பந்தமிட்டார் நடிகை ஓவியா.

''இந்தியாவின் அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் யார்?''

பதில்: நரேந்திர மோடி.

டி.கே.ரங்கராஜன்: ''இந்தக் கேள்விக்கு நான் கடைசியா பதில் சொல்றேன். அடுத்த கேள்வியைக் கேளுங்க தம்பி!'' (ஐயா... உடனே பதில் சொல்லணும். யார்கிட்டயும் கேட்டு சொல்லக் கூடாது!) ''தம்பி உன்கூட பேசிட்டே யோசிப்பேனப்பா. இப்பதானே அமைச்சரவை அமைச்சிருக்காங்க. அதனால சட்டுனு ஞாபகம் வரலை. ஞாபகம் வந்ததும் சொல்லிடுறேன். அடுத்து கேளுங்க!''

ஜோ டி குருஸ்: கேள்வியைக் கேட்டவுடன் சத்தம் போட்டுச் சிரித்தவர், ''தெரியலையேப்பா..! இப்பத்தானே பதவி ஏத்துருக்காங்க. போகப்போகத்தான் ஏதாச்சும் பரபரப்புப் பண்ணி மனசுல பதிவாங்க!''

நவீன்: ''ஸ்கூல் படிப்பு முடிக்கும்போது 'இனிமே யாரும் நம்மளைக் கேள்வி கேட்க மாட்டாங்க!’னு சந்தோஷப்பட்டவன் நான். அப்படிப்பட்ட ஒருத்தனைத் தேடிப் பிடிச்சுக் கேள்வி கேட்கிறீங்களே பாஸ்! இதுக்கு எவ்வளவுதான் பதில் யோசிச்சாலும் தெரியாது. அதனால நீங்களே பதில் சொல்லிடுங்க!''

ஓவியா: ''ஸ்பேஸ் அண்ட் அட்டாமிக் எனர்ஜி மினிஸ்டரா? நான் நேஷனல் நியூஸ்லாம் பார்க்கிறதே இல்லையே! கேரளா பாலிட்டிக்ஸ் பத்தி கேட்டா கரெக்ட்டா சொல்லிடுவேன்!''

“‘காடு’னா ஃபாரஸ்ட்... ‘வெட்டி’னா கட் தானே..?”

''பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 'காடுவெட்டி’ குரு பெயரில் உள்ள 'காடுவெட்டி’ எதைக் குறிக்கும்?''

பதில்: 'காடுவெட்டி’ என்பது அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர். குருவின் சொந்த ஊர்.

டி.கே.ரங்கராஜன்: ''காடுவெட்டி என்பது ஜெயங்கொண்டம் அருகில் இருக்கும் ஒரு கிராமம். குருவின் சொந்த கிராமம்!''

ஜோ டி குருஸ்: '''காடுவெட்டி’ குருல 'காடுவெட்டி’க்குத் தனி அர்த்தம் இருக்கா?'' - யோசிக்கிறார். '' 'காடுவெட்டி’னு குடும்பப் பெயர் இருக்க சான்ஸே இல்லை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சில இடங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மரத்தை எல்லாம் வெட்டுனாங்கனு அரெஸ்ட் பண்ணாங்களே! அதனால 'காடுவெட்டி’னு பேரு வைச்சிருப்பாங்களோ? தெரியலையே!'' பதிலைச் சொன்னதும் பதறிச் சிரிக்கிறார். ''அச்சச்சோ... ஊர் பேர்னு தெரியாம ஏடாகூடமா யோசிச்சிட்டேனே!''

நவீன்: ''காடுவெட்டி... காடுவெட்டி... காடுவெட்டி. ம்ம்ம்... ஊர் பேரா? தேனி பக்கத்துல இருக்கா?'' என்று மேலும் யோசித்தவர் சட்டென சுதாரித்து, ''ஏங்க வம்புல இழுத்துக் கோத்துவிடுறீங்க?'' என்று சிரிக்கிறார்.

ஓவியா: ''காடுவேட்டியா? (அடியாத்தீ..!) 'காடு’னா ஃபாரஸ்ட். வெட்டினா கட் பண்றதா? அப்ப ஃபாரஸ்ட்டை கட் பண்றது. குருன்னா 'கடவுள்’னு சொல்வாங்க. அப்போ என்ன வரும்... அடப்போங்க! எனக்குத் தெரியலை. ஆனா, நம்ம டீலிங்படி இதுக்கு நான் பதில் சொன்னதா போட்ரணும். ஓ.கே-வா!''

''விடுதலைப்புலிகளை 'எலிகள்’ என்றும், தமிழ்த் தேசியவாதிகளைப் 'பொறுக்கிகள்’ என்றும்

“‘காடு’னா ஃபாரஸ்ட்... ‘வெட்டி’னா கட் தானே..?”

விமர்சித்த அரசியல்வாதி யார்?''

பதில்: சுப்பிரமணியன் சுவாமி.

டி.கே.ரங்கராஜன்: ''இப்படிலாம் யாரு சொல்லியிருப்பாங்க..? ஈ.வி.கே.எஸ். இளங்கோவனா? இல்லை... ஞானதேசிகனா? ரெண்டு பேரும் இல்லையா? தெரியலையே தம்பி!'' பதிலைக் கேட்டதும், ''ஓ... சுப்பிரமணியன் சுவாமியா? அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!?''

ஜோ டி குருஸ்: ''சுனா சானா'' என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரிக்கிறார். ''நான் சொன்னதா 'சுனா சானா’னே போடுங்க!''

நவீன்: ''இந்த மாதிரிக் கேவலமா சொல்றதுன்னா, சுப்பிரமணியன் சுவாமியாத்தான் இருக்கும்!''

ஓவியா: ''எலிகள்னா ரேட். புலிகள்னா டைகர். டைகரை ஏன் ரேட்னு சொல்லணும்?'' யோசிக்கிறார்... ''தெரியலைங்க... ஆன்ஸர் என்ன? என்ன சுவாமி..? சரி... ஏதோ ஒரு சுவாமி... அந்தப் பேரை நான் கரெக்ட்டா சொன்ன மாதிரி எழுதிக்கங்க... சரியா?''

''60 ஆண்டுகளாக இந்தியச் சாலைகளில் கோலோச்சிய, இந்தியாவிலேயே தயாரான ஒரு காரின் உற்பத்தி சமீபத்தில் நிறுத்தப்பட்டது. அது எந்தக் கார்?''

பதில்: அம்பாசடர்.

டி.கே.ரங்கராஜன்: ''அம்பாசடர்..! ஆங் தம்பி... பிடிச்சிட்டேன். அணுசக்தி மற்றும் விண் வெளித் துறை அமைச்சர் பிரதம மந்திரி மோடி. சரியா?'' சிரிக்கிறார்.

ஜோ டி குருஸ்: கேள்வியை முடிக்கும் முன்னரே, ''அம்பாசடர் கார்தானே!'' என்று சொல்லிவிட்டு மீண்டும் தொடர்கிறார். ''ஒரு காலத்துல அம்பாசடர் காரை தொட்டுப் பார்க்கிறதே பெரிய விஷயம். அதிசயமா ஒரு காரைப் பார்த்துட்டா, தொட்டுத் தடவிக் கொடுத்திருக்கேன். ஹ்ம்ம்... அதெல்லாம் பசுமையான நினைவுகள்!''

நவீன்: ''60 வருஷமா ஓடின காரா? அம்பாசடரா இருக்காது! 60 வருஷம்...

60 வருஷம்... 60 வருஷம்... இந்தியாவில் தயாராகும் காரா? ம்ம்ம்... அம்பாசடர்தானா?'' - சின்ன தயக்கத்துடன் கேட்கிறார். 'சரி’ என்றதும் ''அம்பாசடர் கார் தயாரிக்க ஆரம்பிச்சு,       60 வருஷங்கள் ஆகுதா!?'' என்று ஆச்சர்யப்படுகிறார்.

ஓவியா: ''எனக்குப் பதில் தெரியுமே... அம்பாசடர். கரெக்ட். இன்னும் ஒரு கேள்வி இருக்கா? அப்போ நம்ம டீல்படி அந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியலைன்னாலும், நான் சரியா சொன்னதா போட்ருங்க. அப்போ நாலு கொஸ்டீன் நான் சரியா சொல்லிட்டேன். ஐ... ஜாலி!''

''நடிகை த்ரிஷா, சமீபத்தில் எத்தனையாவது பிறந்த நாளை கொண்டாடினார்?''

பதில்: 31-வது பிறந்தநாள்.

“‘காடு’னா ஃபாரஸ்ட்... ‘வெட்டி’னா கட் தானே..?”

டி.கே.ரங்கராஜன்: சிரிக்கிறார்... ''ரிஷா யாரு? (ஐயா... த்ரிஷா!) ஓ.கே. த்ரிஷா யாரு? நடிகையா? என் பிறந்த நாளே எனக்குத் தெரியாது. இதுல அந்தப் பொண்ணு. என்ன பேரு... த்ரீ ரோஸஸ். அவங்க பிறந்த நாள் எனக்கு எப்படித் தெரியும்? சரி, எது எப்படியோ... ரியாஷ் (ஐயா... த்ரிஷா... த்ரிஷா!) ஆங்... அவங்கதான் ரொம்ப வருஷம் நல்லா இருக்கட்டும்!''

ஜோ டி குருஸ்: வெகு நேரம் சிரித்தவர், ''நான் என்ன சொன்னாலும் தப்பாத்தான் இருக்கும். தெரியலைனு போட்டுக்கங்க. சரி... என்ன வயசு?'' என்று பதிலைத் தெரிந்துகொள்கிறார்.

நவீன்: ''த்ரிஷா பிறந்த நாள்லாம் எனக்கு எப்படிங்க தெரியும்? சரி, நீங்களே பதில் சொல்லுங்க. என்னது... 31 வயசா? நிஜமாவா? 'ஜோடி’ படத்துல சிம்ரனுக்கு ஃப்ரெண்டா நடிச்சிருப்பாங்க. அப்ப இருந்து பார்த்துட்டு இருக்கோம். ஹ்ம்ம்... காலம் ஓடுதுங்க!''

ஓவியா: ''இந்தக் கேள்விக்கு நான் சரியான பதில் சொன்னா, எதுவும் பிரச்னை ஆகிடாதே. வேணாங்க. எனக்குத் தெரியலைன்னே போட்டுக்கங்க. சும்மா சொல்லவா..? சரி, நீங்க கேட்கிறீங்களேனு சொல்றேன். 30..? ஓ... 31-தானா? சூப்பர். என்னது... என் வயசா? யார்கிட்டயும் சொல்லாதீங்க... 22.''