ம.கா.செந்தில்குமார்
சென்னை எம்.ஐ.டி-யில் பி.டெக் படிப்பு, அப்புறம் மாசம் 60 ஆயிரம் சம்பளத்தில் சாஃப்ட்வேர் வேலை. அதை விட்டுட்டு சினிமாவுக்குப் போறேன்னு சொன்னா, எந்த வீட்லதான் சம்மதிப்பாங்க? 'குறும்படம் எடுக்கிறானாம், டி.வி-யில வர்றானாம்’னு பயங்கரக் கோபம். ஆனா, நான் எடுத்த ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில அவங்க கோபத்தைக் குறைச்சிட்டே இருந்தது. அதுல ஹைலைட்டா இப்போ தேசிய விருது!'' - பூரிப்பாகப் பேசுகிறார் மெடோன் அஸ்வின்.
இவர் இயக்கிய 'தர்மம்’ குறும்படம், தேசிய விருதுப் பட்டியலில் திரைப்படம் அல்லாத பிரிவில் சிறப்பு விருது வென்றிருக்கிறது. பிச்சைக்காரன் வேடத்தில் பள்ளி மாறுவேடப் போட்டியில் கலந்துகொள்ளும் சிறுவன், போக்குவரத்துக் காவலனாக முதல் நாள் பணியில் சேரும் இளைஞன்... இருவரின் அனுபவங்களையும் ஏழு நிமிடங்களுக்குள் மிகக் குறைவான வசனங்களுடன் அழுத்தமாகப் பதிகிறது 'தர்மம்’.

''பெங்களூரு சாஃப்ட்வேர் வேலைக்கு நடுவில் 'ஃபிலிம் கேம்ப்’னு ஒரு இன்ஸ்டிட்யூட்டில் சினிமா பத்தி மூணு மாச கோர்ஸ் படிச்சேன். அந்த ஆர்வத்தோட 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். 'குரு’, 'உனக்காகவே பிறந்தேன்’, 'கறை’, 'வார்டு எண் 325’, 'இன்பாக்ஸ்’, 'தர்மம்’, 'தரமணியில் கரப்பான்பூச்சி’னு ஏழு குறும்படங்கள் இயக்கினேன்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் 'ஒரு இந்நாட்டு மன்னன்’ சிறுகதைதான் 'வார்டு எண் 325’. அது 'நாளைய இயக்குநர் சீஸன் 3’-யில் ஒட்டுமொத்த கதைகளில் சிறந்த கதைக்கான விருது ஜெயிச்சது. அந்த விருதை நாஞ்சில்நாடன் சார்கிட்ட கொடுத்தப்போ, 'கதை கெடாம நல்லாப் பண்ணியிருந்தீங்க’னு சொன்னது சந்தோஷம்.
'தரமணியில் கரப்பான்பூச்சி’ அதே பேரில் வந்த எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை. தவிர, 'இன்பாக்ஸ்’ யூ-டியூபில் வைரலாகப் பரவி, 23 லட்சம் பேர் பார்த்திருக்காங்க. இந்தப் படங்களுக்காக சாஃப்ட்வேர் வேலைக்கு நடுவில் சனி, ஞாயிறு விடுமுறை களில்தான் வேலை பார்த்தோம். ஏன்னா, பட செலவுக்குப் பணம் வேணுமே! நண்பர்களும் நிறைய உதவினாங்க.

'தர்மம்’ குறும்படம் ஒளிபரப்பான சீஸனுக்கு ஜட்ஜா வந்திருந்த பிரபு சாலமன் சார், 'நல்லாப் பண்ணி யிருக்க. உனக்கு சினிமா இயக்கும் ஆசை இருந்தா சொல்லு. அந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன். கதை சொல்லு’னு சொன்னார். ஆனா, உடனே படம் பண்ற அளவுக்கு எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் அவர்கிட்டயே உதவியாளரா சேர்ந்துட்டேன். 'கயல்’ படக் கதை விவாதம் தொடங்கி முதல் ஷெட்யூல் வரை ஒரு வருஷம் அவர்கூட இருந்தேன். அப்புறம், 'கதை ரெடி பண்ணலாம்னு இருக்கேன் சார்’னு சொன்னேன். 'நீ தயார் பண்ணிட்டு வா’னு சொல்லியிருக்கார். இதற்கு இடையில் 'தர்மம்’ மூலமா தேசிய விருது அங்கீகாரம்.
பாலுமகேந்திரா சாருக்கு 'தர்மம்’ ஸ்க்ரீன் பண்ணேன். 'நல்லா இருக்கு. 'தர்மம்’ அழகான தலைப்பு. ஆனா, அதை ஏன் இங்கிலீஷ் எழுத்துல டைட்டில்ல காமிக்கிற?’னு கேட்டார். உடனே தமிழ் எழுத்துல தலைப்பை மாத்திட்டேன். அவர்கூட இருந்த கொஞ்ச நேரத்துல அவ்வளவு விஷயம் கத்துக்கொடுத்தார்.
இப்போ ஒரு முழு சினிமாவுக்கான ஸ்க்ரிப்ட் தயாரிக்கும் பணியில் இருக்கேன். அதுவும் ரசிகர்களை ஈர்க்கணும்; கவரணும். அதுதான் இப்போ என் முனைப்பு; உழைப்பு!''
'தர்மம்’ குறும்படத்தின் யூ-டியூப் லிங்க்: http://www.youtube.com/watch?v=oPZTjdzS1-s