சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

காட்சிமொழி பேசிய அருண்மொழி!

இயக்குநர் அருண்மொழி.
பிரீமியம் ஸ்டோரி
News
இயக்குநர் அருண்மொழி.

மாற்று சினிமா, குறும்படங்கள், ஆவணப்படங்கள் பற்றியெல்லாம் தமிழகத்தில் அவ்வளவாகப் பேசப்படாத காலங்களில் இவற்றுக்காகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தவர் இயக்குநர் அருண்மொழி.

சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜப்பான் திரைப்பட விழாவில் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நவம்பர் 9 அன்று அருண்மொழி சிவப்பிரகாசம் இறந்துபோனார். எதை நேசித்தாரோ அதில் தோய்ந்தபடியே தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டார்.

திரைப்படக் கல்லூரியில் பயின்று திரைப்பட இயக்குநரானவர் அருண்மொழி. தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படமான, ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் இணை தயாரிப்பாளராகவும், உதவி இயக்குராகவும் பணிபுரிந்தவர் அவர். 1986ஆம் ஆண்டு ‘காணிநிலம்’ திரைப்படத்தை இயக்கினார். தனது முதல் திரைப்படத்திலேயே பலரின் கவனம் ஈர்த்தார். ‘காணிநிலம்’ ஜெர்மன் முதலான பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. நாசரைக் கதாநாயகனாக வைத்து ‘ஏர்முனை’ திரைப்படத்தை இயக்கினார்.

திரைத்துறை மட்டுமன்றி நவீன நாடகங்கள், சிற்றிதழ், ஆவணப்படங்கள் எனப் பல தளங்களில் இயங்கினார். இவரும் நாடக இயக்குநர் பகுவின் குழுவும் இணைந்து நிகழ்த்திய ‘என் பெயர் காஞ்சரமரம்’ நவீன நாடகம் பலராலும் பாராட்டப்பெற்றது.

அருண்மொழி தனது ஜோல்னாப் பையில் எப்போதும் ‘ஹேண்டி கேம்’ ஒன்றை வைத்திருப்பார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்துள்ள பெரும் பண்ணையார்களின் நில அபகரிப்பை, துணிச்சலுடன் அணுகியது இவரது ‘நில மோசடி’ ஆவணப்படம். தாமிரபரணி மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலையை விசாரிக்க நியமிக்கப்பட்ட, நீதிபதி மோகன் ஆணையத்தின் விசாரணையில் உள்ள குளறுபடிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது அருண்மொழியின் ‘Beware of commissions’ ஆவணப்படம்.

காட்சிமொழி பேசிய அருண்மொழி!
காட்சிமொழி பேசிய அருண்மொழி!

கவிஞர் இன்குலாப், கோவை ஞானி, புரிசை கண்ணப்ப தம்பிரான் போன்ற ஆளுமைகளைப் பற்றிய இவருடைய ஆவணப்படங்கள் இலக்கிய உலகிற்கான மிக முக்கியமான பங்களிப்புகள்.

சமூகம் பேச மறந்த, பேசத் தயங்கிய பலவற்றைத் தனது தனித்துவமான திரைமொழியில் காட்சிப்படுத்தினார். மாதவிடாயைத் தீட்டு என்று ஒதுக்கிவைக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிரான குரல், இவருடைய ‘தோழி’ படம். தான் கற்ற கலைகள் தன்னோடு முடிந்துவிடக் கூடாது என எண்ணி ஸ்தானிஸ்லாவஸ்கி நாடகப்பள்ளியைத் தொடங்கினார்.

சென்னையில் நடக்கும் பெரும்பாலான பண்பாட்டு நிகழ்ச்சிகளில் அருண்மொழியைக் காணமுடியும். இனி அவர், மாற்று சினிமா வரலாற்றில் இருப்பார்.