Published:Updated:

மரணத்தோடு விளையாடியவன்!

எஸ்.கலீல்ராஜா

ரெஸ்லிங் போட்டிகளைப் பார்த்திருக் கிறீர்களா? மாமிச மலை உடல்களோடு, வன்மம் நிறைந்த கண்களோடு முரட்டுத்தனமாக இருவர் மோதிக்கொள்ளும் போட்டி அது. கூடியிருக்கும் ரசிகர்கள், 'அவனைத் தூக்கிப் போட்டு மிதி’, 'ஏறி மிதிச்சு கழுத்தை உடை’ என்றெல்லாம் தங்கள் ஸ்டார்களுக்கு ஆதரவாக அலறுவார்கள். அத்தனை ரணகள போட்டி. அப்படிப்பட்ட போட்டியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இது...

கடந்த ஏப்ரலில், அமெரிக்காவில் நடந்த 'ரெஸ்லிங்மேனியா ட்ரிபிள் எக்ஸ்’ போட்டியில் தன் போட்டியாளரைப் பொளந்துவிட்டுப் பட்டத்தை வென்ற கையோடு ரெஸ்லிங் ரிங்கில் இருந்து இறங்குகிறார் டேனியல் பிரையன். அதுவரை அவ்வளவு ஆவேசமாக, ரௌத்ரமாக இருந்தவர், பார்வையாளர் வரிசையில் இருக்கும் ஒன்பது வயதுச் சிறுவனைப் பார்த்ததும் நெகிழ்ச்சியாகச் சிரிக்கிறார். அருகில் சென்று அவனை அணைத்துக்கொள்கிறார். டேனியல், சிறுவன் இருவருக்குமே கண்கள் கலங்குகின்றன.

மரணத்தோடு விளையாடியவன்!

இன்னொரு சம்பவம்..!

ரெஸ்லிங் அரங்கத்தில் இரண்டு ஸ்டார்கள் இருந்தாலே, கூட்டம் கும்மும். ஆனால், ரெஸ்லிங் போட்டியின் பிரபல நட்சத்திரங்கள் குவிந்திருக்கும் அந்த அரங்கத்தில் பார்வையாளர்களே இல்லை. டேனியல் நெகிழ்ச்சியான மனநிலையில் ரிங்குக்குள் நிற்கிறார். அவருக்கு அருகில் அதே சிறுவன். 116 கிலோ எடையுடன் 'டிரிபிள் ஹெச்’ எனும் வீரர் மேடையேறி வார்த்தைகளால் சிறுவனை வம்பிழுக்கிறார். 'அவனை அடிச்சு நொறுக்கு’ என்று அத்தனை நட்சத்திரங்களும் சிறுவனுக்கு ஆதரவாகக் கோஷம் போடுகிறார்கள். சிறுவன் தன் சக்திக்கேற்ப டிரிபிள் ஹெச்சைக் குத்துகிறான். டிரிபிள் ஹெச் எகிறிப்போய் விழுகிறார். அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள். சிறுவன் ஜெயித்ததாக நடுவர் தீர்ப்பு சொல்லும் வரை தரையிலேயே படுத்திருக்கும் 'ட்ரிபிள் ஹெச்’ அதன் பிறகு சந்தோஷமாக எழுந்துகொள்கிறார்.

அமெரிக்காவின் அத்தனை ரெஸ்லிங் நட்சத்திரங்களும் பாசத்துடன் உச்சரிக்கும் அந்தச்

மரணத்தோடு விளையாடியவன்!

சிறுவனின் பெயர்... கானர் மிக்காலே. யார் இந்தக் கானர்?

2005-ல் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்த கானர், ரெஸ்லிங் விளையாட்டின் தீவிர ரசிகன். 'ஒருநாள் நானும் ரெஸ்லிங் சாம்பியன் ஆவேன்’ என, தந்தை ஸ்டீவ்விடம் கூறியவன், ரெஸ்லிங் நட்சத்திரங்களைப் போல தனக்கும் ஒரு பட்டப்பெயர் வேண்டும் என்று முடிவு செய்து, ஏகப்பட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு 'தி கிரஷர்’ என்று பெயர் சூட்டிக்கொண்டான். அதற்கு, 'சின்னாபின்னம் ஆக்குபவன்’ என்று பொருள். ரெஸ்லிங் சூப்பர் ஸ்டார் டேனியலின் தீவிர அபிமானி கானர். அதனாலேயே டேனியலை எதிர்த்துப் போட்டியிடும் டிரிபிள் ஹெச்சை அவனுக்குப் பிடிக்காது. டேனியலுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பது கானரின் பெருங்கனவு. இந்த நிலையில், 'கானருக்கு மூளைப் புற்றுநோய் தாக்கியுள்ளது. அதிகபட்சம் மூன்று வருடங்கள்தான் உயிரோடு இருப்பான்’ என்கிறார்கள் மருத்துவர்கள்!

முடி கொட்டி, உடல் மெலிந்து சுருங்கத் தொடங்குகிறது கானருக்கு. டேனியலுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மகனின் கனவை நிறைவேற்ற, WWE அலுவலகத்தில் பழியாகக் கிடக்கிறார் கானரின் தந்தை ஸ்டீவ். ஒருகட்டத்தில் கானரைச் சந்தித்து அவனது அன்பில் நெகிழும் டேனியல், 'எனது மிகப் பெரிய, ஆனால் மிகச் சிறிய ஃபேன் இவன்தான்’ என்று அறிவித்து WWE குடும்பத்தில் ஒருவனாக அவனை இணைத்துக்கொள்கிறார். அதில் இருந்து அமெரிக்காவில் நடக்கும் அனைத்து ரெஸ்லிங் போட்டிகளிலும் கானருக்கு முதல் வரிசையில் இடம். கிட்டத்தட்ட அத்தனை ரெஸ்லிங் ஸ்டார்களும் கானருக்கு நண்பன் ஆகிறார்கள்.

இடையில் கானரின் உடல்நிலை மிக மோசம் ஆகிறது. அந்தச் சமயம், 'வரப்போகும் ரெஸ்லிங்மேனியாவில் நீங்கள் ஜெயித்து, ஹெவி வெயிட் சாம்பியன் ஆக வேண்டும். அதே ரெஸ்லிங் மேடையில் நான் டிரிபிள் ஹெச்சை அடித்து ஜெயிக்க வேண்டும்’ என்கிறான். தன் மாபெரும் ரசிகனின் கடைசிக் கனவை நிறைவேற்ற முடிவு செய்கிறார் டேனியல்.

மரணத்தோடு விளையாடியவன்!

ரெஸ்லிங்மேனியா இறுதிப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று, மேடையைவிட்டு கீழே வருகிறார் டேனியல். தன் வெற்றியால் பூரிப்பில் இருக்கும் கானரிடம், 'இந்தப் பட்டம் வாங்க நீதான் உதவி செய்தாய். நாம் தொடர்ந்து போராடுவோம்!’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழுது விடுகிறார். டிரிபிள் ஹெச்சுடன் போட்டியிட விரும்பிய கானரின் ஆசையையும் நிறைவேற்றுகிறார்.

முரட்டுக்குணம் நிரம்பிய ரெஸ்லிங் பிளேயர்களை அழ வைத்த கானர் மிக்கலேக், சில வாரங்களுக்கு முன் நிரந்தர உறக்கத்துக்குச் சென்றுவிட்டான்!

தன் ரசிகனுக்கான அஞ்சலியாக, கானருடன் தொடர்புடைய அனைவரின் பேட்டிகளையும் தொகுத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். 'கானர் தி கிரஷர்’ என்ற அந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் கண் கலங்காமல், மனம் நெகிழாமல் இருப்பது ரொம்பவே கஷ்டம்!

வீடியோ லிங்க்: www.youtube.com/watch?v=9RAhxhIHdpM