
பெண் சுதந்திரம் என்றால் என்ன? பத்து வரிகளுக்கு மிகாமல் கதை அடித்து விட்டு, `ஆடை’ எனத் தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
‘பந்தயம் என்று வந்துவிட்டால் புடவை கட்டிக்கொண்டு செய்தி வாசிப்பதென்றாலும் சரி, ஆடையே இல்லாமல் செய்தி வாசிப்பதென்றாலும் சரி, எதற்கும் தயார்’ என தம்ஸ் அப் காட்டுபவர் சுதந்திரக்கொடி (எ) காமினி. தொலைக்காட்சி சேனல் ஒன்றில், ப்ராங்க் நிகழ்ச்சிகள் செய்துவருகிறார். ஒரு கொண்டாட்டப் பொழுதில் நடந்தது நினைவில்லை. மறுநாள் காலை கண் விழிக்கும் காமினி, உடன் யாருமின்றித் தன்னந் தனியாய், ஆடையின்றி இருப்பதை உணர்ந்து பதறிப் போகிறார். முந்தைய நாள் இரவு என்ன நடந்தது, எப்படி காமினி அங்கிருந்து வெளியேறினார் என்கிற வினாக்களுக்கு விடை சொல்கிறது `ஆடை.’

அசாத்திய தைரியம் ஒருபுறம், அட்டகாசமான நடிப்பு மறுபுறம், `ஆடை’யின் பொன் சரிகை அமலா பால்! ஒவ்வொரு இழையிலும் அவர் உழைப்பு தெரிகிறது. அராத்தான உடல்மொழி, அழகான முக பாவனைகளென முழுமையான நடிகையாகப் பரிணமித்திருக்கிறார். அமலாவின் நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, சரித்திரன், ரோகித் நந்தகுமார், கிஷோர் தேவ் மற்றும் ரம்யா ஆகியோரின் நடிப்பும் சிறப்பு. அமலா பாலின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி ஓரிரு காட்சிகளில் வந்தாலும், நிறைவு.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனின் கேமரா, அபாரமாய் உழைத்திருக்கிறது. நிர்வாணத்தை ஆபாசமின்றிக் காட்டியதில் அவருடைய உழைப்பு முக்கியமானது. சஃபீக் முகமது அலியின் படத்தொகுப்பு பரபரப்பைக் கூட்ட முயற்சி செய்திருக்கிறது. ப்ரதீப் குமார் மற்றும் ஊர்காவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் உணர்வை அற்புதமாகக் கடத்துகின்றன.
சொல்ல வந்த கருத்தில் தானும் குழம்பி, படத்தையும் குழப்பி, பார்வையாளர்களையும் குழம்பவைத்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். மார்பக வரியை எதிர்த்த நங்கேலியின் கதையைச் சொல்லிப் படத்தைத் தொடங்குகிறார்கள். “அன்னைக்கு உடம்ப மூடுறதுக்காகப் போராடுனோம். இன்னைக்கு உடம்பத் திறந்துகாட்டப் போராடுறீங்க” என இந்தக் காலத்து நங்கேலி கருத்து சொல்வதாகப் படம் முடிகிறது. இரண்டு போராட்டங் களுக்குமான அரசியல் பின்னணிகள், காரணங்கள் வெவ்வேறாக இருக்க எப்படி இரண்டையும் ஒப்பிட முடியும்? `மானம் என்பதே பெண் உடல்மீதான அதிகாரம் தான்’ எனும் பேச்சுகள் உருவாகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், `ஆடை’ சொல்லவரும் கருத்து நம்மைப் பின்னோக்கி இழுக்கிறதே.
கிடைத்த கேப்பில் எல்லாம் அடல்ட் காமெடிகளை அள்ளி எறிந்திருக்கிறார்கள். ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் வேறு. இயக்குநர் ப்ராங்க் நிகழ்ச்சிகள்மீது வைக்கும் விமர்சனங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே.

மேல்சட்டை தைக்க நினைத்து, தைத்து முடித்தபின் அளவு மாறிப்போனால் பரவாயில்லை. மேல்சட்டை, கால் சட்டையாய் மாறிப்போனால் என்ன செய்வது?!