சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ரித்திகாவுக்கு புரபோஸ் பண்ணது யாரு?

அசோக் செல்வன், ரித்திகா சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
அசோக் செல்வன், ரித்திகா சிங்

“முதல்படம் ஹிட்டாகிருச்சு. இனிமே அடுத்து பெரிய பெரிய ஹீரோ பெரிய பெரிய படம்னு போய்ருவீங்க.

2020-ல் கோலிவுட் நமக்குக் கொடுத்த முதல் இம்ப்ரஸிவ் சர்ப்ரைஸ் ‘ஓ மை கடவுளே.’ ‘இருக்கிற வாழ்க்கையை இன்பமா அனுபவியுங்க’ என்ற விஷயத்தைக் காதல் ததும்ப, காமெடி அதிர, ஃபேன்டஸி மின்னச் சொல்லிப் புன்னகைக்கும் இப்படத்தின் தூண்கள் சிலரைச் சந்தித்தோம்.

“த்ரில்லர் ஜானர் படங்களை ஒரு முறை பார்த்துட்டோம்னா திரும்பப் பார்க்குறதுக்கு அதிக வாய்ப்பில்ல. காரணம், அடுத்து இதுதான் நடக்கும்னு நமக்குத் தெரிஞ்சிடும். ஆனா ரோம் - காம் ஜானர்ல அப்படிக் கிடையாது. ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் நமக்குள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால இந்த ஜானருக்கு அழிவே கிடையாது” என்றபடி உரையாடலை ஆரம்பித்தார், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.

“முதல்படம் ஹிட்டாகிருச்சு. இனிமே அடுத்து பெரிய பெரிய ஹீரோ பெரிய பெரிய படம்னு போய்ருவீங்க. படம் பார்த்துட்டு எந்தெந்த நடிகரெல்லாம் போன் பண்ணுனாங்க?” என்றதற்கு, “திரும்பத்திரும்ப இவன்தான் எனக்கு போன் பண்றான்” என்று அசோக் செல்வனைக் கைகாட்ட, அவர் தொடர்ந்தார், “நாளைய இயக்குநர் டைம்லேருந்து எங்களுக்குள்ள ஒரு எழுதப்படாத அக்ரிமென்ட் இருந்தது. அவன் படம் பண்ணுனா நான்தான் நடிப்பேன்னு” என்றார்.

`ஓ மை கடவுளே’ டீம்
`ஓ மை கடவுளே’ டீம்

“நான் அசோக்கை வெச்சுப் பண்ணுன ‘75%’ங்கிற ஷார்ட் பிலிம் அவங்க வீட்ல எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். ‘படம் எடுக்கணும்னு ஆசைப்பட்டா மட்டும் போதாது மச்சான். அதுக்கான உழைப்பை நாமதான் பண்ணணும். நானே பண்றேன்’னு அந்த ஷார்ட் பிலிம் முடியும். என்ன நினைச்சுச் சொன்னான்னு தெரியல. இப்போ என்னோட முதல் படத்துக்கு அவன்தான் புரொட்யூசர்” என்றதும் அசோக் கண்களில் அவ்வளவு ஆனந்தம்.

இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், “இந்தப் படம் என் பர்சனல் வாழ்க்கையை கனெக்ட் பண்ணுச்சு. ஸ்கூல் டைம்ல நானும் இன்னொரு பொண்ணும் ஃபிரண்ட்ஸா இருந்தோம். திடீர்னு அவங்க எனக்கு ப்ரொப்போஸ் பண்ணிட்டாங்க. படத்துல வர்ற மாதிரி உன்னை ஃபிரண்டாதான் பார்த்தேன். அப்படிப் பார்த்ததில்லைன்னு சொல்லிட்டேன்” என்றார். ‘`ஹே எனக்கும் இது மாதிரி ஒரு ஸ்டோரி இருக்கு’’ என்று ஆரம்பித்த ரித்திகா சிங், “நானும் ஒரு பையனும் பாக்ஸிங் டிரெயினிங் பார்ட்னர். ஒருமுறை மஹாராஷ்டிராவுக்கு நேஷனல் லெவல் சாம்பியன்ஷிப்க்குப் போயிருந்தோம். அடுத்த மேட்சுக்கு ரெடியாகிட்டு இருந்தேன். திரும்பிப் பார்த்தா, முட்டிபோட்டு ‘ஐ லவ் யூ ரித்து’ன்னு சொன்னான். அவனும் நானும் ஃபிரண்ட்ஸ். லியோன் சொன்ன மாதிரிதான் நானும் சொன்னேன்” என்றார்.

“மீடியாவுல ஒருத்தர் இன்டர்வெல்ல எனக்கு கால் பண்ணி, ‘இந்தப் படம் எனக்கு ரொம்ப கனெக்டாகுது. நானும் டைவர்ஸ் பண்ற ஜோன்லதான் இருக்கேன்’னு சொன்னார். ‘படம் முழுசா பார்த்துட்டுச் சொல்லுங்க சார்’னு சொன்னேன். அப்புறம் கால் பண்ணி, ‘பிரதர் நான் ஏதோ தப்பு பண்றேன்னு நினைக்கிறேன். கொஞ்சம் டைம் எடுத்துக்கணும்’னு சொன்னார். இந்த மனநிலையை மாத்தினதுதான் இந்தப் படத்துக்கான வெற்றின்னு நினைக்கிறேன். ‘ஒரு வேளை அவசரப்பட்டிருக்கக்கூடாதோ?’, ‘கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டு நிதானமா இருந்தா சரி பண்ணிடலாமோ’ன்னு யோசனை வந்தாலே பாதி விவாகரத்துகள் நடக்காது. அதே சமயம் விவாகரத்தைத் தப்பும் சொல்லலை. அதுவும் அவசியம்” என்றவரிடம் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரமேஷ் திலக் என்ற ‘சூது கவ்வும்’ கனெக்ட் பத்திக் கேட்டோம்.

`ஓ மை கடவுளே’ டீம்
`ஓ மை கடவுளே’ டீம்

“ரமேஷ் திலக் கேரக்டருக்கு வேற ஒரு நடிகரை நடிக்க வைக்கத்தான் பிளான் பண்ணினோம். ஆனா, ஷூட்டிங்குக்கு முதல் நாள் வரை வெயிட் பண்ணிப் பார்த்தோம். அவர் கால்ஷீட் கிடைக்கலை. சரினு ரமேஷ் திலக்கிட்ட அசோக் பேசினான். ‘உனக்காகப் பண்றேன்டா’ன்னு சொல்லி மறுநாள் ஸ்பாட்டுக்கு வந்தார். படத்துல இவன் லைஃப் நல்லாருக்கணும்னு விஜய் சேதுபதியும் ரமேஷ் திலக்கும் ஆசைப்படுறாங்க. அதே மாதிரிதான் நிஜ வாழ்க்கையிலும்” என்றதும் அசோக் செல்வன் ‘இந்தப் படம் மூலமா சேது அண்ணா உண்மையாவே எனக்கு செகண்ட் சான்ஸுக்கு டிக்கெட் கொடுத்திருக்கார்” என்று நெகிழ்ந்தார்.

“வாணியும் நானும் அவ்ளோ க்ளோஸாகிட்டோம். மேடி சார் டிரெய்லர் பார்த்துட்டு, ‘இறுதிச்சுற்று முடிச்ச பிறகு இந்த மாதிரி படத்துல நடிக்கணும்னு நினைச்சேன். ஏன்னா, மக்கள் நீ ஸ்போர்ட்ஸ் படங்கள்ல மட்டுதான் நடிப்பன்னு நினைச்சுடக்கூடாது. இவங்க உன்னை இதுல நடிக்க வெச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷம். ஆல் தி பெஸ்ட்’னு சொன்னார்” என்று மகிழ்ந்தார் ரித்திகா. படத்தில் ‘நூடுல்ஸ் மண்ட’ என்று ரித்திகாவைச் செல்லமாக அழைப்பார்கள். அதனால, ஒவ்வொருவரின் செல்லப் பெயரையும் கேட்டறிந்தோம். “ஃபிரண்ட்ஸ் எல்லாம் `ரித்து’ன்னு கூப்பிடுவாங்க. இவங்க எல்லோரும் ‘நூடுல்ஸ் மண்ட’யைச் சுருக்கி ‘நூமா’ன்னு கூப்பிடுறாங்க. இதுவும் நல்லாருக்கு” என்றார் நூமா ஸாரி... ரித்திகா. ‘ஷோக்கி’, ‘இப்பி’, ‘லீ’ என அசோக் செல்வன், அஷ்வத், லியோன் மூவரும் அடுத்தடுத்து அவர்களின் செல்லப் பெயர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

“காலேஜ் வரைக்கும் எனக்கு என் முடியை எப்படி ஹேண்டில் பண்றதுன்னே தெரியாது. தலையைக் கீழே குனிஞ்சு அயர்ன் பாக்ஸ் வெச்சு எல்லாம் தேச்சிருக்கேன். என்ன பண்ணுனாலும் அந்தச் சுருள் போகலை. நிறைய யூ ட்யூப்ல வீடியோவெல்லாம் பார்த்து சரி பண்ண முயற்சி பண்ணியிருக்கேன். சினிமாவுக்கு வந்த பிறகுதான், இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு கொஞ்சம் தெரியுது. பாலிவுட்ல இருக்கிற பல பேர் என்கிட்ட, ‘இங்க வேலை செய்யணும்னா முதல்ல உன் ஹேர் ஸ்டைலை மாத்தணும்னு சொன்னாங்க. ‘இதுதான் நான். கேரக்டருக்குத் தேவைப்பட்டா விக் வெச்சுப்பேனே தவிர, இதை மாத்த மாட்டேன்’னு சொல்லிட்டேன்” என்றதும் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். விரைவில் ‘ஓ மை கடவுளே’ தெலுங்கில் ரீமேக்காக இருக்கு என்று இயக்குநர் சொன்னதும், “அப்போ டைட்டில் என்ன ‘ஓ மை தேவுடா’வா என்று கவுன்டர் கொடுக்க, அந்த இடத்தின் கலகலப்பை சொன்னால் புரியாது.