Published:Updated:

இது வங்கதேசத்து முள்ளிவாய்க்கால்!

எஸ்.கலீல் ராஜா, கே.கணேசன்

லகின் எந்தப் பகுதியிலும் சிறுபான்மையினராக இருக்கும் மக்கள் ஒடுக்கப்படுவதும், அதை எதிர்த்து அவர்கள் போராடுவதும், அந்தப் போராட்டம் அதிகாரவர்க்கத்தால் நசுக்கப்பட்டு ரத்த ஆறுக்கு நடுவே மக்கள் கண்ணீர் வழிய வெளியேறுவதும்தானே இதுவரை உலகம் பார்த்த வரலாறு. அப்படி ஒரு வரலாற்றை ரத்தமும் சதையுமாகப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் மிருத்யூஞ்செய் தேவ்ரட் (Mrityunjay Devvrat).

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையில், பாகிஸ்தானில் தங்கிய முஸ்லிம்கள் இரண்டு மொழி பேசுபவர்களாக இருந்தார்கள். உருது மொழி மற்றும் வங்க மொழி. முதலில் வெவ்வேறு மதத்தினரோடு மோதுவது, அடுத்து சொந்த மதத்துக்குள்ளேயே பாகுபாடு பார்த்து அடித்துக்கொள்வது... இதுதானே மனித இயல்பு. அப்படி வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கத் தொடங்குகிறார்கள் பாகிஸ்தானியர்கள்.

இது வங்கதேசத்து முள்ளிவாய்க்கால்!

அடக்குமுறைக்கு ஆளாகி, ஒருகட்டத்தில் தங்களுக்கு எனத் தனி நாடு வேண்டும் என்று வங்காள மொழி பேசுபவர்கள் போராடத் தொடங்கியபோது, அராஜக வன்முறையைக் கையில் எடுத்தது பாகிஸ்தான் ராணுவம். இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்களைக் கொத்துக்

இது வங்கதேசத்து முள்ளிவாய்க்கால்!

கொத்தாகக் கொன்று குவித்ததைப் போல, அன்று கொலைவெறித் தாண்டவம் ஆடியது பாகிஸ்தான் ராணுவம்.

முகாம்களிலும் வெளியிலுமாக நான்கு லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள்.   30 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். நான்கு லட்சம் மக்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாமல் காணாமல்போனார்கள். பல லட்சம் மக்கள், சொந்த வீடுகளையும் நிலங்களையும் விட்டுவிட்டு, உயிர் பிழைக்க எங்கெங்கோ தப்பி ஓடினார்கள். இந்தக் கொடூர வேட்டையை அரங்கேற்றியது எப்படி, அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதற்கான விடையை நோக்கிப் பயணிக்கிறது  'சில்ரன் ஆஃப் வார்’ திரைப்படம்.  

அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, வங்கதேசப் பிரிவினைக்கு ஏன் ஆதரவு அளித்தார்? இந்திய விடுதலையின்போது கிழக்கு பாகிஸ்தானாகப் பிரிந்த நாடு, அடுத்த கால் நூற்றாண்டுக்குள் இன்னொரு நாடாகப் பிரிய வேண்டிய அவசியம் என்ன? ஒரே நாடு, ஒரே மதமாக இருந்தாலும் மொழி இனக்குழுக்களாகப் பிரிந்து போகவேண்டிய கட்டாயம் என்ன? எது அவர்களைப் பிரிக்கிறது... எனப் பல கேள்விகளுடன் ஆரம்பிக்கும் படம், இறுதியில் எல்லாக் கேள்விகளுக்குமான பதில்களோடு முடிகிறது.

வங்கதேசத்தை ஆதரிக்கும் இளம் பத்திரிகையாளன், அவனிடம் இருந்து பிரிக்கப்பட்டு ராணுவ வதைமுகாமில் பலரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அவனுடைய மனைவி, போராட்டத்தை அடக்கி ஒடுக்க பாகிஸ்தானில் இருந்து அனுப்பிவைக்கப்படும் மொழிவன்மமும், வன்முறை வியூகமும் மட்டுமே தெரிந்த ஒரு ராணுவ அதிகாரி, போரால் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரை இழந்து 'பாகிஸ்தானும் வேண்டாம் பங்களாதேஷ§ம் வேண்டாம்’ என இந்திய எல்லையைத் தேடி அலையும் அக்கா-தம்பி... என சிலரின் பார்வையில் நகர்கிறது கதை.  

இது வங்கதேசத்து முள்ளிவாய்க்கால்!

காடு வழியே அலைந்து திரிந்து பழைய சோற்றைப் பார்த்ததுமே கண்களில் மகிழ்ச்சி பொங்க அதைச் சாப்பிடும் அக்கா, இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் சென்று ஒவ்வொருவருக்கும் 'குதாஃபிஷ்’ என்று வாழ்த்துச் சொல்லி, அவர்களின் பெயர்களைப் படித்து வங்க மொழியைக் கற்றுக்கொள்ளும் மூன்று வயது சிறுமி, தன் அக்காவின் உயிருக்கு ஆபத்து என்று தெரியும்போது ஆயுதம் எடுக்கும் ஆக்ரோஷத் தம்பி, முகாமில் இருந்து ஆயுதங்களைக் கடத்திக் கொண்டுபோய் வங்கப் போராளிகளுக்கு உதவி செய்து உயிரை விடும் பாதிக்கப்பட்ட பெண், துப்பாக்கியை தன் செல்லம் எனக் கொஞ்சி கொலைகள் செய்யும் பாகிஸ்தானைச் சேர்ந்த கொடூரமான ராணுவ அதிகாரி... என, படத்தில் விதவிதமான மனிதர்களை, மனநிலைகளை அடுக்கடுக்காகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

பக்கவாட்டுச் சுவர்களில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிய, வெறித்துப் பார்த்தபடி மரணித்துக்கிடக்கும் மக்களையும், அவர்களுக்குப் பக்கத்திலேயே ரத்தப் பிசுபிசுப்போடு என்ன செய்வது என்று தெரியாமல் அழும் குழந்தைகளும், பகீர் பதற்ற நிமிடங்கள்!

தேடிவரும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் குழந்தை அழுது, காட்டிக்கொடுத்துவிடுமே என்று ஒருவர் அதன் வாயைப் பொத்த, மூச்சுத்திணறி குழந்தை இறக்கிறது. எங்கே அழுதால் தன் உயிரும் போய்விடுமே என்று சேலையை வாயில் பொத்திக்கொண்டு ஒரு தாய் ரகசியமாக விம்மியபடி அழும் காட்சி கலங்கடிக்கிறது.

கூப்பிடும் தூரத்தில் இந்திய எல்லையைப் பார்க்கும் அக்கா-தம்பியைப் பார்த்துவிடும் பாகிஸ்தான் வீரர்கள், வதைமுகாமில் இருக்கும் மனைவியைத் தேடிவரும் பத்திரிகையாளன், அவளை நிறைமாதக் கர்ப்பிணியாகப் பார்த்து திகைத்து நிற்பது... என, படத்தில் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் ஏராளம்.

இத்தனை ரண உணர்வுகளையும் காட்சிப்படுத்த, இயக்குநர் பட்ட பாடு தனி சினிமா. ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள், அகதிகள், உறவினர்களை இழந்த வங்க தேசத்தவர்களைச் சந்தித்து இந்தக் கதையை எழுதிய தேவ்ரட், அதைப் படமாக எடுப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டார். வங்கதேசம், வட கிழக்கு மாநிலங்களில் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு கிளம்ப, வங்கதேசத்தைப் போலவே நில அமைப்புகொண்ட ஹரியானாவில் முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடித்திருக்கிறார் அவர்.  

போர்க் காலங்களில் ராணுவ வதை முகாம்களில் பாலியல் வன்கொடுமைகளுக்குப் பெண்கள் ஆளாகி, அதன் மூலம் பிறந்த, தந்தை யாரென்று தெரிய இயலாத குழந்தைகள் எனப்

இது வங்கதேசத்து முள்ளிவாய்க்கால்!

பொருள்படும் வகையில் 'தி பாஸ்டர்ட் சைல்ட்’ (The Bastard Child) என்றுதான் படத்துக்குப் பெயர் வைத்திருந்தார் தேவ்ரட். ஆனால், பெயரை மாற்றச் சொல்லி சென்சார் போர்டு உத்தரவிட, 'சில்ரன் ஆஃப் வார்’ என்று உருமாறி, கடந்த வாரம் வெளியானது படம்.

ஊடகங்களின் வெளிச்சம் இந்தப் படத்தின் மீது படாததால், படம் பற்றிய விவாதம்கூட வெளிவரவில்லை. அதுவும்போக,  'சென்சிட்டிவ் பிரச்னை’ என்று கருதியோ என்னவோ, வெளியான ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து படத்தையே காலிசெய்துவிட்டார்கள்.  

40 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. ஆனால், படத்தைப் பார்க்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் நடந்த முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் நினைவில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு மார்ச்சில் ஆரம்பித்து டிசம்பர் வரை ஒன்பது மாதங்களாக நடைபெற்ற இனப்படுகொலைக்கு, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து 2009-ல்தான் போர்க் குற்ற விசாரணையையே அறிவித்திருக்கிறார்கள்.

நான்கு முழு ஆண்டுகள் நடந்து முடிந்த ஈழ இனப்படுகொலையின் தீர்வுக்கு, இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ?